தம்பி -கடிதம்

அன்பு ஜெ,

தம்பி சிறுகதை வாசித்து முடிக்கும்போது இரவு பத்து மணியாகியிருந்தது. அறையில் மழைவிழும் சத்தமும் இடியும் குளிரும் நடுக்கத்தை உணரச் செய்தது. மண்டையெங்கும் சிற்றீசல் ஊர்வது போன்ற பிரமை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இருளறையின் பயம் தொற்றிக் கொண்டது.

நான் சிறுவயதிலிருந்தே தனியாகத்தான் இருந்திருக்கிறேன். தனிமை தான் பெரும்பாலும் நான் விரும்புவது. ஆனால் தோல்விகள் தந்த அழுத்தம் தனிமையை வெறுக்கச் செய்தது. எப்போதும் ஒற்றையறையில் வெளிச்சத்தோடு புத்தகக் குவியல்களுக்கிடையே எந்த சிந்தனையுமில்லாமல் மிக நிம்மதியாக உறங்க முடியும் என்னால். தனிமையில் இருக்கும் இருளும் என்னை எதுவும் செய்ததில்லை.

ஆனால் அழுத்தங்கள் என்னை பிறழச்செய்யும் விடயத்தை நான் கண்கூடாகக் கண்டேன். நான் மனம் பிறழ்வடையவில்லை. ஆனால் அதன் முனையைக் கண்டேன். சற்றே அந்த முனையைத்தாண்டினால் ’நான்’ இரண்டாகப் பகுத்துக் கொண்டு பிறழ்வடையும் என்று கூட தோன்றியது. அண்ணா நகரில் Study hall -கள் மிகவும் பிரபலம். காலை ஆறு மணிக்குச் சென்றால் இரவு பத்து மணிக்கு தான் அறைக்கு வருவேன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இந்த சுழற்சிக்குள் இருந்தேன்.. இறுதிவருடம் இந்த பிறழ்வுத்தன்மையின் நுனியைக் கண்டேன். தனி அறை பயத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. புத்தகங்கள் இல்லாத அறைக்குள் நின்று கொண்டு கை நடுக்கத்தோடு மாமாவுக்கு கூப்பிடுவேன். அவன் “நான் இருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி தூங்குகிறேன் என்றே தெரியாமல் தூங்கி அதிகாலை எழுந்து மீண்டும் ஸ்டடி ஹாலுக்கு ஆறுமணிக்கெல்லாம் ஓடி விடுவேன்…

தேர்வு நெருங்கும் போது மேலும் மேலும் இந்தத் தூங்கும் நேரம் குறையும்.. இரவு ஒரு மணிக்கு இரண்டு மணிக்கெல்லாம் கூட அந்த 13வது மெயின் ரோட்டில் நடந்து கொண்டிருந்திருக்கிறோம். சின்னதும் பெரியதுமான எல்லா கடைகளிலும் டீ குடித்திருக்கிறோம். இந்த உலகத்தையே நாம் தான் மாற்றப் போகிறோம் என்ற அதீத நம்பிக்கை இருந்தது. அந்த நடு இரவில் தோழியோடு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள். “என்ன டீ. ஏன்” என்று தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கேட்டேன். “முடியல ரம்யா. இந்த பாதை எப்ப முடியும். எல்லாரும் என்ன விட்டு போய்ட்டாங்க. அவனும் கூட” என்றாள்.

போட்டித்தேர்வுகளுக்கு படிப்பவர்களை காதலிப்பவர்கள் போன ஜென்மத்தில் ஏதோ பாவம் செய்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென நான் நினைத்துக் கொள்வேன். எந்த மகிழ்வும் அல்லது சாதாரண காதலர்களுக்குக் கிடைக்கும் எந்த உணர்வெழுச்சியும் கிடைக்காத ஒரு உறவாகத்தான் இந்தக் காதல் அமையும். “எங்காவது உள்ளூற அவர் வேண்டாமென நினைத்தாயா?” என்று கேட்டேன். அவள் யோசித்து “ஆமாடீ. எதுவும் இந்த எக்ஸாமுக்கு தடையா இருக்கக்கூடாதுனு நினைச்சேன். இவ்வளவும் எதுக்கு ரம்யா. ஐ யாம் டையர்ட். வயசாகிட்டே போகுது வேற” என்று அழுதாள்.

