எழுத்தாளனும் குற்றவாளியும்

எஸ்ரா பவுட்ண்ட் மூன்று முகங்கள்

என் குறைபாடுகள்

ஒரு கடிதத்தில் இலக்கியவாதியை திருடர்கள் கொலைக்காரர்கள் போன்ற ‘சமூக விரோதி’களுடன் ஒப்பிட்டிருந்தேன். இயல்பாக அமைந்த அந்த ஒப்பீடு மேலும் யோசிக்கச் செய்தது.

திருடர்கள், கொலைகாரர்கள், கொள்ளையர்கள் அடிப்படை உணர்ச்சியாகத் தன்னலம் மட்டுமே கொண்டவர்கள். தங்கள் மகிழ்ச்சிக்காகவும்  நுகர்வுக்காகவும் ஆணவநிறைவுக்காகவும் வெறுமே வன்முறைத் தினவை தீர்ப்பதற்காகவும் அவர்கள் பிறரை அழிக்கிறார்கள். பிறருடைய இருப்புக்கன உரிமையைக்கூட கருத்தில் கொள்வதில்லை. சமூகத்தின் ஒட்டுமொத்த நலன்களை எண்ணுவதே இல்லை. அந்த தன்னலத்தைன் தண்டனை என சமூகம் எதிர்கொள்கிறது. முரண்படுபவனை முழு வீச்சாலும் அழிக்கிறது.

திரும்பத் திரும்ப குற்றவாளிகளின் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிறைவாக மகிழ்ச்சியாக வாழ்ந்த குற்றவாளி என்பவன் மிகமிக அரிதானவன். தன்னுடைய இயல்பான குற்றத்தன்மையால் அவன் குற்றங்களில் ஈடுபடுகிறான். அது ஒரு அடிப்படைக் குணாதிசயமாக அவனில் இருக்கிறது. அவனால் வேறொன்றைச் செய்ய இயலாது என்பதனால்தான் அவன் குற்றவாளியாக இருக்கிறான். நான் ஏன் எழுத்தாளனாக இருக்கிறேனோ அதைப்போல.

உழைப்பதும் சேமிப்பதும் குற்றவாளியின் இயல்பில் இருக்காது. ஏனென்றால் அதில் அவனுக்கு இன்பம் இல்லை. ஆ.மாதவனின் ஒரு கதையில் உழைத்துக் கிடைக்கும் ஆயிரம் ரூபாயை விட ஏமாற்றி கிடைக்கும் நூறு ரூபாயில் மகிழும் குற்றவாளியின் மனநிலை பதிவாகியிருக்கும். எவருக்காயினும் தன் தனித்திறன் வெளிப்படும்போதே மகிழ்வு உருவாகிறது. ஏனென்றால் அந்த புள்ளியில்தான் அவன் முழுமையாகக் குவிகிறான். குற்றவாளிகள் குற்றங்களில் திளைக்கிறார்கள். செய்த குற்றங்களைச் சொல்லிச் சொல்லி பெருக்கிக் கொள்கிறார்கள். செய்யாத குற்றங்களை கற்பனைசெய்துகொள்கிறார்கள். வேறு  எதைப்பற்றியும் அவர்கள் பேசுவதில்லை.

பெரும்பாலான குற்றவாளிகளுக்கு ‘நாளை’ இல்லை. ஆகவே கையில் கிடைத்தவற்றை உடனடியாகச் செலவுசெய்துவிடுகிறார்கள். தனக்கான இன்பத்துடன் வாழ்தல், அதன் பொருட்டு சூழலிலிருந்து முடிந்தவரை அனைத்தையும் எடுத்துக்கொள்ளுதல் என்பதே அவர்களின்  இயல்பாக இருக்கிறது. அது அவர்களின் உறவுகள் அனைத்தையும் வன்முறை கொண்டதாக ஆக்குகிறது. அவர்கள் எப்போதும் எந்நிலையிலும் கொள்ளையடிப்பவர்கள், சூறையாடுபவர்கள். மனைவியையும் குழந்தைகளையும்கூட கொள்ளையடிக்க தயங்க மாட்டார்கள்.

