உரைத்தல்
அன்பின் ஜெ,
என்னுடைய கடிதத்தை உங்கள் தளத்தில் வெளியிட்டு, உரைத்தல் பற்றி கூடுதல் விவரங்களையும் பகிர்ந்து கொண்ட உங்கள் பதிவை (https://www.jeyamohan.in/164377/) வாசித்தேன். மிக்க நன்றி!
சிந்தனை சார்ந்த உரைகளுக்கு “பயிற்சி, திரும்பத்திரும்ப நிகழ்த்துவதுன் மூலம் செம்மையாக்கப்படுவது” போன்றவற்றையும் தாண்டிய ஒரு ஆழம் தேவைப்படுகிறது என்பது புரிகிறது.
இந்தப் பதிவில் (https://www.jeyamohan.in/164204/) உள்ள கடிதத்தில் திரு.செல்வக்குமார் குறிப்பிடுவதைப் போல, ஒர் எழுத்தாளன் நம் கண்முன் சிந்திப்பதைப் பார்பதென்பது அபூர்வமான அனுபவம்.
மேடை உரைகள், இயல்பான உரையாடல் போன்ற youtube உரைகள் , podcast போன்றவை வாசகர்களுக்கு இத்தகைய அனுபவங்களை மேலும் சாத்தியமாக்கியுள்ளன.
நீங்கள் பதிவில் கூறிய “எல்லா நல்ல வெளிபாடுகளும் எதிர்வினைகள் வழியாக மேம்படுத்திக் கொள்ளப்படுபவைதான்” என்பதும், “வெளிப்பாட்டு முறை பழகி வெளிப்படும் விஷயத்தை தீர்மானிக்கும் ஆற்றல் பெறும்போது அதைக் கைவிட்டு முன்னகர வேண்டும்” என்பதும் முக்கியமான பாடங்கள் என நினைக்கிறேன். இவை மேடைப்பேச்சுக்கு மட்டுமல்லாமல் பல விஷயங்களுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது.
நன்றி,
சதீஷ்.
***
ஜெ
உங்கள் உரையை நேரடியாய் முதலில் திருப்பூரில் பார்த்தேன்.
மொத்தமாக ஒரு உச்ச உணர்வு நிலையில் நீங்கள் இருந்தீர்கள் என பட்டது. காலமில்லா ஒரு இடத்தில் இருந்தபடி, ஒரு ஊசல் போல பெரும் காலத்தின்,- பெரும் பண்பாட்டின் -அதில் உள்ள இலக்கிய சில்ப ஆன்மீக என பல தளங்களை ஒரு வரைபடத்தை போல வரைய முயன்றது இந்த உரை என நினைத்து கொள்கிறேன். உரை முடிந்த பின், கூராக என்னவெல்லாம் சொல்லப்பட்டன என்று தொகுத்து கொள்ள முடியவில்லை ஆனால் அதை காட்டிலும் ஒரு பெரிய தரிசன தொடலை, ஆழமான ஒரு பயண அனுபவத்தை நிகழ்த்தி விட்டது இந்த உரை.
திருப்பூர் உரைக்கு பின் இந்த சிலநாட்கள் எவை இன்னமும் சுழன்று கொண்டு இருக்கின்றன என பார்த்து கொள்கிறேன்
– ஓர் இலையின் வடிவமைப்பு மற்றும் அதன் தாங்கு சக்தி பற்றிய சொற்கள்.
– மரத்திலிருந்து தூணுக்கும், தூண் பார்க்கையில் மறுபடியும் திரும்பும் அந்த பயணம்
– எப்போதும் உறங்கா அந்த புளிய மரம்
– சொட்டு பூவின்றி முழுதும் இலை மூடிய பருவம் முடிந்து, பூவால் மூடிய மரங்கள்
– கிட்டத்தட்ட மூவாயிரம் வருடங்கள் நீண்டபடி வரும் அறிவு இயக்கத்தின் மாற்றங்கள்.
– அம்பதாயிரம் வருடங்கள் முன் என்ற வார்த்தை. இடக்கல் குகை செதுக்கி பற்றி சொல்லும் போது.
– வறண்ட பகுதிகளில் குடியமைந்த விதங்கள்
இப்படி பறந்து விரிந்தபடி சென்றாலும் கால் வைக்கும் இடத்தில என எல்லாமும் நம் பண்பாட்டில் அடங்க வரும் விந்தை என உரை சென்றது. பண்பாடு எனும் விராடனை இரண்டு மணி நேரத்தில் பார்க்க வைத்தமைக்கு
நன்றிகளுடன்,
லிங்கராஜ்