இது போன்ற நேரங்களில் சமாதானம் செய்ய முடியாது. நான் இருக்கிறேன் என்று அணைத்துக் கொள்வது மட்டுமே. இன்று அவள் ஐ.ஏ.எஸ் ஆகிவிட்டாள். என் நண்பர்கள் பலரும் ஏதோ ஓர் வகையில் பெரிய பணிகளில் தான் இருக்கிறார்கள். ஆட்சிப்பணிக்குச் சென்ற நண்பர்கள், சீனியர்கள் என யாவரும் பெரும்பாலும் உணர்வது ஓரிரு வருடங்களுக்குப் பின்னான வெறுமை தான். இந்த கல்வி நிறுவனங்கள் காட்டும் மாயவலை ஒன்று அண்ணா நகரைச் சூழ்ந்துள்ளது. மூன்று நான்கு வருடங்களில் இந்த மாயச்சுழற்சியை புரிந்து கொண்டு பிற வேலைகளுக்குச் செல்லாமல் இருப்பவர்கள் மனச்சிதைவுக்கு ஆளாகிறார்கள். ஆணவ நிறைவுக்காக மாண்டு போகிறவர்கள் தான் அதிகம்.

இன்று திரும்பிப் பார்த்தால் அண்ணாநகரே ஒரு மாய நகரம் போல இருக்கிறது. அங்கு வேறொரு வாழ்க்கை வாழும் புற்று மனிதர்களாகிய நாங்கள் இருந்தோம். இருக்கிறோம். இருப்போம். எல்லா நேரங்களிலும் அண்ணா நகரைப் பார்த்திருக்கிறோம். இரவும் பகலும், நாளும் எங்களுக்கு பேதமில்லை. சமீபத்தில் புத்தகத் திருவிழாவை ஒட்டி அண்ணா நகர் சென்றேன். நண்பர்களைப் பார்ப்பதற்காக. வேலை கிடைத்தபின் அண்ணா நகரை காலி செய்த நண்பர்கள் தவிர மிச்சமுள்ள நண்பர்கள். கனிந்து முதிர்ந்த போதிசத்துவர்கள் போலத்தான் அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம். ஆனாலும் ஆழத்தில் அந்த பிறழ்வு பற்றிய அச்சம் என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.

இன்று நான் வேறோர் இடத்தில் நினறு அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். பொருள் கொள்ள முற்பட்டேன். ”இதுக்கெல்லாம் என்ன பொருள்” என்பது எப்போதும் நான் கேட்டுக் கொள்ளும் வினா. அதையே சரவணக்குமாரும் டாக்டரிடம் கேட்டபோது அவர், “மனித வாழ்க்கைக்கே என்ன பொருள்?” என்றார். உண்மையில் மீண்டும் இவற்றை நான் கேட்டுத்தான் கொள்கிறேன். எந்த விடையையும் கொண்டு என்னால் அமைய முடியவில்லை ஜெ.

மனித மனத்தை எதற்கும் பழகச்செய்யமுடியும். செயற்கையாகக் கொஞ்சினால்கூட மெல்லமெல்ல மனம் அதை பற்றிக்கொள்ள ஆரம்பித்துவிடும்

என்ற வரிகள் வந்தபோது இவற்றையெல்லாம் அசைபோட்டிருந்தேன். ஆம் மனத்தை பழக்கிவிட முடியும் என்று நினைத்துக் கொண்டேன். உறவுகளிலும், வாழ்க்கைப் பயணத்திலும் என எங்கும் இந்த உத்தியைக் கைக்கொள்ள முடியும். “மனம் விசித்திரமானது. ஆம்! அதை பழக்கிக் கொள்ள முடியும்” என்று சொல்லிக் கொண்டேன்.

மேலும் டாக்டர் சொல்லும் ஒரு வரி என்னை ஈர்த்தது “பழகுங்கள். செந்தில் மெதுவாக உங்கள் மீது சலிப்பு கொள்வான். உங்கள் பிரியம் உறுதியான பிறகு அவனுக்கு வேறு விஷயங்களில் ஆர்வம் திரும்பி விடும்” என்ற வரிகள். நான் இதை விரித்துக் கொண்டிருந்தேன் ஜெ. அப்படியானால் முழுமை கொண்டுவிடும் எந்த அன்பும் அமைந்துவிடுகிறது. சலிப்பென்னும் பாதை வழியாக அது தன்னை அங்கிருந்து நகர்த்திக் கொள்கிறது அல்லது ஒன்றாகிவிடுகிறது. நீண்ட காலம் இணக்கமாக வாழும் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் இருவரும் ஒருவரே என்று தோன்றுமளவு ஒரே மாதிரியான பாவனையைக் கொண்டிருப்பார்கள். சிரிப்பும், பேச்சுமென அவர்களின் முகச்சாயல் கூட ஒன்றாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

