பின் தொடரும் நிழலின் குரல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பல வருடங்களாக உங்களை தினமும் தொடர்பவன் என்றாலும் இது என் முதல் கடிதம். ஒரு விரிவான கடிதத்திற்கு உத்தேசித்து தயங்கியபடியே சென்றுவிட்டது. இது வேறு ஒரு ஐயம் சம்பந்தமாக. சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். பின் தொடரும் நிழலின் குரல் முதல் முறை படித்தபோது, ஒரு ஐயம் எழுந்தது.
அதன் கடைசி கடிதத்தில், நீங்கள் அருணாச்சலத்திற்கு எழுதும்போது, லிங்கம் ஆவுடை ஒப்பீடு நினைவுகூறப்படுகிறது. அருணாச்சலம் கதிருக்கு எழுதிய கடிதம், கதையில் நீங்கள் கதிருடன் சம்பந்தப்படாதபோது, உங்களுக்கு எப்படி தெரியவரும். ஏனெனில் அக்கடிதத்தில்தான் அருணாச்சலம் அந்த ஒப்பீட்டை சொல்கிறான். அவ்வளவு பெரிய நாவலில் சொல்வதற்கு ஏதுமற்று, இந்த பிழையை (அல்லது ஐயத்தை) எழுதிக்கேட்கும் அபத்தத்தை தவிர்க்கவே முயன்றேன். ஆனால் அதன் மறுபதிப்பு இப்போது வரவிருப்பதால் இக்கடிதம்.
என்னுடைய புரிதல் பிழை என்றாலோ அல்லது இது தாமதமான கடிதம் என்றாலோ தயவுசெய்து மன்னிக்கவும்!
அன்புடன்,
சுரேந்திரன்
சென்னை-81
***
அன்புள்ள சுரேந்திரன்,
நான் எப்போதுமே சொல்லி வருவது ஒன்றுண்டு. ஓர் இலக்கியப்படைப்பு ‘பிழை’கள் அற்றதாக இருக்க முடியாது. கவனப்பிழைகள் இருக்கும். தட்டச்சுப்பிழைகள், நினைவுப்பிழைகள் போன்றவை. அவற்றில் பெரும்பகுதி பிழைதிருத்துநர்களால் சரிசெய்யப்படும். அவற்றை மீறியும் பல பிழைகள் இருக்கும். அப்பிழைகள் ஆசிரியரின் அந்த குறிப்பிட்ட படைப்புநிலையால் உருவாக்கப்படுபவை. ஓர் ஆறு அது செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் செல்வதாக ஒரு புனைவில் எழுதப்படலாம். ஒரு மலையின் அமைப்பு வேறுவகையில் இருப்பதாக எழுதப்படலாம். அதேபோல பல பிழைகள். இவற்றை படைப்பூக்கம் சார்ந்த பிழைகள் என விமர்சகர் வரையறை செய்கிறார்கள். (நல்ல பிழைதிருத்துநர் இவற்றை திருத்த மாட்டார்.)
இவை இடைவெளிகள் அல்லது விரிசல்கள் (Gaps) என்று விமர்சனத்தில் சொல்லப்படுகின்றன. தெரிதா முதல் வுல்ஃப்காங் ஈசர் வரை பலர் இதைப்பற்றிப் பேசியுள்ளனர். படைப்பில் வெளிப்படும் ஆசிரியரின் மனநிலையையும், படைப்பை உருவாக்கும் மனநிலையையும் வாசகன் கண்டறிய வழியளிப்பவை இந்த இடைவெளிகள் அல்லது விரிசல்கள். படைப்பிலுள்ள இடைவெளிகளை நிரப்புபவனே வாசகன். படைப்பில் அதன் கட்டமைப்பில் ஆசிரியன் அறிந்து உருவாக்கும் இடைவெளிகளைப்போலவே அறியாது விழும் இடைவெளிகளும் முக்கியமானவை. அவற்றுக்கான பதில்களை வாசகன் அப்படைப்பைக்கொண்டு உருவாக்கவேண்டும். அதன்பெயர்தான் படைப்பூக்க வாசிப்பு.
