எழுதும் கலை, வாங்க
மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா, வணக்கம்!
என் பெயர் ஸ்ரீராம். நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். இதுவரையில் வெகுசில புத்தகங்களே படித்துள்ளேன். அவற்றில் தங்களது ‘அறம்’, ‘புறப்பாடு’ மற்றும் ‘இரவு’ நூல்களும் அடக்கம்.
ஒரு சிறு முயற்சியாக சமீபத்தில் ‘ஒரு சந்திப்பு’ என்ற சிறுகதை எழுதியுள்ளேன். அது எந்தளவு ஒரு சிறுகதையாய் வந்திருக்கிறது என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அதனை படித்து பார்த்து கருத்து சொல்லும் அளவுக்கு என்னை சுற்றி படிக்கும் பழக்கம் இருப்பவர்கள் யாருமில்லை.
உங்களது எழுத்துகளை பார்த்து நான் வியந்துள்ளேன். எனவே, நான் எழுதியுள்ள இந்த சிறுகதையை தங்களுக்கு அனுப்பியுள்ளேன். முடிந்தால் படித்து பார்த்து தங்களது கருத்தினை கூறவும்.
தங்களிடமிருந்து வரும் பதில் என்னை மேலும் படிக்க, எழுத ஊக்கப் படுத்தும். நன்றி.
‘ஒரு சந்திப்பு’ சிறுகதைக்கான லிங்க்:
https://dayofadaydreamer.wordpress.com/2022/03/09/oru-sandhippu/
– ஸ்ரீராம்.
***
அன்புள்ள ஸ்ரீராம்,
பொதுவாக நான் இந்தவகையான அமெச்சூர் எழுத்துக்களை வாசிக்க நேரம் ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு இப்படி புதியவர்களின் கதைகள் அனுப்பப்படுகின்றன. அவற்றை வாசித்தால் என் பொழுது வீணாகும். நான் மிகப்பெரிய பணிகளில், பயணங்களில், சினிமா வேலைகளில் இருந்துகொண்டிருப்பவன். பணமாகப் பார்த்தால் கூட என் பொழுதுகள் இங்குள்ள ஓர் உயர்நிலை நிர்வாகியின் நேரத்துக்கு இணையானவை.
இந்தக்கதையை வாசித்தேன், இது சிறிது என்பதனால்.
அந்த முதியவரின் எதிரில் அமர்ந்து, சைடிஷ்ஷை பிரித்து பின் மது பாட்டிலை ஓப்பன் செய்தான் அந்த இளைஞன். யார் வந்திருப்பது என தனது மதுக் கோப்பையிலிருந்து சற்று நிமிர்ந்துப் பார்த்தார் அந்த முதியவர். எங்கோ பார்த்த முகம்…
எத்தனை முறை அந்த வந்திருக்கிறது என்று பாருங்கள். ஏனென்றால் நடை உருவாகவில்லை. நடை எங்கிருந்து உருவாகும்? உங்கள் கடிதத்திலேயே அதற்கான பதில் உள்ளது. நீங்கள் எதையும் வாசிக்கவில்லை. நீங்கள் எதையும் வாசிக்க மாட்டீர்கள், ஆனால் உங்களை மற்றவர்கள் வாசிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள், இல்லையா?
இசையோ, ஓவியமோ வேறெந்த கலையிலாவது எந்தப் பயிற்சியுமில்லாமல் ஒருவர் திடீரென்று இறங்கிவிட முடியுமா? இலக்கியத்தில் மட்டும் இறங்கலாமென எப்படி முடிவெடுத்தீர்கள்?
முதலில் தமிழின் தலைசிறந்த சிறுகதைகளை படியுங்கள். குறைந்தது 500 சிறுகதைகள். குறைந்தது 100 நாவல்களை படியுங்கள். அதன்பின் எழுதலாமா என முடிவெடுக்கலாம். மொத்தமாகவே இரண்டு ஆண்டுகள் தீவிர வாசிப்பு போதும் அதற்கு. இரண்டு ஆண்டுகளில் கற்றுக்கொள்ளக்கூடிய வேறெந்த கலையும் இல்லை.
அப்படி வாசித்தால் என்னென்ன இதுவரை எழுதப்பட்டுள்ளது என்று தெரியும். இனிமேல் என்ன எழுதலாம் என்ற தெளிவும் வரும்.
எழுதுவது வாசிப்பது பற்றி நான் பல நூல்களை எழுதியிருக்கிறேன். ஆர்வமிருந்தால் அங்கிருந்தே தொடங்கலாம்
ஜெ