நீதிமன்றம், நீதிபதிகள் -கடிதம்

https://alavaimagazine.blogspot.com/2022/04/2.html

அளவை இதழில் இளம் சட்டக்கல்லூரி மாணவர் விக்னேஷ் ஹரிஹரனின் பேட்டி அருமையாக இருந்தது. அவருடைய பேட்டியிலிருந்துதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வுசெய்யப்படும் விதமென்ன என்று தெரிந்துகொண்டேன். கொலிஜியம் என்னும் அமைப்பு ஜனநாயக விரோதமானது. அது இன்றளவும் போப் ஆண்டவர் தேர்விலே செயல்முறையிலுள்ளது. ஆனால் ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்யப்படுபவர்கள் எப்படி தேர்வுசெய்யப்படுகிறார்கள்? சாதிக்கணக்குகள், அரசியல்கணக்குகள்தானே அதிலுள்ளன? பப்ளிக் பிராசிக்யூட்டர் நியமனத்திலுள்ள அளவுகோல்களென்ன? அது வெளிப்படையாகவா நடைபெறுகிறது?

போப் தேர்வுசெய்யப்படுவது ஜனநாயக முறைப்படி அல்ல. ஆனால் சி.எஸ்.ஐ பிஷப் ஓட்டு போட்டு தேர்வுசெய்யப்படுகிறார். இங்கே தமிழ்நாட்டில் இன்றைக்கு என்ன நடக்கிறதென்று அனைவருக்குமே தெரியும் ஆண்டுக்காண்டு அடிதடிகள் செய்திகளில் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் என்றால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது ஒரு மாயை. அது ஓர் ஒண்ணாங்கிளாஸ் பாடம். அந்தப்பாடத்தைச் சொன்னால் நாம் ஜனநாயகவாதிகள் என்ற பிம்பம் கிடைக்கும். ஆனால் அது உண்மையே அல்ல.

நீதிபதிகளை நியமிக்க ஜனநாயகமோ இன்னொரு லொட்டு லொசுக்கோ வந்தால் அதில் அரசியல்கட்சிகளும் அரசும் செல்வாக்கு செலுத்தும். அதில் சாதி உள்ளே வரும். இன்றைய சூழலில் ஒரு முஸ்லீம் நீதிபதி வரவே முடியாத நிலை உருவாகும். சமூகத்திலிருக்கும் எல்லா சண்டைசச்சரவுகளும் நீதிபதி நியமனத்திலுமிருக்கும். நீதிபதிகள் எம்.எல்ஏ ரேஞ்சுக்கு இருப்பார்கள். நம் சமூகத்தில் சரியான ரெப்ரசெண்டேட்டிவ்களாக இருப்பார்கள்.

ஆனால் நீதிமன்றம் சாமானியர்களை விட கொஞ்சம் மேலே இருக்கவேண்டும். சமூகத்துக்கும் மேலே இருக்கவேண்டும். இந்திய நீதிமன்றம் பெரும்பாலான தீர்ப்புகளை சமூக மனநிலைக்கு மிக மேலே நின்றுதான் அளித்திருக்கிறது. அது சமூகத்தை வழிகாட்டுகிறது. அதில் எலைட்டிசம் உண்டுதான். ஆனால் இங்கே இருக்கும் அமைப்புகள் எல்லாமே ஜனநாயகரீதியாகச் சீரழிந்துள்ளன. ஒர் அமைப்பாவது எலைட் அமைப்பாக்ல நீடிக்கட்டுமே. உச்சநீதிபதிகளால் நீதிபதிகள் தேர்வுசெய்யப்படுவதே சரியானது. அதை அரசியல்வாதிகள் சூறையாடாமல் தடுக்க வேறு வழியே இல்லை.

ஆர்.ராகவப்பெருமாள்

***

அளவையில் விக்னேஷ் பேட்டி சிறப்பு. திரைப்படங்களில் நீதிமன்றங்கள், சட்டம் யாருக்கானது, வக்கீல் தொழில் வருமானமற்றது போன்றவைகளுக்கான பதில்களும் அருமை. பாடத்திட்டத்தின் போதாமைகளை குறித்து ஒரு மாணவனின் கருத்தை முதன்முதலாக கேட்கிறேன். கேள்விகளும் மிக சிறப்பானவை  முழு நேர்காணலுமே பிரமாதம்

லோகமாதேவி

***

அன்புள்ள ஜெ

அளவை இதழில் சினிமாவில் நீதிமன்றங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை உள்ளது உள்ளபடி காட்டவில்லை என்று விக்னேஷ் சொல்கிறார். அவர் இன்னும் நீதிமன்றம் செல்ல ஆரம்பிக்கவில்லை என நினைக்கிறேன். உள்ளது உள்ளபடி காட்டினால் கண்டெம்ப்ட் ஆஃப் கோர்ட் கேஸில் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள். ஜனங்களுக்கு ஜெய்பீம் போன்ற படங்கள் காட்டும் அந்த பிரமை இருக்கும் வரைத்தான் வக்கீலுக்குக் காசு

ராஜ் முகுந்த்

முந்தைய கட்டுரைமலிவுவிலை நூல்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிளையாடும் ஏரி- கடிதங்கள்