வடுக்களும் தளிர்களும்

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022

அன்புள்ள ஜெ,

ஆனந்த்குமார் கவிதைகளைப் பற்றிய உங்கள் குறிப்புகளை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். அவருடைய தொகுப்பை இன்னும் வாங்கவில்லை. விருதுச்செய்திகளை பார்த்த பிறகு அவர் கவிதைகளை இணையத்தில் தேடிப்படித்தேன். மிக எளிமையானவை. ஆனால் மனதை மிக இயல்பாக ஆக்கி கற்பனையை தூண்டுவிடுபவை.

எல்லா இலையும்

உதிர்ந்த பின்னும்

மரம் எதை

உதறுகிறது?

அது

நினைத்து நினைத்து

சிலிர்க்கும் இடத்தில்தான்

மீண்டும் சரியாகத்

துளிர்க்கிறது

என்னும் வரி ஆச்சரியமான ஒன்று. இதிலுள்ள timelessness தான் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. காலம்கடந்தது என்று சொன்னால் இந்தக்கவிதை அப்படியே சங்கப்பாட்டில்கூட வைக்கலாம் இல்லையா? இதில் இரண்டு timeless அம்சங்கள் உள்ளன. இந்த இயற்கை வர்ணனை timeless ஆனது. அத்துடன் இது சொல்லும் ஓர் உணர்வு உள்ளது இல்லையா, அதுவும் timeless ஆனதுதான். இலைகளை உதிர்த்தபின்னரும் மரம் உதறிக்கொண்டே இருப்பது இழந்த இலைகளின் நினைவை. அதன்பின் நினைத்து நினைத்துச் சிலிர்ப்பது அந்நினைவுகளின் ஏக்கத்தை. அதை நினைத்து நினைத்துச் சிலிர்க்கும் இடங்களில்தான் அது மிகச்சரியாக பூக்கிறது.

நான் இந்தக் கவிதையை அப்படியே காட்சிப்படுத்திக்கொண்டே இருந்தேன். இந்த கோடையில்தான் நாம் மரங்கள் தளிர்ப்பதை அவ்வளவு தெளிவாக பார்ப்போம். மரம் தளிர்த்துக்கொண்டேதான் இருக்கும். ஆனால் கோடையில் தளிர்விடும் புங்கம் மாதிரியான மரங்களுக்குத்தான் ஒட்டுமொத்தமாக தளிர்விடும் தன்மை உண்டு. மற்ற மரங்கள் காய்ந்து நிற்பதனால் அது நம் கண்ணுக்கும் தெளிவாகத்தெரியும்.

புங்கமரம் தளிர்விட்டு தளிர் நமக்கு தெரிவதுக்கு 3 நாள் ஆகும். ஆனால் முதல் நாளிலேயே ஒரு மெல்லிய பச்சை fungi போல ஒரு பூச்சு கிளைகளின் முனைகளில் இருக்கும். அது ஒரு வகையான சிலிர்ப்பு என்று இந்தக் கவிதை சொல்கிறது. இழந்த இலைகளை நினைத்து உருவானது. அந்த இலைகளே திரும்ப தளிர்களாக வந்துவிடுகின்றன.

“உதிர்ந்த ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு வடுவாக எஞ்சுகிறது

வடுக்களுக்கு மேல் முளைக்கின்றன புதிய தளிர்கள்”

என்று ஒரு உருது கவிதை உண்டு. பெய்ஸ் அகமது பெய்ஸ் என நினைக்கிறேன். அந்த வரிகளை ஞாபகப்படுத்தியது இந்தக் கவிதை.  என் அனுபவங்களில் இருந்து இந்த உதிர்தலையும் முளைத்தலையும் உறவுகளாகவே புரிந்துகொள்கிறேன். உறவுகள் உதிவதும், எஞ்சுவதும், மீண்டும் முளைப்பதும்தான் வாழ்க்கை. வாழ்க்கை முழுக்க இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

நான் மொழிபெயர்த்த கவிதைகள் சிலவற்றை அனுப்பியிருக்கிறேன். நான் கவிதை எழுதுவதில்லை. ஆனால் கவிதை மொழிபெயர்ப்பதே எனக்கு கவிதை எழுதுவதற்குச் சமானமான மனநிலையை அளிக்கிறது.

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்

நன்று. உண்மையில் ஓவியங்களை நகல்செய்வது, பாடல்களுடன் சேர்ந்து பாடிக்கொள்வது போல கவிதைகளை மொழியாக்கம் செய்வதும் கவிதைகளை மிக ஆழமான அனுபவிக்க ஒரு சிறந்தவழி.

ஆனால் செப்பனிட்டுக்கொண்டும் இருக்கவேண்டும்

“உதிர்ந்த ஒவ்வொரு இலையும் வடு

மேலே முளைக்கின்றன புதிய தளிர்கள்”

என்று அந்த மொழியாக்கத்தை சுருக்கமாக அமைக்கையில் இன்னொரு ஆழம் நமக்கு அமைகிறது

ஜெ

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு


டிப் டிப் டிப் வாங்க

டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி

முந்தைய கட்டுரைபறவைக் கணக்கெடுப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைஉரையாடும் காந்தி, கடிதம்