இலக்கணவாதிகளும் இலக்கியமும்
அன்புள்ள ஜெ,
மொத்தக் கட்டுரையும் ஒரு வாழ்க்கை சித்திரமாக என் வீட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பேத்தி வளர்கிறாள். காலையில் கண் விழித்ததும் கூடையில் கிடக்கும் அத்தனை விளையாட்டுச் சாமான்களையும் பொம்மைகளையும் எடுத்து கடை பரப்புவாள். வீடு முழுக்க நிறைந்திருப்பாள். பார்த்துப் பார்த்து தான் நடக்க வேண்டியிருக்கும். பத்தும் பத்தாதற்கு புதிது புதிதாக பொருட்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். அலுத்துக் களைத்து மீண்டும் உறங்கச் செல்லும் போது ‘எனக்கென்ன?’ என்பது போல் அத்தனை பொருட்களும் அப்படியப்படியே கிடக்க இலக்கணவாதிகள் நாங்கள் தான் மீண்டும் அவற்றை எடுத்து அடுக்க வேண்டும்.
பொலிவதும் கலைவதுமாக நன்றாகத் தான் இருக்கிறது யாவும்.
நன்றியுடன்
அ. ராஜ்குமார்
பெங்களூரு.
***
அன்புள்ள ஜெ
இலக்கணம் பற்றிய கட்டுரையிலுள்ள தெளிவு மிக முக்கியமானது. அப்படித்தான் எழுதுவோம் என்னும் திமிர் படைப்பிலக்கியவாதிகளுக்கு உண்டு. அது தேவைதான். ஆனால் ஓர் அறிஞனுக்கு சூழலில் ஏன் இலக்கணநூல்கள் தேவை என்னும் புரிதலும் இருக்கவேண்டும். அந்த இரண்டு தரப்பையும் சொல்லி எழுதியிருக்கிறீர்கள். முக்கியமான கட்டுரை.
ரவீந்திரன். எஸ்
***
அன்புள்ள ஜெ,
இலக்கணத்தைப் பற்றிய தெளிவை அளிக்கும் கட்டுரை. நமக்குத்தேவை பழைய இலக்கணங்களை மூர்க்கமாக முன்வைக்கும் அறிவிலிகள் அல்ல. புதிய இலக்கணம் உருவாக்கும் அறிஞர்கள். ஆங்கிலம் வளர்வதே புதிய இலக்கணத்தால்தான். ஓர் ஆண்டில் ஆங்கிலத்தில் எத்தனை புதிய சொல்லாட்சிகள் புதிய சொற்றொடரமைப்புகள் வந்துள்ளன என்று பார்த்தால் ஆச்சரியம். ஆனால் அவையெல்லாமே ஒரு அகராதித்தொகுப்பிலும் இலக்கண அமைப்பிலும் சென்று சேர்ந்துகொண்டும் இருக்கும். அதற்காக ஒரு மாபெரும் அறிவியக்கமே செயல்படுகிறது. அப்படி ஓர் அறிவியக்கமே இங்கே இல்லை. உண்மையான பிரச்சினை அதுதான். அந்த இலக்கணப்பணிகளை செய்ய ஆளில்லை. ஆனால் இலக்கியமும் தெரியாமல் இலக்கணமும் தெரியாமல் ‘ஐந்தாம்கிளாஸ் கிராமர் புக்கை’ தூக்கிக்கொண்டு பாடம்நடத்த வருபவர்கள் தெருத்தெருவாக இருக்கிறார்கள்.
அர்விந்த்குமார்