மலிவுவிலை நூல்கள்- கடிதங்கள்

புதுமைப்பித்தன் மலிவுப்பதிப்பு -நற்றிணை யுகன் பேட்டி

அன்புள்ள அய்யா,

அன்பர் பரிதி எழுதியதில் முற்பகுதி சரியே.மலிவு விலை பதிப்புகள பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டு விற்கப் பட வேண்டும். ஆனால், அதற்கு சொந்தமாக அச்சகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சரியா என்று தெரியவில்லை. இதற்கு அச்சுத் தொழில் துறையில், சிவகாசி மாடல் உற்பத்தி, அல்லது சீனா நாட்டு  உற்பத்தி  முறைகள் தான் பொருத்தம் என்று நம்புகிறேன்.

அது மட்டுமல்ல, மலிவு விலை பதிப்புகளுக்கு பின் பொதுவாக புத்தக விற்பனை குறையும் என்பதும் சரியல்ல. வாசகர் வட்டம் பல்கிப்  பெருகும். அதில், ரசனை, சுவை, கலை உணர்வு கொண்ட வாசகர்கள், (Connoisseurs) செம்பதிப்புகளுக்கு முன்னேறுவார்கள்.

தமிழ் நாட்டில் மட்டுமே, தமிழ் படிக்கத் தெரிந்த, வாய்ப்பும், வசதியும் தமிழ் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட அன்பர்கள் நிச்சயம் ஒரு கோடி பேர் இருப்பார்கள். பிற மாநிலங்களில், நாடுகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் குறைந்தது 10 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்களை சென்று அடைய மலிவு விலை பதிப்புகள், மாத நாவல் போல, தொடர்ந்து வெளிவரும் தேவை  இருக்கிறது..

ராமசாமி தனசேகர்

***

அன்புள்ள ராமசாமி தனசேகர்,

உங்கள் எண்ணங்கள் நல்லவை, கணிப்புகள் ஆசை சார்ந்தவை. தமிழகத்தில் எதையேனும் வாசிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் மிஞ்சிப்போனால் ஒரு லட்சம்பேர் இருக்கலாம். தினத்தந்தியே இங்கே பத்துலட்சம் பிரதிகள்தான் செல்கிறது. தமிழகத்தில் தினத்தந்தி உட்பட நாளிதழ்களை ஒருமுறையேனும் தொட்டுப்பார்த்து தலைப்புகளை வாசிப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே ஐம்பதுலட்சத்துக்குள்தான் என்பதே அதிகாரபூர்வமான கணக்கு. அதனடிப்படையில்தான் விளம்பரங்கள் அளிக்கப்படுகின்றன. தமிழக மக்கள்தொகை பத்துகோடி. ஐந்து சதவீதம் பேருக்குத்தான் ஏதேனும் ஒரு நாளிதழையே வாசிப்பவர்கள். அவர்களில் ஏதேனும் ஒரு நூலை வாசிப்பவர்கள் ஒருலட்சம் என்பதேகூட கூடுதல்கணக்குதான்.

நூல்களின் விலை வாசிப்புக்கு தடையல்ல. உண்மையில் வாசிப்புக்கு ஆர்வமிருந்து நூல்களின் விலைகள்தான் தடை என்றால் இலவசமாக நூல்கள் அளிக்கப்படும் நூலகங்களில் கூட்டம் நெரிபடவேண்டுமே. தமிழகத்தின் பெரும்பாலான நூலகங்களில் ஒருநாளில் ஒருவர்கூட வந்து நூல்களை எடுப்பதில்லை. இது ஒரு பண்பாட்டுப்பிரச்சினை. இதை நூல்களை அளித்து எவரும் சரிசெய்ய முடியாது. பெரிய பண்பாட்டியக்கங்கள் நிகழ்ந்து அதனூடாகவே மாற்றம் வரமுடியும்

சும்மா யோசித்துப் பாருங்கள், உங்கள் சுற்றுப்புறத்தில் ஏதேனும் ஒரு நூலை எப்போதேனும் வாசித்த எத்தனை பேரை சந்தித்திருக்கிறீர்கள்?

-ஜெ

முந்தைய கட்டுரைஒளிமாசு- கடிதம்
அடுத்த கட்டுரைநீதிமன்றம், நீதிபதிகள் -கடிதம்