ஆகவே ஒரு படைப்பில் பிழை கண்டுபிடித்து ஆசிரியனிடம் சொல்பவன் நல்ல வாசகன் அல்ல. அது வாசகனின் சீண்டப்பட்ட ஆணவம் மட்டுமே. நானும் அறிவாளிதான் என அவன் ஆசிரியனிடம் சொல்கிறான். ஆசிரியனை விட தான் ஒரு படி மேல் என நினைத்து ஒரு வகை களிப்பை அடைகிறான். அந்த மனநிலை வந்துவிட்டால் பிழைகண்டுபிடிக்கும் கண் மட்டுமே அமையும், கற்பனை அமையாது. கற்பனையே இலக்கியத்தை வாசிப்பதற்குரிய முதற்தகுதி. அந்த ‘நோண்டும்’ மனநிலை ஆழ வேரூன்றிவிட்டதென்றால் எல்லாமே பிழையென தெரியும். ஆணவத்தை முன்வைத்து படைப்பை வாசிப்பதென்பது இரும்புக்கவசம் போட்டுக்கொண்டு பாலுறவு கொள்வதுபோல. நீங்கள் புணர்வது உங்களுடைய சொந்த இரும்புக்கவசத்தை மட்டும்தான்.
மேலும், ஓர் ஆசிரியன் அவன் எழுதியவற்றை பாதுகாத்து நின்றிருக்கவேண்டிய பொறுப்பு கொண்டவன் அல்ல. அவன் எழுதும்போதிருந்த மனநிலை எழுதி முடித்ததுமே நீங்கிவிடும். பலசமயம் அந்தப்படைப்புக்கும் அவனுக்கும் நெருக்கமே இருக்காது. மீண்டும் படிக்கவும் முடியாது. ஜெயகாந்தன் சொன்னதுபோல ‘செக்ஸ் வைத்துக்கொண்டதற்காக பிள்ளைகள் செய்யும் எல்லாவற்றுக்கும் அப்பன் பொறுப்பேற்கமுடியுமா?’ என்று கேட்கலாம். நான் அப்படிக் கேட்கமாட்டேன். ‘எந்த அளவுக்கு குறையிருக்கோ அந்தளவுக்கு குறைச்சுங்கங்க மகராஜா’ என்று தருமி மாதிரி சொல்லிவிடுவேன்.
*
நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் ’பிழை’யை (உண்மையில் அப்படி ஒன்று இருதால்) ஓர் எளிய வாசகன் மிக எளிதாக இப்படி விளக்கிக்கொள்வான். ஒரு நாவலில் சொல்லப்படுவன அச்சூழலில் நிகழ்ந்தவற்றின் ஒரு பகுதிதான். சொல்லப்படாதவையும் பல நிகழ்ந்திருக்கும். அருணாச்சலம் எஸ்.எம்.ராமசாமியிடம் பேசும்போது அதைச் சொல்லியிருக்கலாம். பலரிடம் சொல்லியிருக்கலாம். அந்தச் சொற்சூழலில் ஜெயமோகன் இருக்கிறான், அவன் காதில் விழுந்திருக்கலாம்.
மெட்டாஃபிக்ஷன் என்னும் மீபுனைவு என்பது என்ன என்று அறிந்த வாசகன் மேலதிகமாக ஒன்றை புரிந்துகொள்வான். அந்நாவலுக்குள் அதன் ஆசிரியனும் வருகிறான். அந்த ஆசிரியன் எழுதியதே அந்நாவல். அதாவது, எஸ்.எம்.ராமசாமிக்கு எழுதும் கடிதத்திலேயே தான் நாவல் எழுதப்போவதாகச் சொல்கிறான் ஜெயமோகன். அந்நாவல்தான் பின் தொடரும் நிழலின் குரல்.