இந்த வரிகளின் எதிர்ப்புறத்தையும் சிந்தித்தேன். அப்படியானால் தீற்றலாக எஞ்சுபவை நிறைவடையாதவை தான். முழுமையாக சொல்லப்படாத காதல், அன்பு தான் தீற்றலாகிறது. நம் வாழ்க்கையில் நினைவுகளாக எஞ்சுபவை அவைதான். இனிமையும், வலியும் நிறைந்த அந்தத் தீற்றல்கள் யாவும் முழுமைகொள்ளாமல் தான் எஞ்சி நிற்கின்றன என்று தோன்றுகிறது. முழுமையாக கொடுக்கப்படாத போது, முழுமையாக பெறப்படாத போது அன்பு வலியைத்தருகிறது. முழுமையாக பகிர்ந்து கொள்ளப்படாமல், முழுமை செய்து கொள்ளாமல் அன்புக்குறியவர்களை மாற்றிக் கொண்டே இருப்பதால் வரும் வெறுமை, நிறைவின்மை ஆபத்து தான்.

கன்னியாக்குமரி நாவலின் ரவியை நினைத்துக் கொண்டேன். அவனின் நிறைவின்மை என்பது அது தான். கணவன் மனைவிக்குள் இந்த ஸ்வீட் மேட்னெஸ் இருக்க வேண்டும் என்பார்கள். தொடர்ந்து இந்த சலிக்கும் ஆடலை ஆடுவது. அதன் வழியாக மேலும் சலிப்படைந்து முழுமை கொள்வது. அமைந்துவிடுவது. அவரவர் வேலைகளைப் பார்க்க அதுவே உதவி புரியும் என்று கூறுவதன் உண்மையையும் இந்தப் பாதையின் வழி கண்டடைந்தேன்.

இறுதியாக உடற்குறை கொண்ட அண்ணனைப் பற்றிச் சொல்லும் போது “அவமதிப்பது அவனல்ல. வேறு யாரோ அல்லது எதுவோ. கடவுள் அல்லது இயற்கை”  எனும்போது டாக்டர் “அத்துடன் அவனது களங்கமற்ற பிரியம். அதுவும் உங்களை அவமதிப்பது போலத்தான்” என்கிறார். “உண்மை. அவனது இயல்பு என்னை மோசமான தந்திரக்காரனாக, குரூரமானவனாகவும் எனக்குக் காட்டியது” என்கிறான்.

உண்மையில் அப்படி அப்பட்டமாக கள்ளங்கபடமில்லாமல் அன்பு செய்யும் மனிதர்கள் மிகக் குறைவு என்றே நான் நினைக்கிறேன். எனக்கு எல்லாரும் அப்படி இருப்பதாகக் கூட சில சமயம் பிரமை உண்டு. எந்த அன்பையும் பிரித்தறிய என்னால் இயலாது. எதுவாயிருந்தாலும் அன்பு தானே என்று தோன்றும்.

சமீபத்தில் லஷ்மி மணிவண்ணனின் ஒரு கவிதை மிகப் பிடித்து, விரும்பி எழுதிப்பார்த்து ரசித்திருந்தேன்.

“அன்பு எப்படிக் கிடைத்தாலும் வாங்கு.

எதிர்பார்த்துக் கிடைத்தாலும் வாங்கு ஏமாற்றிக் கிடைத்தாலும் வாங்கு

போலியாகக் கிடைத்தாலும் வாங்கு

பொய்யென்றாலும் கிடைத்தாலும் வாங்கு

விலைக்குக் கிடைத்தாலும் பரவாயில்லை வாங்கி வைத்துக் கொள்”

பார்த்த மாத்திரத்தில் சாதாரணமாகத் தெரியக்கூடிய கவிதை தான். அதன் ஆழத்தில் இருப்பதோ பெருங்கருணை.

