இஸ்லாமியக் கடைகளுக்குத் தடை?
அன்புள்ள ஜெமோ,
நேரடியாகவே கேட்கிறேன் என்னும் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கண்டென்ட் இஸ்லாமியர் காங்கிரஸுக்கு ஓட்டளிக்கவேண்டும் என்பதுதானே? சுற்றிச்சுற்றி நீங்கள் வந்துசேரும் இடம் அதுதானே?
ஸ்ரீதர் பாலா
***
அன்புள்ள ஸ்ரீதர் பாலா,
நான் அரசியல் பிரச்சாரமெல்லாம் செய்யவில்லை. என் பணி அது அல்ல. ஆனால் இன்றைய சூழலில் கொஞ்சம் யோசிக்கும் இஸ்லாமியர் எடுக்கக்கூடிய நிலைபாடு காங்கிரஸுடன் இணைநிற்பதாகவே இருக்கமுடியும் என்பது என் எண்ணம். அதை அவர்களுக்கு அறிவுறுத்தவில்லை. அவர்கள் மறுப்பார்கள் என்றால் வாதிடவும் போவதில்லை. நடுநிலைநோக்கு கொண்ட இந்துக்கள், இந்துமதம் வெறுமொரு அரசியலியக்கமாக சிறுத்துவிடக்கூடாது என எண்ணுபவர்கள், எடுக்கவேண்டிய நிலைபாடும் அதுவே.
இஸ்லாமியர் காங்கிரஸுக்குள் இஸ்லாமிய அடையாளத்துடன் ஒரு தனிக்குழுவாக இருப்பார்கள் என்றால், வாக்குவங்கியாகச் செயல்பட்டு தங்கள் மதவாத நோக்கங்களுக்கு காங்கிரஸை செலுத்துவார்கள் என்றால், அது காங்கிரஸை பலவீனப்படுத்தும். இஸ்லாமியக் கட்சி என்னும் முத்திரை காங்கிரஸ் மேல் விழ அதன் இந்து வாக்குகள் அகலும். அவ்வாறு செய்யவே பாரதிய ஜனதா முயலும். இங்குள்ள வேகாத முற்போக்குகளும் முகநூல் லிபரல்களும் தங்களுக்கு புரட்சிகர அடையாளம் வரவேண்டுமென எண்ணி இஸ்லாமியர்கள் மத அடையாளத்துடன் தங்களை அரசியல்களத்தில் முன்வைப்பதை ஊக்குவிப்பார்கள். அது இஸ்லாமியரை அயன்மைப்படுத்தி அவர்களின் அரசியலை குறுக்கும், அதிகாரத்தில் அவர்களின் இடத்தை அறவே இல்லாமலாக்கும். அவ்வாறு செய்யும் நாச்சுழற்சி முற்போக்கினரும் லிபரல்களும் நடைமுறையில் இஸ்லாமியரின் எதிரிகளாகவே செயல்படுகிறார்கள்.
காங்கிரஸும் பாரதியஜனதாவும் ஒன்று என்னும் கோஷம் இருபதாண்டுகளாக இஸ்லாமியர் நடுவே ஒலிக்கிறது. அவ்வாறு கூவுபவர்கள் யார், எங்கே தங்கள் சமூகத்தைக் கொண்டு செல்கிறார்கள் என இப்போதாவது உணராவிடில் இஸ்லாமியர் வீழ்ச்சியை நோக்கியே செல்கிறார்கள்.
இஸ்லாமியர் காங்கிரஸ் நோக்கிச் செல்லவேண்டும். இஸ்லாமியர்களாக அல்ல, மதச்சார்பற்ற ஜனநாயகம் மேல் நம்பிக்கை கொண்டவர்களாக. மதத்தை அவர்கள் தங்கள் இல்லங்களில், உள்ளங்களில் வைத்துக்கொள்ளலாம். ஒருபோதும் மதத்தை பொதுவெளியில் கொண்டுவரக்கூடாது. மதவாதிகளை தங்கள் அரசியல்களத்திற்கு கொண்டுவரக்கூடாது. மதவாதத்துக்கு எதிரி மதவாதமல்ல, ஜனநாயகமே.
சுருக்கமாகச் சொன்னால், காங்கிரஸ் இஸ்லாமியர்களை நோக்கி சென்றால் அது காங்கிரஸின் அழிவு. காங்கிரஸை நோக்கி இஸ்லாமியர் செல்லவேண்டும். இன்னமும் காங்கிரஸ் நேரு உருவாக்கிய இலட்சியவாதத்தையே அடித்தளமாகக் கொண்டுள்ளது. அதை இஸ்லாமியர் நம்பி ஏற்கவேண்டும்.
தேசிய முஸ்லீம் மட்டுமே பாரதியஜனதா உருவாக்கும் இஸ்லாமிய எதிர்ப்பை எதிர்கொள்ளமுடியும். தீவிர முஸ்லீம் அந்த எதிர்ப்புக்கு உரமூட்டுபவர். காங்கிரஸ் வலுவாக இருந்தாகவேண்டும்.வரலாற்றில் வேறு வழியே இப்போது தென்படவில்லை. இது என் கருத்து. இதைச் சொல்வது இன்றைய சூழலில் உடனே என்னவகையாக எல்லாம் திரிக்கப்படும் என அறிவேன். ஓரமாக இந்த குரலும் ஒலிக்கட்டுமே என்றுதான் எழுதுகிறேன்.
ஜெ