விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெ
ஆனந்த் குமாருக்கு விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது அளிக்கப்படும் செய்தியை அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஒருவாறு ஊகிக்கத்தக்கதாகவே இருந்தது. இந்த ஆண்டு முழுக்க நீங்கள் எந்தெந்த கவிஞர்களை கவனித்து அடையாளப்படுத்துகிறீர்கள் என்று பார்த்தாலே போதும். ஆனந்த்குமார், சதீஷ்குமார் சீனிவாசன், கல்பனா ஜெயகாந்த் மூவரில் ஒருவர் விருது பெறுவார் என்று நான் சொல்லியிருந்தேன். ஆனந்த் குமார் வயதில் மூத்தவர். அப்படியென்றால் கணிப்பு சரிதான்.
நீங்கள் விரும்பும், உங்கள் கவிதைவாசக நண்பர்களான கடலூர் சீனு, ஈரோடு கிருஷ்ணன் போன்றவர்கள் விரும்பும் கவிதை என்னவாக இருக்கும் என்றும் சொல்லிவிடமுடியும். அறிவுஜீவிப் பாசாங்கோ, கொள்கைப்பிரகடனமோ இருந்தால் அந்த கவிதையை நீங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனந்த் குமார் கவிதைகள் முகுந்த் நாகராஜன் கவிதைகளுக்குப் பின் அந்தவகையில் அமைந்தவை. குழந்தைகள், செடிகள், பறவைகளின் உலகம். ஆனால் அந்த உலகில் இங்கிருந்து செல்லும் எல்லா உணர்ச்சிகளும் அலையடிக்கின்றன. அண்மையில் வந்த முக்கியமான தொகுதி டிப்டிப்டிப்
செல்வக்குமார்
***
அன்புள்ள ஜெ
ஆனந்த் குமாரின் ஒரு கவிதையை நான் என் மேஜையில் கண்ணாடிக்கு அடியில் வைத்திருந்தேன்.
ஓடும் நீர்
துள்ளிப் பார்த்தது
ஒரு துளி காட்டை
எனக்கு என்னென்னவோ அர்த்தங்களை அளிப்பது இந்தக் கவிதை. என் வாழ்க்கையே இந்தக்கவிதைதான் என்று எனக்குத்தோன்றுவதுண்டு. மிகச்சாமானியமான ஒரு குடும்பத்தில் பிறந்து நான் அடைந்த வாழ்க்கை இந்த ஒரு துளியின் ததும்பல் மாதிரித்தான்
அத்துடன் அந்த ஒரு துளி என்கிற அழகு. ஒரு துளி நீர் என்பது ஒரு கண். முதலைக்கு கண் தனியாக இருப்பதுபோல அந்த ஓடைக்கு கண் கொஞ்சம் தனியாக மேலெழுந்துவிட்டது. இல்லாவிட்டால் அது எப்படி முழுக்காட்டையும் பார்க்கமுடியும்?
அதில் அந்தக்காடு முழுக்கவே தெரியும். பனித்துளியிலே பனை தெரிவதுபோல. இந்தக்கவிதையை இன்றைக்கு , காமிரா ஹைஸ்பீட் ஃப்ரேம் வந்தபிறகுதான் எழுதமுடியும். அற்புதமான ஒரு வரி
மேலும் இன்றைக்குக் கவிதைகளில் அழகு, நம்பிக்கை எல்லாம் அளிக்கும் கவிதை என்பது மிகக்குறைவானது. ஆகவே இந்தவரியை அப்படியே பொத்தி வைத்துக்கொண்டேன்
ஆனால் கவிதையை நான் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன்
ஓடும் நீர்
துள்ளிப் பார்த்தது
காட்டை
என்.ராஜ்