அதீத அன்பு ஏன் விலக்கம் கொடுக்கிறது என்று யோசித்திருக்கிறேன். அது நம் மனதில் உள்ள சிறுமை தான் என்று தோன்றுகிறது. பல சமயம் நான் அதற்குத் தகுதியில்லை என்று நகர்ந்து செல்வது. எப்போதும் கிடைத்திராத இடத்தை நோக்கிய இந்த அன்பும் பெருங்கருணையும் அலைகிறது. இதை நான் மீண்டும் இயற்கையின் சம நிலைமையின்மை தத்துவத்திற்கே ஒப்பிடுகிறேன். சமன்வயப்படாமல் இந்த அன்பு இல்லாத இடத்தை நோக்கியே கொடுத்துக் கொண்டும் விரும்பப்படாத இடத்திலிருந்து பெற்றுக் கொண்டும் இருக்கிறது. காயப்பட்டுக் கொள்கிறது. சமன்வயப்படாமல் காலங்காலமாக பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் உலகம் உயிர்ப்புடனிருக்கிறது. பெற முடியாத இடங்களில் எவ்வளவு கொடுக்க முடியுமோ கொடுத்துவிட்டு திரும்பிப்பாராமல் நகர்வதே நல்லது. நம்முடைய அனுபவம் என்று சுருக்கிக் கொண்டால் இங்கு வலியும் வேதனையுமே மிஞ்சுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் இது ஒரு சிறு ஆடல் மட்டுமே எனும் போது மயக்கமில்லை. காலங்காலமாக இந்த இனிமையும் வலியும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்றே தோன்றுகிறது.

அதீதங்கள் பிறழ்கின்றன. மாய்த்துக் கொள்கின்றன. ஆனால் உலகம் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. முன் தினம் ஒரு பெண்னின் தற்கொலைச் செய்தி எங்களை வந்தடைந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அவளும் அவள் குடும்பத்துப் பெண்களும் சேர்ந்து மாமாவைப் பார்க்க வந்திருந்தார்கள். ”அண்ணே அவன எப்படியாவது என்கூட வாழ வைக்க முடியுமா” என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.

என் மாமா வக்கீலுக்குரிய ஒரே தோரணையோடு “இல்லம்மா.. ஒன்னா வாழச்சொல்லலாம். அவன் மாட்டேன்னு சொன்னா அவன ஜெயில்ல போடலாம் அவ்ளோதான்” என்றார். அவள் மீண்டும் மீண்டும் “அண்ணே அவன் என்கூட வாழறென்னு சொன்னான்ண்ணா. எப்படியாவது சேர்த்து வைங்க. ரெண்டு வருஷம். அவனுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துட்டு போவேன். கல்யாணம் பண்ணிக்கிறேன். ரொம்ப பிடிக்கும்னு சொன்னாண்ணா. எடைல கூட சொன்னேன்.. வேணாம்னா சொல்லுன்னு. இல்ல கண்டிப்பா நாம ஒன்னா இருப்பம்னு சொன்னான்ண்ணா” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

”யாரையும் யார்கூடையும் சேர்ந்து வாழச்சொல்லிலாம் வர்புறுத்த முடியாதும்மா” என்று மீண்டும் மீண்டும் இவர் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு மணி நேரமாக இதே தான் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவளின் தாய் பொறுமையிழந்து அவளை ஓங்கி அறைந்து “சொன்னதையே சொல்லிக்கிட்டு திரியாத. அவன் சொன்னான் சொன்னாங்கியே அந்த நேரத்துக்குச் சொல்லியிருப்பான். உண்மையா ஒருத்தவுக மனசுக்குள்ள என்ன இருக்குனு கண்டுபிடிக்க முடியுமா. வெளில ஆயிரம் சொல்லலாம்” என்றாள் அழுதுகொண்டே.

அந்த வரிகள் எத்துனை உண்மையானவை ஜெ. எத்தனை சொற்கள்!!! உண்மையில் நாம் மயங்குவதும் தேங்குவதும் சொற்களில் தான். ஒருவருடைய மனதில் சத்தியத்திற்கு என்ன இருக்கிறது என்பது அவனைத்தவிர யாரும் அறிந்திராததது தான்.  அந்தப் பெண் அந்தக் காலத்தில் உறைந்துவிட்டாள். அந்த வார்த்தைகளில் உறைந்துவிட்டாள் என்று தோன்றுகிறது ஜெ. அவளுக்கு சாவைத்தவிர மீட்பில்லை என்று தோன்றுமளவு பிறழ்ந்துவிட்டாள்.

சரவணக்குமாருக்கும் இறப்பே மீட்பு என்று கருதுகிறேன். அவன் உறைந்திருப்பது கொலை செய்த அந்த கணத்தில்! அருவருப்பின் உணர்வுகளில்! இவர்கள் இறந்துவிடுவது அவர்கள் அனுபவிக்கும் உணர்வின் வலியைவிட இவர்களுக்கு நல்லது. மேலும் மேலும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். கேள்விகளும் பதில்களுமாக நிறைந்து கொண்டே இருக்கிறேன்.

அருமையான கதை ஜெ.

நன்றி.

ரம்யா.

முந்தைய கட்டுரைஇலக்கணம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுகள்