அரசியின் விழா
“வயலில் வெந்த கரிய முகங்களில் வழியும் வியர்வையின் ஆவி. மண்ணில் இருந்து எழுந்து மண்ணால் ஆனவர்கள் போன்ற மக்கள். வெயிலில் திளைக்கும் கைக்குழந்தைகளை இங்குதான் காண்கிறேன். இந்த மக்களுடன் இருக்கையில்தான் நான் என் இடத்தில் மிச்சமில்லாமல் பொருந்தியிருக்கிறேன் என்றும், விராடரூபன் என்றும், அழிவற்றவன் என்றும் உணர்கிறேன்.”
சொல்ல முடியாத ஏதோ ஒன்றை எனக்கு உணர்த்தி விட்டீர்கள்..
ரங்கராஜன்
சென்னை..
***
‘அரசியின் விழா’ அருமை. இரண்டுநாள் கொண்டாட்டத் திளைப்பில் உடலால் வெந்து மனதால் குளிர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, மதுரைத்திருவிழாவில் தேர் இழுத்திருக்கிறேன். ஆரம்பத்திலிருந்து நிலைக்கு வரும் வரை. நண்பர்களோடு காலையிலேயே குளித்து விளக்குத்தூண் சென்றுவிட்டோம். எங்களோடு பட்டைபட்டையாய் விபூதி இட்டுக்கொண்டு (வாயில் பீடி வேறு, யாரோ சொல்லியபின் கீழே போட்டார்கள்), இடுப்பில் வேட்டி அணிந்துகொண்டு நாலு வெள்ளைக்காரர்களும் தேர் இழுத்தார்கள். தேர்த்தட்டிலிருந்து ‘சம்போ சங்கர’, ‘ மீனாட்சி சுந்தர’ , ‘சோம சுந்தர’ என்று கிளம்புகிற ஒவ்வொரு விளிக்கும் பல்லாயிரம் தொண்டைகளிலிருந்து கிளம்புகிற எதிர் விளியால் மாசி வீதிகள் அதிர்ந்ததை சிவலோகமும் கேட்டிருக்கும் என்று தோன்றியது.
உடல் சூடேறி தலைக்கு ரத்தம் பாயும் போர்க்கள மனநிலை எல்லோருக்கும். எனக்கெல்லாம் கண்ணில் நீர் வந்த வண்ணம் இருந்தது. அந்தக் கூட்டு மனநிலையின் மூலம் போர்க்களங்களைக் கற்பனை செய்ய முடிந்தது. தெற்குமாசி வீதியில் வரும்போது அம்மன் தேரின் கலசம் கழன்று உருண்டுவந்து, நல்ல வேளையாக தேரின் மேல்விதான வளைவில் தொக்கி நின்று விட்டது. டி.வி.எஸ் கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து சரி செய்தார்கள்.
மாசி வீதியில் உள்ள கடைக்காரர்கள் நீர்மோர், பானகம், மாங்காய், வாழைப்பழம் என்று விநியோகித்துக் கொண்டே இருந்தார்கள். மாடியிலிருந்து தேர் இழுப்பவர்கள் மேல் குளிர்ந்த நீரை வாரியிறைத்தார்கள். இதையெல்லாம் இன்றைக்கும் அங்கு சென்றால் அனுபவிக்கலாம் என்ற நினைப்பே சந்தோஷத்தைக் கொடுக்கிறது. முதலில் மாசி மாதம்தான் தேர்த் திருவிழா நடைபெற்றதாகவும், வேளாண்குடிகள் பங்கேற்க வசதியாக சித்திரை மாதம் விழா மாற்றப்பட்டதாகவும், இடம் மட்டும் மாறாது மாசிவீதியில் நடைபெறுவதாகவும் கூறுகிறார் தொ.பரமசிவன். அழகர் ஆற்றில் இறங்கும் அன்று சுத்துப்பட்டு கிராமங்களில் உள்ள ஜனங்கள் எல்லாம் மதுரை ஆற்றுக்குள்தான் இருக்கும். உள்ளூர்க்காரர்கள் வீட்டைவிட்டுச் செல்லமாட்டார்கள். மாலைமலரில் தவறாமல் இடம்பெறும் செய்தி ‘இடி ராஜாக்கள் 80 பேர் கைது’ மறுநாள் எல்லா தினசரிகளிலும் தலைப்புச் செய்தி ‘மதுரை குலுங்கியது’.
மதுரை பஞ்சநாதன் கம்பெனியாரின் ‘பீமபுஷ்டி ஹல்வா’ கடை இல்லாத திருவிழாக்களே அன்றைக்கு இல்லை. பீமன் அவரைப்போன்ற மல்லர்களுக்கு ஹல்வா விநியோகம் செய்தபடி இருக்கும் கருப்பு வெள்ளைப் படம் மறக்காமல் உள்ளது. சில வருடங்களுக்குமுன் சென்னை பெசன்ட் நகர் மேரி மாதா ஆலயத் திருவிழாவில் கூடப் பார்த்தேன். ‘கும்பமேளா’வில் இருந்தாலும் ஆச்சரியமில்லை.நீங்கள் எதுவும் பார்த்தீர்களா? எல்லாப் பிள்ளைகளுக்கும் இனிமையாக ஒலிக்கும் பீப்பி, டமாரச் சத்தங்கள் ஏனோ எந்தப் பெரியவர்களுக்கும் பிடிப்பதில்லை. ‘சில்க்’ கின் உந்திச்சுழி கொண்ட பலூன்கள், விதம்விதமான புல்லாங்குழல்கள், மூணு சீட்டு, எளிமையான கையால் சுற்றும் ராட்டினங்கள், நிறையப் பவுடர் போட்டுக்கொண்டு சிரிக்கும் ‘அக்கா’க்கள். அது வேறுஉலகம். தல்லாகுளம் எதிர்சேவையில் ‘கள்ளழகரைக் கைதுசெய்’ மற்றும் மீனாட்சி திருக்கல்யாணத்தன்று ‘ஆளாகிப் பல கன்னிகள் நிற்குது நாட்டிலே, நாளாகிப் போன கல்லுக்கு ஆண்டுதோறும் திருமணமா?’ போன்ற திராவிடர் கழகப் ‘போஸ்டர்’களை அன்றைக்குப் பார்த்திருக்கிறேன். இப்போது எதுவும் கண்ணில் பட்டதா?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்