வெண்முரசு கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

எந்த ஒரு இந்திய வாசகனுக்கும் இருக்கும் பெரும் கனவு மகாபாரதத்தை அதன் முழு விரிவுடனும் ஆழமுடனும் இனிய மொழியில் வாசிப்பது. தமிழில் அது வெண்முரசு மூலம் அதை நீங்கள் வாசகர்களுக்கு அளித்திருக்கிறீர்கள்.  ஒவ்வொரு வகையிலும் இது மகத்தான மாபெரும் சாதனை.

வெண்முரசு வெளிவந்த நாளிலிருந்து நாளும் பலமணி நேரம் அதை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். வெவ்வேறு விதங்களில் – வெவ்வேறு பகுதிகளை இணைத்து முன்னும் பின்னும் . ஒவ்வொரு கதாபாத்திரமாக வாழ்ந்தும். ஆனால் நான் அதில் அடைந்தது என்ன என்பதை வெளிப்படுத்த இயலவில்லை. அதற்கான ஆணை எனக்கில்லை என்றே அதை எடுத்துக் கொண்டு கடந்து செல்கிறேன்.

வாழ்த்துக்கள்

இ.ஆர்.சங்கரன்

***

அன்புள்ள ஜெ

இந்நாளில் நான் வெண்முரசுக்காக உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். இலக்கியம் எனக்கு இருபது வயதிலிருந்து ஆரம்பம். ஆனால் எனக்கு தேவையானது வெறும் இலக்கியம் அல்ல. முழுமையாக என்னை மூழ்கடித்து வைத்திருக்கும் ஓர் உலகம். அது வெண்முரசால்தான் அமைந்தது. எட்டு ஆண்டுகளாக நான் அதில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். முதலில் தொடராக வாசிக்கையில் அதிலுள்ள நிகழ்ச்சிகளும் வர்ணனைகளும்தான் என்னை ஆட்கொண்டன. ஆனால் இன்றைக்கு அதை குறியீடுகளும் தத்துவங்களுமாக வாசிக்கிறேன்.

அர்ஜுனனின் பயணங்களைப் பற்றி வெண்முரசில் எழுதியிருந்ததைப் பற்றி அப்போது ஒருசிலர் அர்ஜுனன் அங்கெல்லாம் போயிருக்க முடியுமா, அங்கே போய் அப்படி எதைச் சாதித்தான் என்றெல்லாம் விவாதித்தார்கள். அப்போதே அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்று எனக்கு தோன்றியது. இப்போது வாசிக்கையில் வேதங்கள் தோன்றிய திசைகளை நோக்கித்தான் அர்ஜுனன் பயணம் செய்திருக்கிறான் என்பது புரிந்து ஒரு பெரிய திகைப்பு ஏற்படுகிறது. வேதங்களில் வாருணம் தோன்றிய பகுதி மேற்கே சாவுகடல் வரையும் ஐந்திரம் தோன்றிய பகுதி கிழக்கே பர்மா எல்லை வரையும் விரிந்திருக்கிறது. அந்த எல்லைகளை எல்லாம் சென்று தொட்டு நடுவே மையத்தில் அர்ஜுனன் பாசுபதத்தை கண்டுகொள்கிறான். வேதசாரமாக பாசுபதமே முன்வைக்கப்படுகிறது

ஒரு சைவனாக எனக்கு மயிர்க்கூச்செறியச் செய்த இடம் இது. அவ்வளவு பெரிய பயணத்தின் நடுவே கிராதனாக சிவன் உமையுடன் வந்து நிற்குமிடம். அதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் தெரிந்திருக்கவேண்டும். நம் மரபிலுள்ள குறியீடுகள், நம் மரபில் பேசப்பட்ட தத்துவங்கள் பற்றிய ஒரு அறிமுகம் வேண்டும். குறைந்தபட்சம் கேட்டுத்தெரிந்துகொள்ளும் மனசாவது வேண்டும்.

வெண்முரசிலேயே எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியும் என்று எனக்கு தோன்றுகிறது. வணக்கம்

பிரபாகர் கிருஷ்ணா

***

முந்தைய கட்டுரைநற்றுணை கலந்துரையாடல்.
அடுத்த கட்டுரைநீர்ச்சுடர் முன்பதிவு