அன்பின் ஜெ.மோ,
நீங்கள் நலமாக இருப்பதாக நம்புகிறேன். உங்கள் எழுத்தைப் போல் உங்கள் காணொளிப் பேச்சையும் நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. கிளாசிக் வகை நாவல் பற்றி நீங்கள் பேசிய முழு காணொளியும் யூடியூபில் காண நேர்ந்தது. ஆனாலும் இன்னும் எளிதாக புரியும்படி நீண்ட நாட்காளாய் உங்களோடு கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.
சுருக்கென்று உங்களோடு கேட்டு தெரிந்து கொள்ள மூன்று கேள்விகள் உள்ளது. ஏற்கெனவே அதைப்பற்றி எழுதி இருந்தால் அதன் இணைப்பையும் பதிலில் சேர்த்து வைத்தால் பயனாக இருக்கும்.
- ஒரு நாவல் கிளாசிக் வகையை சார்ந்தது என்று எதன் அடிப்படை வைத்து வகைபடுத்தப் படுகிறது ?
- ஆபாசம் என்று எதையும் ஒதுக்கி வைக்க இயலாது தான், என்றாலும் கூட சொற்களில் ஒரு வரைமுறையே இல்லாமல்
சகட்டு மேனிக்கு கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி இது தான் எதார்த்தம் என்று சொல்லிக் கொண்டு புத்தகங்கள் அச்சிற்கு வருவது சரிதானா ?
இதனை மக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளும்
நாள் வருமா ? அல்லது இதில் நான் தான் பின்தங்கி உள்ளேனா ?
விளையாட்டாய் இன்னும் ஒரு கொசுறு கேள்வி.
நீங்கள் ஏன் புனைப்பெயரில் எழுதவில்லை. உங்கள் பார்வையில் புனைப்பெயரில் எழுதுவது பற்றியும் நீங்கள் புனைப் பெயர் வைத்திருந்தால் என்ன பெயர் வைத்திருப்பீர்கள் ?
அன்புடன்,
ஷம்ஸ்
அன்புள்ள ஷம்ஸ்
ஒரு செவ்வியல் படைப்பை எப்படிக் கண்டடைவது?
’ஒரு செவ்வியல் படைப்பு அதைப் படிக்கும்போது அது ஒரு செவ்வியல்படைப்பென்று நம்மிடம் சொல்லும், அதனூடாக’ என்று எளிதாகச் சொல்லலாம். நாமே சாதாரணமாகப் பேசும்போது சிலவற்றை ‘கிளாசிக்!” என்று வியந்து சொல்லாமலிருப்பதில்லை. செவ்வியல் என்றாலென்ன என்று அனைவருக்குமே தெரியும்.
ஏனென்றால் செவ்வியல்தான் நமக்கு முதலில் அறிமுகமாகிறது. ராமாயணமோ மகாபாரதமோ சிலப்பதிகாரமோ. மக்கள் முதலில் பழகுவதே செவ்வியலுக்குத்தான். நவீன இலக்கியத்தை பழகத்தால் தனிப்பயிற்சி தேவையாகிறது. ஒரு நல்ல சினிமாவைப் பார்த்ததும் ‘சும்மா அப்டியே காவியம் மாதிரி எடுத்திருக்கான்” என்று சொல்கிறோம். நாம் காவியங்களை நேரடியாக படித்திருக்க மாட்டோம். ஆனால் நமக்கு அதன் அழகியல் தெரிந்திருக்கிறது.
செவ்வியல் என்பது இருவகை. தொல்செவ்வியல் என்பது ஒரு பண்பாட்டில் முதலில் தோன்றியது, அதன் அடிப்படையாகவே இருப்பது. அந்த மொழியில் பின்னர் உருவாக இருக்கும் அனைத்துவகை எழுத்துகளையும் தன்னில் கொண்ட தொன்மையான நூல்களின் தொகுப்பு அது. தமிழில் சங்க இலக்கியம் தொல்செவ்வியல். சங்க இலக்கியத்தில் இன்றைய நாவல், இன்றைய சிறுகதை, பிற்பாடு வந்த காப்பியங்கள் அனைத்துமே ஏதோ ஒரு உருவில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழிலக்கியத்தின் வேர்நிலம் அது.
பிற்காலச் செவ்வியலை பேரிலக்கியம் என்றும் சொல்வதுண்டு. சில பண்புக்கூறுகளை செவ்விலக்கியத்துக்கென மேலை இலக்கிய மரபு வகுக்கிறது. ஆனால் அது உலகம் முழுக்க உள்ள செவ்விலக்கியத்துக்குப் பொருந்தாது. ஆனால் சில அடிப்படைக்கூறுகளை நாம் வகுத்துக்கொள்ளலாம்
செவ்வியல் பண்பு என்பது மூன்று ஆதாரப் பண்புகள் கொண்டது.
அ. சமநிலைத்தன்மை
கற்பனாவாத படைப்புகள் போல ஒரு நேர்நிலை உச்சத்தை நோக்கி செவ்வியல் படைப்பு பொங்கி எழாது. அதில் ஒற்றை உச்சநிலை இருக்காது. ஒன்றை மட்டும் மையமென கொண்டு அதை நோக்கி உணர்ச்சிப்பெருக்குடன் செல்லாது. இலட்சியவாதம் போன்ற நேரிநிலையான உச்சமோ, நவீன இலக்கியத்திலுள்ள அவநம்பிக்கைவாதமோ அதில் ஒற்றைப்படையாக முன்வைக்கப்பட்டிருப்பதில்லை.
எழுச்சியும் வீழ்ச்சியும், ஒளியும் இருளும் கொண்டதாகவே செவ்வியல் படைப்பு இருக்கும் ஒவ்வொன்றும் இன்னொன்றால் நிகர் செய்யப்பட்டிருக்கும். அதன் மையம் என நாம் அறிவவது அதில் சொல்லப்பட்டுள்ள ஒன்றையொன்று மறுக்கும் தரப்புகள் நடுவே ஒரு சமநிலைப்புள்ளியாக உருவாகி வருவதாகவே இருக்கும். அந்த சமநிலைத்தன்மை ஒரு படைப்பில் இருந்தால் அது செவ்வியல்
ஆ. தொகுப்புத்தன்மை
ஒரு செவ்வியல் படைப்பு அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை கொண்டிருக்கும். சமநிலையை அடைவதன் பொருட்டு அது அந்த உள்ளடக்கும் தன்மையை கொள்கிறது. ஒரு வாழ்க்கையை சொல்லும்போது அவ்வாழ்க்கையிலுள்ள அனைத்துக் கூறுகளையும் தன்னுள் உள்ளடக்க முயலும். தன் பார்வையின் பொருட்டு ஒன்றைச் சொல்லி பிறிதொன்றை விட்டுவிடாது. ஒரு கோணத்தை முன்வைக்கையில் அதற்கு எதிர்கோணத்தை குறைக்கவோ மறைக்கவோ முயலாது.
உதாரணமாக மகாபாரதம் ஒரு போர்க்காவியம். வீரர்களை பாடுகிறது. ஆனால் போரின் அழிவுகள், தீங்குகள் அனைத்தையும் அது சொல்கிறது. போரின் அழிவுகளை முன்வைக்கும் போரும் அமைதியும் (தல்ஸ்தோய்) மகத்தான வீரச்செயல்களையும் சொல்கிறது.
ஆகவே பெரும்பாலான செவ்வியல் படைப்புகள் எதையும் சொல்லாமல் ஒரு வாழ்க்கையை திரையை விரிப்பவை மட்டுமே என்று தோன்றுகின்றன. அதிலிருந்து நாம் உருவாக்கிக்கொள்ளும் எல்லா எண்ணங்களும் நம்முடையவை மட்டுமே என்று தோன்றுகின்றன. ஒரு செவ்வியல் படைப்பிலிருந்து ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்வதென்பது மிகக்கடினமானது. ஏனெனில் அக்கருத்துக்கு எதிரான எல்லாத் தரப்பையும் அதுவே சொல்லி வைத்திருக்கும். அதிலிருந்து மீண்டும் மீண்டும் நாம் எண்ணி பொறுக்கிச் சேர்த்தே நம் கருத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது.