குடும்பத்தைப் பேணிய, குழந்தைகளுக்காக வாழ்ந்த குற்றவாளியை பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னார். அவர்கள் வேண்டுமென்றால் அவனுடன் ஒட்டிக்கொண்டு வாழலாம், அவ்வளவுதான். அது இயல்பு என நான் சொன்னேன். ஏனென்றால் அவன் அடிப்படையில் தன்னலம் மட்டுமே கொண்டவன். அவனை செயல்படச்செய்யும் இசை அது.

குற்றவாளி தன் தனித்திறனாலோ கூர்மையாலோ தற்காலிகமாக  சமூகத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால் சமூகம் மிக மிக பிரமாண்டமானது. அது ஒருபோதும் அவனை வாழ விடுவதில்லை.அது அவனைச் சூழ்ந்து இறூக்கிக்கொண்டே இருக்க்கும். மெல்லமெல்ல, பிடிவாதமாக, அவன் இடத்தைக் குறுக்கும். அவனை சமூகவெளிக்குள் ஒரு கண்காணாச் சிறைக்குள் அடைக்கும். அவனை அழுத்தி நெரித்து உடைக்கும். அவன் சிதைந்து அழிகிறான்.

குற்றவாளிக்கு மிகத் தற்காலிகமான ஒரு கொண்டாட்டம் மட்டுமே உள்ளது என்பது கண்கூடு. இருந்தும் குற்றவாளிகளை சமூகம் உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. இரு காரணங்கள்.

ஒன்று, தன்னலம் என்பது ஒரு இயற்கையான உந்துதல். ஒவ்வொரு மனிதனிடம் தன்னலமும் சமூகத்தன்மையும் இணையாக உள்ளன. சமூகத்தன்மை ஓங்கி தன்னலத்தை அதன் ஒரு பகுதியாக அமைத்துக்கொள்பவன் வென்று செல்கையில் சமூகத்தன்மையை முற்றாக இழந்துவிடுபவன்  குற்றவாளியாகி அழிகிறான்.

இரண்டு, இயற்கைக்கு குற்றவாளி எவ்வகையிலோ தேவைப்படுகிறான். அந்த தொடர்ச்சி அறுபடாதிருக்கவேண்டும் என அது எண்ணுகிறது. குற்றம் என்பது சாகசத்தன்மைதான். சமூகத்துக்கு ஒவ்வாத சாகசமே குற்றமெனப்படுகிறது.  திருட்டு கொலை எல்லாமே ஏற்கப்பட்ட களங்களில் நிகழும்போது வீரமென்று கொண்டாடப்படுகின்றன.எல்லா வீரயுகப் பாடல்களும் திருட்டையும் கொலையையும் கொண்டாடுபவைதான் – அந்த திருட்டும் கொலையும் அச்சமூகத்திற்கு வெளியே உள்ளவர்கள்மேல் நிகழ்த்தப்படுகின்றன, அவ்வளவுதான். மிகத்தொன்மையான போர்க்குடிகள் போரே இல்லாத சூழலில் கொடிய குற்றவாளிகளாக ஆகி தங்கள் சமூகத்தை கொள்ளையிடுவதை வரலாறு காட்டுகிறது  -உதாரணம் தக்கர்கள்.

குற்றவாளிகளை ஓர் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு செல்கள் என்று சொல்லலாம். அன்னியர்களை அழிக்கும் வீரம் அவற்றின் இயல்பு. அவை அந்த உடலையே அழிக்க ஆரம்பிக்கையில் நோயை உருவாக்குகின்றன. உடல் அவற்றை அழிக்கவேண்டியிருக்கிறது.

இக்காரணத்தால்தான் இயற்கை குற்றவாளிகள் என்னும் தன்னலவாதிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அவர்களில் காமம் நுரைப்பதும் அவர்களை நோக்கி பெண்கள் திரண்டு செல்வதும் அதனால்தான். அவர்கள் தங்கள் மரபணுக்களை தீவிரமாக நிலைநிறுத்திவிட்டே செல்கிறார்கள். அவர்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறார்கள்.

