அன்புள்ள ஜெ
மகாபாரத உலகில் சஞ்சரிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு மகாபாரதம் குறித்து எதுவும் தெரியாது. செவி வழி கூட மகாபாரதக் கதையை கேட்டதில்லை. நேரடியாக வெண்முரசுக்குள் நுழைவது சரிய, இல்லை அதற்கு முன் ஒரு மகாபாரத அறிமுக புத்தகம் படித்து விட்டு வெண்முரசுக்குள் நுழைவது சரியா? இந்த கேள்விக்கு நீங்கள் பலமுறை பதில் அளித்திருப்பீர்கள் என்று தெரியும். இருந்தாலும் நீங்கள் எனக்காகவே எழுதும் ஒரு வரி பதில் மகாபாரதம் என்ற மகா பிரபஞ்சத்தில் நுழைய தைரியமாக இருக்கும். நன்றி.
தருண் வாசுதேவ்
***
அன்புள்ள தருண்,
மகாபாரதத்தை வாசிக்க மிகச்சிறந்த வழியே வெண்முரசு போன்ற ஒரு பெருநாவலில் தொடங்குவதுதான். தமிழில் இன்று கிடைக்கும் எந்த நூலையும் விட அதுவே சிறந்த தொடக்கநூல்.
வெண்முரசை வாசிக்கத்தொடங்க வேறேது நூலையும் முன்னரே படித்திருக்கவேண்டும் என்னும் தேவை இல்லை. வெண்முரசு போன்ற நூல்கள் வேறு நூல்களின் மேல் நிற்பவை அல்ல. முழுமையாகவே அவை தங்களுக்குரிய உலகை உருவாக்கிக்கொள்கின்றன. அறியவேண்டிய எல்லாமே அதற்குள்ளாகவே இருக்கும். மேலும் புரிதலுக்காக வேண்டுமென்றால் வெண்முரசில் இருந்து தொடர்ச்சியாக மூலநூல்களை( உபநிடதங்கள், மகாபாரதம், புராணங்கள்) வாசிக்கலாம்.
மகாபாரதம் வேறு வடிவங்களில் கிடைப்பவை உண்மையில் கதைச்சுருக்கங்கள். மூலமகாபாரதமே கதையைச் சுருக்கிச் சொல்லும் வடிவில்தான் இருக்கும். நீதிகள்தான் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும். அது பண்டைய நூல்களின் இயல்பு. சிலப்பதிகாரத்திலேயே ஆய்ச்சியர் குரவை போன்றவற்றை தவிர்த்தால் கண்ணகியின் கதை அச்சில் பத்து பக்கத்துக்குள்தான் சொல்லப்பட்டிருக்கும்
ஏனென்றால் அச்சுவடிவம் உருவாகி, உரைநடை இலக்கியம் உருவாகியபின்னரே கதையை ‘நிகழ்த்தி’ வாசிக்கும் முறை உருவானது. கதை வாசகன் முன் உண்மைநிகழ்வுக்கு நிகரான நுண்ணிய தகவல்களுடன், கதைமாந்தரின் உள்ள ஓட்டங்களுடன், உரையாடல்கள் மற்றும் நாடகீய நிகழ்வுகளுடன் காட்டப்படுகிறது. அதற்கு முன் அவ்வாறு காட்டப்படுவது கூத்து போன்ற நிகழ்த்துகலைகளிலேயே இருந்தது.
ஆகவே வேறெந்த வடிவைக் காட்டிலும் மகாபாரதத்தை நவீன நாவலாக வாசிப்பதே இன்றைய வாசகனுக்கு உவப்பானது. மற்ற கதைகளில் ‘அஸ்தினபுரியை ஜெனமேஜெயன் ஆட்சி செய்து வந்தான்’ என்று இருக்கும். நாவல்களில் அஸ்தினபுரி எப்படி இருந்தது, அதன் கோட்டையும் தெருக்களும் மக்களும் எப்படி இருந்தன என நம் முன் காட்டப்படும்.
மகாபாரதத்தின் நாவல் வடிவங்களில் இதுவரை இந்தியாவிலோ வேறெங்குமோ எழுதப்பட்ட எந்த நாவலும் வெண்முரசின் ஒரு நாவலுக்கு இணையானவை அல்ல.
வெண்முரசு செவ்வியலை தன் வடிவஇலக்கணமாகக் கொண்டது. செவ்வியல் என்பது எல்லாவகைக் கூறுமுறைகளையும் தன்னுள் கொண்டது. வெண்முரசுக்குள் யதார்த்தவாத நாவலும் , சாகசநாவலும், குழந்தைகள் கதைகளும், புராணக்கதைகளும் எல்லாமே உள்ளன. செவ்வியல் என்பது எத்தனை ஆழமாகப் பின்னிச் சென்றாலும் அடிப்படையில் கதைச்சுவாரசியம் என்பதை தக்கவைத்துக்கொள்வது
ஒன்றுமே தெரியாமல் வாசித்தாலே கூட வாசிப்பார்வம் ஊட்டி கடைசிவரை வாசிக்கச் செய்யும் ஆற்றல் வெண்முரசுக்கு உண்டு. அதிலுள்ள தத்துவம், வரலாறு, தொன்மங்கள், உருவகங்கள் போன்றவை முதல் வாசிப்பில் ஒருவேளை கிடைக்காமல் போகலாம். ஆனால் அவையும் மெல்லமெல்ல வாசகன் முன் திறக்கும்.
அத்துடன் வெண்முரசை புரிந்துகொள்ள பல இணையதளங்கள் உதவிக்கு உள்ளன.வெண்முரசு விவாதங்கள் இணையப்பக்கத்திலுள்ள கடிதங்கள் வெண்முரசின்மேல் ஒரு முழுமையான வாசிப்பை உருவாக்குபவை. ஏராளமான கட்டுரைகள், குறிப்புகள் இணையத்திலேயே கிடைக்கின்றன
ஜெ