இ. என்றுமுள தன்மை
செவ்வியல் படைப்பு குறிப்பிட்ட காலம், இடம் சார்ந்ததாக இருக்காது. குறிப்பிட்ட கால இடத்திலிருந்து அது தொடங்கியிருக்கும். ஆனால் ஏதோ ஒரு வகையில் அது மானுட பொதுத் தன்மையை, காலாதீதமான தன்மையைக் கொண்டிருக்கும். இன்று பேசப்படும் விஷயங்கள் நாளை வழக்கொழியும் என்று அதற்குத் தெரியும். என்றுமுள ஒன்றைப் பேசும்போதுதான் செவ்வியல் உருவாகிறது. ஆகவேதான் ஒழுக்கம் சார்ந்த சிக்கல்களை எடுத்துக்கொண்டு பேசும் ஒரு படைப்பு செவ்வியலாக இருக்க இயலாது. ஒழுக்கநெறிகள் மிக எளிதில் மாறுபவை.
மோகமுள் ஒரு கற்பனாவாதப்படைப்பு .அது எழுதப்பட்ட காலகட்டத்தில் யமுனாவுக்கும் பாபுவுக்குமான உறவு அளித்த பரவசத்தையோ, அல்லது திகைப்பையோ ,அல்லது ஒவ்வாமையையோ இன்று அளிப்பதில்லை. இன்று அந்த உறவு மிகச் சாதாரணமான ஒன்றாக வாசகனுக்குத் தோன்றுகிறது. ஆனால் அன்னா கரீனினா ஒரு செவ்வியல் படைப்பு. அன்னா கரீனினா அன்னாவுக்கும் விராட்ஸ்கிக்கும் இருந்த திருமணம் மீறிய உறவைப்பற்றிய நாவல் மட்டுமல்ல, அங்கு தொடங்கி மனித உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் ஏதேனும் வரைமுறைகள் உண்டா என்ற அடிப்படையான என்றுமுள வினாவை நோக்கி அது சென்றுவிடுகிறது. அவ்வண்ணம் அது எழுந்துவிட்டால் மட்டுமே அது செவ்வியல் படைப்பு.
எல்லாக்கால கட்டத்திலும் செவ்வியல் படைப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. செவ்வியல் படைப்புகளே பிற படைப்புகளை அளவிடும் அளவுகோல்களை உருவாக்குகின்றன
கெட்டவார்த்தைகள் படைப்பில் இடம்பெறலாமா?
இலக்கியத்தில் எல்லாமே இடம்பெறலாம். இலக்கியம் வாழ்க்கையைப் பேசுகிறது. ஆகவே வாழ்க்கையில் இருக்கும் ஒன்றை இலக்கியத்தில் தேவையில்லை என ஒதுக்க முடியாது. சட்டம்போட்டாலும் அது நடைமுறைக்கு வராது.
மனிதர்கள் இன்னின்ன விஷயங்களைப் பேசக்கூடாது என்று எவரேனும் சட்டம்போட முடியுமா? சட்டம்போட்டால் ரகசியமாகப் பேசுவார்கள். நினைக்கக்கூடாது என்று சொல்லமுடியுமா? இலக்கியமும் மனிதனின் இயல்பான பேச்சு, எண்ண ஓட்டம்போலத்தான். மொழியில் பதிவுசெய்யப்படுகிறது என்பதே வேறுபாடு.
நாம் பார்க்கவேண்டியது, அந்தச் சொற்கள் அப்படைப்பில் ஆற்றும் பங்களிப்பென்ன என்பதே. பல காரணங்களுக்காக அச்சொற்கள் இலக்கியப்படைப்பில் வரலாம்.
அ. ஒரு சூழலில் வாழும் மக்களை உண்மைபோலவே காட்ட அம்மக்கள் பேசும் சொற்கள் இலக்கியத்தில் இடம்பெறலாம்.
ஆ. ஒரு குணாச்சித்திரத்தின் கோபம்,சலிப்பு, ஆங்காரம், மனதின் இருள் ஆகியவற்றை வெளிப்படுத்த அச்சொற்கள் வரலாம்
இ. பகடிக்காக அச்சொற்கள் பயன்படுத்தப்படலாம்
இந்த தேவைகள் ஏதுமில்லாமல் வாசகனுக்கு அதிர்ச்சியூட்டவேண்டும் என்னும் நோக்கத்துடன் அச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது கலைக்குறைபாடு என்றே கொள்ளப்படும்.
பிகு: புனைபெயருக்கு தேவை இருக்கவில்லை. என் பெயரே ஒரு புனைபெயராக என் அம்மாவால் வைக்கப்பட்டது.
ஜெ
https://www.catawiki.com/en/stories/5875-what-is-classical-art