நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். கவிஞர் ஆனந்த்குமார் எழுதிய டிப் டிப் டிப் கவிதைத்தொகுதி,   இளைய கவிஞர்களுக்குரிய குமரகுருபரன் விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மிகவும்  மகிழ்ச்சியடைந்தேன். ஏற்கனவே தளத்தில் அவருடைய ஒருசில கவிதைகளைப் படித்துவிட்டு, நான் பின்தொடர்ந்து வாசிக்கும் கவிஞர்கள் வரிசையில் அவரையும் சேர்த்துக்கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு அவர் கவிதைகள் வசீகரம் கொண்டவையாக இருந்தன. அவருடைய முதல் தொகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கவிதையில் ஒரு நீண்ட பயணத்தை அவரால் மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். அடுத்தடுத்த தொகுதிகள் அவரை இன்னும் உயரத்துக்குக் கொண்டு செல்லக்கூடும்.

இத்தொகுதியை  விருதுக்குரிய தொகுதியாக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் தேர்வுக்குழுவினருக்கும் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனந்த்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

பாவண்ணன்

****

அன்புள்ள ஜெ

ஆனந்த்குமார் கவிதைத்தொகுப்புக்கு வழங்கப்பட்ட குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது மிகப்பொருத்தமானது. அண்மையில் வந்த பல நல்ல தொகுப்புகளில் ஒன்று அது. அதில் ஒரு கள்ளமற்ற தன்மை உண்டு.

நான் இதைப்பற்றி நினைத்துக்கொள்வேன். எந்தக்கூட்டத்திலும் குழந்தைகளின் சத்தம் தனியாகக் கேட்டுவிடும். ஏனென்றால் குழந்தைகளின் குரல்களுக்கு ஃப்ரிக்வன்ஸி ஜாஸ்தி. அப்படி கேட்டாகவேண்டும் என்பது கடவுளின் ஆணை. அதேபோல இலக்கியத்தில் கள்ளமின்மையின் குரல் துலக்கமாக கேட்கும். எத்தனை அறிவுஜீவித்தனம் ஒலித்தாலும் கள்ளமற்ற குரல் தனியாக கேட்கும். ஆனந்த் குமாரின் கவிதைக்குரல் அப்படிப்பட்டது.

ராஜ் முகுந்தன்

***

அன்புள்ள ஜெ

ஒருவரிக்கவிதைகளாகவே எனக்கு கவிதைகள் நினைவில் இருக்கின்றன. முழுக்கவிதையும் நினைவில் இருப்பதில்லை. முழுக்கவிதை ஒரு ட்ரீட்மெண்ட். அது ஒரு இண்டெலக்சுவல் எக்ஸஸைஸ். ஒரு வரி என்பது ஒரு தெறிப்பு. “கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய் வேருறுவேன்’ என்று ஒரு வரியாக நான் திருவாசகப்பாட்டை ஞாபகம் வைத்திருக்கிறேன். அந்த மொத்தப்பாட்டுக்கு நேர் எதிரான அர்த்தம். மழைமேகம் போன்ற குளிர்ந்த கண்கள் கொண்ட பெண்களின் அருகே ஐம்புலன்களும் ஆற்றங்கரை மரம்போல வேர் கொள்கின்றன எனக்கு. அவ்வளவுதான் எனக்கு கவிதை. மாணிக்கவாசகர் விடுபட்டாலென்ன படாவிட்டாலென்ன?

ஆனந்த்குமாரின் ஒரு வரி

கடையிலிருந்து வீடுவரை

நீந்தி நீந்திதான் வந்ததிந்த

குட்டி மீன்

ஒரு சின்ன தொட்டிக்குள் நீந்திக்கொண்டே கடைவீதியிலும் பஸ்ஸிலும் பயணம் செய்யும் அந்தக் குட்டிமீன். அதுதான் எனக்கு கவிதை. நான் அந்த குட்டிமீன். அல்லது என் மனசு அது

ஆனந்த்குமாருக்கு வாழ்த்துக்கள்.

செ.சரவணன்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு


டிப் டிப் டிப் வாங்க

டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பகம் மேலும் நூல்கள்
அடுத்த கட்டுரைபெண்கள்,காதல்,கற்பனைகள்