எழுத்தாளன், கலைஞன் குற்றவாளிக்கு மிக அணுக்கமாக இருக்கிறான். ஆகவேதான் இலக்கியங்களில் எப்போதுமே குற்றவாளிகள் கனிவுடன் பார்க்கப்படுகிறார்கள். பெரும்பாலான படைப்புகளில் குற்றவாளிகளின் தரப்பு மிக அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது. குற்றவாளிகளே பெரும் படைப்பாளிகளாக இருப்பதும் அரிதாக நிகழத்தான் செய்கிறது- ழீன் ழெனே போல. குற்றவாளி படைப்பாளியாக ஆவதும் வரலாறெங்கும் பதிவாகியுள்ளது- வான்மீகி போல

ஏனென்றால் குற்றவாளியிடம் இருக்கும் அதே முழுத்தன்னலம் என்பது படைப்பாளியிடமும் இருக்கிறது. வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் இச்சைக்கு பிற அனைத்தையுமே இரையாகக் கொடுப்பவனாக அவன் இருக்கிறான். தனது குடும்பத்தை அதற்கு பயன்படுத்திக் கொள்கிறான். தனது புரவலர்களை தயக்கமில்லாமல் அதன் பொருட்டு உறிஞ்சுகிறான். தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தின் நலன், அதன் பொதுஉணர்வுகளைப்பற்றி அக்கறையே படாமல் இருக்கிறான்.

மிகக்கொடிய சூழல்களில் கூட எழுதும்பொருட்டு தன்னை தகவமைத்துக் கொள்பவனாக எழுத்தாளன் இருக்கிறான். புகழ் பெற்ற சோவியத் கதையொன்றில் ஓவியக்கலைஞன் வதைமுகாமில் அடைக்கப்படுகிறன். ஓவியம் வரையும் பொழுதை ஈட்டிக்கொள்வதற்காக தன்னுடைய சிறிய அறைக்குள் இன்னொருவனை பேசிப்பேசிக் கரைத்து மனம் மாறச் செய்து அவனை தன் வேலையைச் சேர்த்து செய்ய வைத்த்பின் இவன் வரைந்துகொண்டே இருக்கிறான். கரியால் சுவர்களில், பழைய காகிதங்களில் அவன் வரையும் ஓவியங்களும் அழிந்துவிடுகின்றன. ஒரு கட்டத்தில் குளிரிலும் கடும்உழைப்பாலும் அந்த உதவி செய்தவன் செத்துவிடுகிறான். ஓவியன் அதைப்பற்றி அவன் கவலைப்படுவதில்லை. தொடர்ந்து இன்னொரு இரையை பிடிப்பதில் தான் அவன் முயல்கிறான். குரூரமான கதையாயினும் அது பெரும்பாலும் உண்மையாக இருக்கிறது.

தனிவாழ்க்கைகளைப் பார்க்கையில் பெரும் கலைஞர்களின் வாழ்க்கை குற்றவாளிகளின் வாழ்க்கைக்கு மிக அணுக்கமானதாகவே தெரிகிறது. எட்கார் ஆலன் போ போன்றவர்கள் ஏறத்தாழ குற்றவாளிகளின் வாழ்க்கையையே வாழ்ந்தனர். தன் எழுத்துவாழ்க்கைக்கு குழந்தை தடையாக ஆகும் என எண்ணிய எஸ்ரா பவுண்ட் தனக்கு பிறக்கும் குழந்தைகளை வளர்க்கும்படி எவரிடமேனும் அளித்துவிடவேண்டும் என்கிறார். மிகக்குறைவான ஊதியம் அளித்து குழந்தையை கையளிக்கும்படி அவற்றின் அன்னையிடம் சொல்கிறார்.

இவ்வளவுக்கும் அவருடைய மனைவியல்லாத ஓல்கா(Olga Rudge) அவரால் கருவுற்று அவரைப் பின்தொடர்ந்து இத்தாலி வரைக்கும் செல்கிறார். ஓல்காவை பவுண்ட் பாலியல் ரீதியாகச் சுரண்டுகிறார். சார்த்ர் உட்பட ஐரோப்பிய இலக்கியமேதைகளின் தனிவாழ்க்கை திருடர்களுடைய வாழ்க்கைக்குச் சமனாமானதுதான் என தோன்றுகிறது. எழுத்து ஒன்றுதான் அவர்களை வேறுபடுத்துகிறது.

முதுமையில் ஆளுமை உடைந்து அரைக்கிறுக்கனாக அமெரிக்கா திரும்பும் எஸ்ரா பவுண்டின் படத்தை பார்க்கையில் குற்றவாளியின் வாழ்க்கையின் இயல்பான முடிவுதானே என்றும் தோன்றுகிறது

ஜெ

***

முந்தைய கட்டுரைவிளையாடும் ஏரி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசை தொடங்குவது…