அதாவது அந்நாவலின் முதல் வரி அந்நாவலின் நிகழ்வுகள் முடிந்த பின் எழுதப்பட்டது. அருணாச்சலத்தின் வாழ்க்கை, அவனும் நாகம்மையும் கொண்ட அந்தரங்க உரையாடல்கள் உட்பட எல்லாமே ஜெயமோகன் எழுதிய நாவலில் வருவனதான். அருணாச்சலம் எழுதியதாக பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் கடிதங்கள், வீரபத்ரபிள்ளையின் குறிப்புகள் எல்லாமே ஜெயமோகன் எழுதியவைதான். ஒரு படைப்பு தன்னையே தான் எழுதுவதற்குப் பெயர்தான் மீபுனைவு. விஷ்ணுபுரம் நாவலும் இந்த அமைப்பு கொண்டது. வெண்முரசு நாவல் தொடரில் ஓரளவு இந்த உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.
*
நாவல் எனும் கலைவடிவை புரிந்து கொள்வது சார்ந்த கேள்வி. ஒரு குறிப்பிட்ட சிந்தனை அல்லது அது சார்ந்த ஒரு படிமம் ஒரே வாழ்க்கைச்சூழலில், ஒரே உணர்வுச்சூழலில், ஒரே சிந்தனைச்சூழலில் வாழும் ஒருவரோடொருவர் சம்பந்தமற்ற பலர் உள்ளத்தில் எழுவதை நீங்கள் இதற்கு முன் கண்டதோ கேட்டதோ இல்லையா? நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பதை அதே சொற்களில் சம்பந்தமில்லாத ஒருவர் சொல்லிக் கேட்கும் திடுக்கிடல் நிகழ்ந்ததே இல்லையா? நுண்ணுணர்வுள்ள எவருக்கும் அத்தகைய அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்.
உலக இலக்கியத்தில் இந்தச் சந்தர்ப்பம், ஒரு கதைக்களத்தில் பலர் ஒரே படிமத்தை திரும்பத் திரும்பச் சொல்லி அதை வளர்த்துக் கொண்டுசெல்லுதல், ஓர் இலக்கிய உத்தியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தமில்லாதவர்கள் ஒரே கனவை காண்பதும் பலமுறை பயன்படுத்தப்பட்ட ஓர் உத்தியே.
பின்தொடரும் நிழலின் குரலில் அந்தப் படிமம் நாவலின் மிக அடிப்படையான ஒன்று. அப்படிமம் மிகுந்த பிரக்ஞையுடன் மூன்று கோணங்களில் மூவரால் சொல்லப்படுவதாக எழுதப்பட்டுள்ளது. (நீங்கள் வாசித்தது இருவர் சொல்வதை மட்டுமே) அதேபோல இன்னும் இரண்டு படிமங்களும் வெவ்வேறு மனிதர்களால் சொல்லப்படுகின்றன.
*
கடைசியாக, ஒரு நாவலை வாசிப்பவர் கூர்ந்து வாசிக்கும் பொறுப்பை கொண்டிருக்கிறார். அதன்மேல் ஒரு விவாதத்தை முன்னெடுப்பவர் குறைந்தபட்சம் அந்த விவாதத்தை முன்வைக்கத் தேவையானவற்றையாவது முழுமையாக வாசிக்க கடமைப்பட்டிருக்கிறார். மேலோட்டமான, கவனமற்ற வாசிப்பின் விளைவாக பிழை சுட்டிக்காட்டுபவர்கள்தான் எனக்கு வாரம் ஒரு கடிதமாவது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒரு சாரார் அவர்களின் வாசிப்புப் போதாமையை நான் சுட்டிக்காட்டினால் சீற்றம் கொள்வதுண்டு. அந்த விவாதத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்ததற்கு தாவுவார்கள். ஒரு பிழையை தெளிவுசெய்தால் ஐந்து பிழைகளை கண்டுபிடித்து வந்து நிற்பார்கள். விஷ்ணுபுரம் வெளிவந்த போது சுட்டிக்காட்டப்பட்ட ’பிழைகள்’ எல்லாவற்றுக்கும் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தேன். கோவை ஞானிதான் அது எழுத்தாளனின் வேலை அல்ல, அவன் எழுதப்பட்டவற்றை விளக்கும் பொறுப்பையும் ஏற்கமுடியாது என்றார். அதிலிருந்து இப்படிப்பட்ட பிழைசுட்டல்களில் சாரமில்லை என்றால் கண்டுகொள்வதில்லை.
