அந்த இன்னொருவர்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே,

எனக்கு வயது 26 சமீப நாட்களாக தான் நல்ல இலக்கியங்களை நோக்கி செல்ல தொடங்கி இருக்கிறேன் அதில் தங்களின் பங்கும் நிறைய உண்டு. அதற்கு நன்றி.

என் கேள்வி,  ஒவ்வொரு எழுத்தாளரையும் எழுத்தையும் விட சிறப்பானதாக வேறொரு புதிய எழுத்தாளரின் எழுத்து எல்லா வகையிலும் முன்னகர்ந்து புத்திலக்கியம் உருவாவது காலங்காலமாக உண்டாகி வரும் இலக்கிய மாற்றங்களில் ஒன்று. ஆனால் தங்களின் இலக்கிய பங்களிப்பை கணக்கிடும் போது இனி இப்படி ஒரு எழுத்தாளர் சாத்தியமா என்பது எனக்கு ஐயமாகவே தோன்றும்.

வெண்முரசு நாவல் வரிசையின் முதல் நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவில் தாங்கள் ஆற்றிய உரையில் “எனக்கு பின்னால் என்னை சிறிதாக்க கூடிய ஒரு படைப்பாளி வருவான் என்று நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு” என்றீர்கள்.  நான் மிக ரசித்து வியந்த பேச்சு அது. அதனால் எப்போதும் எனக்கு நினைவிருக்கும் ஏற்புரைகளில் அதுவும் உண்டு.

அந்த படைப்பாளி எத்தகையானவராக இருக்க வேண்டும் என்று ஏதாவது வரையறை உண்டா? உதாரணமாக வெண்முரசு மாதிரியான நீண்ட நெடிய இலக்கியம் படைக்கிறவராக இருக்க வேண்டுமா ?

அப்படி ஒன்று வேறொருவரால் இனி சாத்தியம் என்று நம்புகிறீர்களா ?

அன்புடன்,

ச.மதன்குமார்.

***

அன்புள்ள மதன்குமார்,

இலக்கியத்தில் ஒரு முதன்மையான படைப்பாளி தோன்றும்போது அவன் தனக்குரிய வாசகச் சூழலை, வாசிப்பு முறையை தானே உருவாக்கிக்கொள்கிறான். அவனுக்குரிய கருத்தியல் மண்டலத்தையே கட்டமைத்துக்கொள்கிறான். இரண்டாம் நிலை படைப்பாளிகளே ஏற்கனவே இருக்கும் சூழலை வாசகப்பரப்பை, வாசிப்பு முறையை, கருத்தியல் மண்டலத்தை ஒட்டி எழுதுபவர்கள். இரண்டாம்நிலை படைப்பாளிகளும் முன்னகர்பவர்களே, ஆனால் அவர்களின் வழிமுறை உடைப்பு அல்ல. மெல்லிய விரிவாக்கம் மட்டுமே. வேர்களின் பரவுதல்போல ஓசையற்றது அது.

முதல்நிலைப் படைப்பாளி ஒரு மீறலுடன், ஓர் உடைவென எழுகிறான். அவனுக்கான களம் ஏற்கனவே அங்கே இருப்பதில்லை.. முதன்மைப் படைப்பாளிகளை எப்போதும் அதுவரை வந்தடைந்து, அப்போது நிறைந்திருக்கும் படைப்பாளிகளை முன்வைத்தே சூழலில் உள்ளோர் மறுதலிப்பார்கள். அவன் அதுவரை இருந்த அனைத்தையுமே முற்றாக மறுத்து ஒன்றை உருவாக்குவான். அல்லது அவை அனைத்தையுமே விமர்சித்து, அவற்றிலிருந்து தனக்குரியதை எடுத்துக் கொண்டு, அவற்றை ஒட்டுமொத்தமாக தொகுத்து முடைந்து தன் உலகத்தை உருவாக்குவான்.

அவனுடைய படைப்புகள் அவனே உருவாக்கிய மாபெரும் அடித்தளத்தின் மேல் அமைந்திருக்கும். ஒரு வாசகன் அவனுக்குள்ளேயே முழுமையாக வாழ இடமிருக்கும். அவனுக்குரிய ஏற்பு மறுப்புமாக சூழல் நிறைந்திருக்கும். ஆகவேதான் பெரும்படைப்பாளிகள் உருவானதுமே வாசக சூழலில் ஒரு திகைப்பு உருவாகிறது. அடுத்து வரும் படைப்பாளிகள் அந்த வாசக சூழலுக்குள் இருந்து வருவார்களா, அதற்குள் நின்றபடி அவர்கள் எழுதுவார்களா என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அவ்வாறு நிகழவேண்டுமென்பதில்லை. இன்னொரு படைப்பாளி வரும்போது அவனும் அதேபோல முந்தையவற்றை நிராகரித்து தனக்குரிய உலகை உருவாக்கலாம். அதிலிருந்து சாரத்தை எடுத்து மறு ஆக்கம் செய்து தனக்கு உருவாக்கலாம்.

ஆனால் ஒரு பெரும்படைப்பாளிக்கு இன்னொரு பெரும்படைப்பாளியே எதிர்நிலை அல்லது அடுத்த நிலை என்றில்லை. மிக மெலிதாக, அணைகளை உடைக்கும் நண்டுவளைகள் போல அவன் உருவாக்கியவற்றை உடைந்து கரைந்தழிக்கும் படைப்பாளிகள் பலர் நிகழலாம். எல்லை கடப்பதே அறியாமல் எல்லையை உடைத்து மீறி முன்செல்லும் படைப்பாளிகளும் உண்டு. சிறிய அளவில் அவர்களின் படைப்பியக்கம் நிகழ்ந்தாலும் அவர்களும் முன்னகர்பவர்களே.

பண்பாடும் காலமும் என்றும் அசைவில்லாது நின்றிருக்காது. எவரையும் இறுதியாகக் கொள்ளவும் செய்யாது. புதியவை நிகழ்வதற்கான விதிகள் முன்னர் நிகழ்ந்தவற்றில் இருப்பதில்லை. ஷேக்ஸ்பியரை அதுவரைக்குமான ஐரோப்பிய கவிமரபை வைத்து புரிந்துகொள்ள முடியாது. ஷேக்ஸ்பியர் உருவாவதற்கு முந்தைய கணம் வரை ஷேக்ஸ்பியர் உருவாவதற்கான எந்தக்காரணமும் இல்லை. ஷேக்ஸ்பியர் காவியங்களை எழுதியிருக்க வேண்டியவர். ஆனால் அவர் நாடகங்கள் வழியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். அவ்வண்ணம் நாடகங்கள் மூலமாக ஒரு பெருங்கவி நிகழ முடியுமென்பது ஐரோப்பாவிற்குச் சற்று புதிது. ஆனால் அவருடைய வேர்கள் இருந்தது கிரேக்க மரபில்.

ஒரு மரபில் எல்லாத்தலைமுறைகளிலும் எல்லாக்காலகட்டத்திலும் பெரும்படைப்பாளி இருந்தாக வேண்டுமென்றில்லை.  நிகழவில்லை என்றால் இலக்கியம் தேங்கிவிட்ட தென்றும் பொருள் இல்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ்க்குப்பிறகு மொத்த பிரிட்டிஷ் இலக்கியத்திலும் பெரும்படைப்பாளி என்று எவருமில்லை. ஆகவே நிகழும் என்று சொல்கையில் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பையே குறிப்பிடுகிறோம்.

ஆனால் அவன் இன்னார் என முந்தைய தலைமுறையினன் சொல்லக்கூடாது. தன்னைப்போன்ற அவன் சுட்டிக்காட்டக்கூடும். எழுந்து வருபவன் அவ்வாறு இருக்க வேண்டிய தேவை இல்லை. தன்னை வரையறுத்து எழுந்த ஒருவர் தனது எதிர்காலத்தையும் வரைறுத்துவிட்டு போவது பொருளற்றது. தன் சூழலை உருவாக்கியவர் அது இயல்பாக வளர்ந்து அடுத்த சூழலை உருவாக்கட்டும், அதில் அடுத்த படைப்பாளி எழட்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே கொண்டிருக்கவேண்டும்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஅறிவியக்கம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோவை சொல்முகம் வாசகர் குழுமம்,16