அன்புள்ள ஜெ
நேற்று நம் தளத்தில் லௌகீக திபெத் என்ற தலைப்பில் கடலூர் சீனு அண்ணன் குறிப்பிட்டு எழுதி பரிந்துரைத்த பழைய ஆவணப்படத்தை பார்த்தேன். நாமறியும் மெய்ஞானமும் மாயமும் அற்ற திபெத்தின் அன்றாடம். அந்த மலைமுடிகளை போலவே அவையும் ஒரு அழகிய தியானம் போல உள்ளன.
ஐம்பது நிமிடம் ஓடும் படம் அவர்களின் வாழ்க்கையை மிக இயல்பாக காட்டி செல்கிறது. எந்த சலிப்பும் இல்லாமல் பார்க்க முடிகிறது. முக்கியமாக பின்னணி இசையை சேர்க்காமல் அச்சூழலின் ஒலி மட்டுமே பின்னே ஒலிக்கும்படி எடுத்திருப்பது பொருத்தமாக இருக்கிறது. படத்தின் இறுதி காட்சிகளில் சிறுவர்கள் பனியில் சறுக்கி விளையாடும் பொழுது நினைத்துகொண்டேன், மானுடன் எங்கும் இன்பமாக இருக்க முடியும், பொருளல்ல அதனோடு நாம் கொள்ளும் இசைவே இன்பத்தை உருவாக்குகிறது. அறியாத தொலைநிலத்து வாழ்க்கையை வாழ்ந்தவொரு நிறைவு.
அந்த வாழ்க்கையின் மையமாக திகழ்வது யாக் எருமைகளே. அவற்றின் சாணம் பிறிதெங்கும் அத்தனை மதிப்புடன் பயன்படுத்தப்படாது என நினைக்கிறேன். அடுப்பு மெழுகுவதில் ஆரம்பித்து மிஸ்டிக் நாய்களுக்கு வீடு கட்டுவது, இறைச்சியை பாதுகாக்க அறை அமைப்பது, நெருப்புக்கான விறகாவது, அதன் எரிந்த சாம்பலில் இருந்து குதிரையின் கண் நோய்க்கு மருந்து எடுப்பதுவரை எல்லாமுமாக விளங்குகிறது. யாக்கே அவர்களின் முதன்மை செல்வம், பால், உணவு என விளங்குகிறது.
அந்த சாணத்தில் இருந்து சிறுவர்களுக்கு பொம்மை செய்கையில் எங்கும் வாழ வைப்பவற்றையே களிப்பாவைகளாக்கி கொஞ்சி மகிழ்கிறோம் என நினைத்து கொண்டேன்.
அன்புடன்
சக்திவேல்