ஆகவே ஏதேனும் ஒரு பிழைக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால் அதை நான் பொருட்படுத்தும் தகுதி கொண்டதாக நினைக்கவில்லை என்று பொருள். பொதுவாக வாசகர்கள் அறிந்தாகவேண்டிய ஏதேனும் சில அடிப்படைகளைப் பேசவேண்டும் என்றால் விளக்கம் அளிப்பேன். இது அத்தகைய விளக்கம். முறையான வரலாற்று- தத்துவ- அழகியல் விளக்கம் அளிக்கப்பட்டபின்னரும் சலம்பிக்கொண்டிருக்கும் வம்பர்களை முற்றாக விலக்கியும் இருக்கிறேன்.
உங்கள் வாசிப்பின் போதாமை என்ன? லிங்கம்– ஆவுடை பற்றிய உருவகம் முதலில் வருவது வீரபத்ரபிள்ளை குறிப்புகளில். அதன்பின் கதிருக்கு அருணாச்சலம் எழுதிய கடிதத்தில். அதன்பின் ஜெயமோகன் எஸ்.எம்.ராமசாமிக்கு எழுதிய கடிதத்தில். அக்கடிதத்தில் ஜெயமோகன் வீரபத்ரபிள்ளை எழுதிய குறிப்புகள், தனிப்பட்ட கடிதங்கள் உட்பட அனைத்தையும் படித்து அவற்றில் சிலவற்றை தன் நாவலில் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறான் (அந்நாவல்தான் பின் தொடரும் நிழலின் குரல்)
“அவன் என் கைப்பிரதிகளைக் கேட்டு எழுதியிருக்கிறான். இதை ஒரு நாவலாக ஆக்க விரும்புகிறான். இந்நாவலை எவர் படிப்பார்கள்?” என்று அருணாச்சலம் தன் கடிதத்தில் சொல்கிறான். “இன்று கைப்பிரதிகளை அந்த எழுத்தாளனுக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் ஒன்று மட்டும் நிபந்தனை விதித்தேன். தலைப்பு நான் சூட்டுவதுதான். பின்தொடரும் நிழலின் குரல்” என்கிறான்.
எஸ்.எம்.ராமசாமிக்கு அருணாச்சலம் எழுதிய கடிதத்தில் அருணாச்சலம் எஸ்.எம்.ராமசாமிக்கு எழுதிய கடிதத்தில் ஆவுடை பற்றிய குறிப்பு இருப்பதாக ஜெயமோகன் சொல்கிறான். வீரபத்ரபிள்ளை குறிப்புகளுக்கு மேலதிகமாக அருணாச்சலம் எஸ்.எம்.ராமசாமிக்கு எழுதிய கடிதத்திலும் ஆவுடை பற்றி சொல்லியிருந்ததை ஜெயமோகன் வாசித்திருக்கிறான் என அது காட்டுகிறது. ஏனென்றால் அது அருணாசலம் அடைந்த தரிசனம்.
இந்த ‘பிழை’கண்டுபிடிப்பை நிகழ்த்தியதுமே நீங்கள் கொஞ்சம் முயன்று ஆவுடை- லிங்கம் பற்றி எங்கெல்லாம் நாவலில் வருகிறது என்று பார்த்திருந்தாலே விரிவான தர்க்கத்தொடர்புடன் மட்டுமே இதெல்லாம் அமைந்திருப்பதை கண்டிருக்கலாம்.
ஜெ
***
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307