ஞானபீடம், தமிழ் புறக்கணிக்கப்படுகிறதா?

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி

வணக்கம் ஜெ,

ஞானபீட விருது கடைசியாக தமிழ் எழுத்தாளர்களுள் ஜெயகாந்தன் அவர்களுக்கு 2002-ல் தரப்பட்டது.

அதுவே தாமதம்தான்.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகியும் இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் சாதனை புரிந்த எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்படவில்லை.

1.தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறார்களா?

2.தமிழ் எழுத்தாளர்கள் நிலைதான் மற்ற மொழி எழுத்தாளர்களுக்குமா?

3.ஞானபீட விருது இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு தற்போது அரசியல் நோக்கத்திற்காகவே தரப்படுகிறது என்றே நினைக்கிறேன்.

இது பற்றிய உங்கள் கருத்தை அறிய விளைகிறேன்.

அ.பழனிசாமி

மேட்டூர்,சேலம்

அன்புள்ள பழனிச்சாமி

ஞானபீடம் பற்றி முன்னரே நிறைய எழுதிவிட்டேன்.

தகுதியான படைப்புகளை எழுதிய முதன்மைப் படைப்பாளியை நம் கல்வித்துறை, இதழ்கள், அரசுசார் அமைப்புகள் ஒன்றாக முன்வைக்கவேண்டும். அவரைப் பற்றி பல்கலைக்கழக ஆய்வேடுகள்வேண்டும். கருத்தரங்குகள் நடத்தப்படவேண்டும். ஆய்வடங்கல்கள் தயாரிக்கப்படவேண்டும். தமிழகத்தின் பெரிய விருதுகள் அனைத்தும் அவருக்கு கிடைத்திருக்கவேண்டும். தமிழக அரசியல்வாதிகள் அவரை சிபாரிசு செய்யவேண்டும்.

ஆனால் இங்கே தகுதியற்ற, எல்லா தரப்பிலும் காக்காய்பிடிக்கும், நபர்க:ள்தான் கல்வித்துறையால், அரசு சார் அமைப்புகளால், அரசியல்வாதிகளால் முன்னிறுத்தப்படுகிறார்கள். அவர்கள் ஞானபீடம் வரை சிபாரிசுகள் செய்யப்படுகிறார்கள். அங்கே அவர்கள் தகுதியில்லை என நிராகரிக்கப்படுகிறார்கள்.

அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் ஆகியோர் அனைத்து வகைகளிலும் தகுதியானவர்களாக இருந்தனர். அவர்கள் இங்குள்ள சாதியரசியலால் ஏற்கப்படவில்லை. இன்று எல்லா வாய்ப்புகளும் கொண்டவராக இருப்பவர் இந்திரா பார்த்தசாரதி. ஆனால் நம் கல்வியமைப்புகள் அவரை முன்னிறுத்துவதில்லை.

நமக்கு இலக்கிய அளவுகோல்கள் இல்லை. சாதி, கட்சி அளவுகோல்களே உள்ளன. அவற்றை தங்களுக்காகப் பயன்படுத்துபவர்களே நம்மில் முந்தி தெரிகிறார்கள். நாம் இவற்றுக்கு அப்பால் என்று இலக்கிய அளவுகோல்களின்படி தகுதியான படைப்பாளிகளை நம் அடையாளங்களாகக் கொண்டு ஒருங்கிணைந்து உலகின் முன் நிறுத்துகிறோமோ அன்றுதான் விருதுகள் தேடிவரும்.

மாறாக ஊடுபாதைகள் வழியாக தகுதியற்றோர் விருதுபெற்றால் அது நமக்கே இழிவு

ஜெ

கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை

கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள்

ஞானபீடம்

முந்தைய கட்டுரைஒளிமாசு- பதில்
அடுத்த கட்டுரைநிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி