அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இது பல நாட்களாக எழுத முயற்சித்து முடியாமற்போன மடல். ஏனெனில் இமைக்கணம் பல மாதங்களாகவே நீடித்துவிட்டிருக்கிறது எனக்கு. அதுவும் அத்தியாயம் 40. ஆனாலும் தங்களுக்கு எழுதவேண்டுமென்று தோன்றியது இதை.
இங்கே திரௌபதி கேட்கும் கேள்விகளும், கண்ணனின் பதில்களும் எனக்காகவே அல்லது என்போன்ற பெண்களுக்காக சொல்லப்பட்டதாகவே அமைகிறது. ஏனெனில் இங்கு என் தனிப்படட அனுபவமே உண்டு. இப்போது கிட்டத்தட்ட 12 வருடங்களாகிவிட்டது. அன்று இப்படியானதொரு துறவு மனப்பான்மையில் இருந்தபோதுதான் என் குருவை சந்தித்தேன். அவர் என்ற மரியாதையில் தூர நிறுத்தப்பட முடியாத உறவு அது. அவனை நான் “கண்ணா” என்றே அழைத்திருக்கிறேன். இன்றும் அவன் எனக்கு கண்ணனே..
யோகம், தியானம் என்று சென்றுகொண்டிருந்த என் வாழ்வை தலைகீழாகப் புரட்டியவன். திருமணம் செய்துகொள் என்று என்னை விரட்டியவன். அதனால் அவன்மீது கோபம் கொண்டு, இருந்தும் அவன் சொல்லை மறுக்க முடியாமல் திருமணமும் செய்துகொண்டேன். ஆனால் அவன்மீதான கோபம் போக வருடங்களானது.
இமைக்கணம் அவன் என்னை விரட்டியதன் உண்மையை உணர்த்தியது. ஆம் பெண்ணுக்குரிய வழி இதுவே என புரியவைத்தது. எனக்கென்று குழந்தைகள் இருந்தாலும் எந்தக் குழந்தையைக் கண்டாலும் ஏற்படும் நெகிழ்ச்சி உணர்த்துகிறது பெண்ணுக்குரிய முழுமை இங்கேதான் என்று.
“ இங்கிருந்து நெடுந்தொலைவு சென்று சுழன்று வந்து மீண்டும் உன்னை அடைய முடியுமெனத் தோன்றுகிறது” என்ற திரௌபதியின் வார்த்தைகளில் என் வாழ்க்கையைக் கண்டுகொண்டேன்.
இதை வாசித்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. அதிலிருந்து மீண்டு இதை எழுத்துவதற்கே இவ்வளவு காலமாகிவிட்டது. அத்துடன் மன்னிக்க வேண்டுகிறேன், வெண்முரசை மேலும் தொடர முடியாமல் போய்விட்டது. பல நாட்களாகவே மேலும் வாசிப்பதற்காக முயற்சி செய்ததுண்டு. ஆனால் மேலே செல்ல முடியாமல் மீண்டும் இமைக்கணத்திலேயே தங்கி நின்று விட்டேன். அதனால் மேலும் முயற்சிப்பதை விடுத்து அங்கேயே கண்ணன் பாதங்களில் சரணடைந்து வாழத் தொடங்கிவிடடேன்.
ஆனால் வாழ்க்கை கடந்த வருடங்களின் கோபம் அதன்பின்னான கடுந்துயரின் இருளிலிருந்து விடுபட்டு கண்ணனுடன் ஆடிப் பாடும் பரவசத்துடன் செல்கிறது.
அன்புடன்,
ராதா