குமரித்துறைவியின் தருணம்

அன்புள்ள ஜெ,

இரவு முழுவதுமான பயணக் களைப்பிலிருந்து “விமானம் சற்றுநேரத்தில் தரையிறங்க இருக்கிறது”‘ என்ற அறிவிப்பில் விழித்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். பஞ்சு பஞ்சாகத் திரளாத மேகம் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தின் மணற்சாலைபோல மூடியிருந்தது.

இருக்கையை ஒழுங்குசெய்து பொருட்களை எடுத்துவைத்து திரும்பும் நேரத்தில் மேகத்தைத் தாண்டி விமானம் கீழே இறங்கியிருந்தது.

ஜன்னலைத் தாண்டிய இயல்பான பார்வையின் ஒரு கணத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்கள் நான்கும் அதனை அடுத்த உள் கோபுரங்களும் சட்டென கண்களுக்குள் தோன்றி மனதில் பரவசத்தை நிறைத்தது.

அன்னையே உன் காலடிக்கு வருகிறேன் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன். கட்டிக்கொண்டிருக்கும் வீட்டை ஒட்டிய ஒரு பகுதியை சிறு கடைகளாக வடிவமைத்து முடியும் நிலையில் இருந்தது. நான் வருவதால் அதைமட்டும் தொடங்கிவிடுவோம் என்று எங்கள் என்ஜினீயர் சொன்னார்.

அதை கணபதி ஹோமத்தோடு நடத்த வேண்டும் என்று குடும்பத்தினர் விருப்பப் பட்டனர். அதுதான் மரபு என்றார்கள்.

முன்பென்றால் வேண்டாம் என உறுதியாக நின்றிருப்பேன்.

உங்களுடைய பழைய “தலித் இலக்கியம் மரபை ஏற்பது/மறுப்பது” குறித்தான கேள்விக்கான பதில் ஒன்றை வாசித்தபிறகு சடங்குகளின் மீதான என் பார்வை வெகுவாக மாறியிருந்தது.

“ஞானம் மானுடகுலத்துக்கு உரியது என்றும் அதை நிராகரிப்பதன் மூலமல்ல; என்றும் மேலெடுப்பதன் மூலமே முன்னேற்றம் சாத்தியம் என்றும் நாராயணகுரு சொன்னார். ஒரு சமூகத்தின் அறிவார்ந்த வெற்றியே அதன் சமூக அதிகாரம் என்றார் ‘அறிவுக்கு குறுக்குவழிகள் இல்லை’ என்ற அவரது உபதேசம் முக்கியமானது. தன்னைப் பின்பற்றியவர்களிடம் வேதங்கள், உபநிடதங்கள், இந்தியத் தத்துவங்கள், சம்ஸ்கிருத மலையாளக் காவியங்கள், தமிழிலக்கிய மரபு அனைத்துமே அவர்கள் பாரம்பரியம் என்றுதான் நாராயணகுரு சொன்னார்.”

அதன் பின்பு தேங்காய் உடைப்பது, எலுமிச்சம் பழத்தை வெட்டி, குங்குமத்தில் தடவி பிழிந்து விடுவது போன்ற சடங்குகள் வேறு அர்த்தங்கள் கொடுக்க ஆரம்பித்தது.

என் திருமணத்திற்கும் இல்லாத புரோகிதம் முதன் முதலாக என் சார்ந்த ஒரு நிகழ்வில் ஏற்பாடு செய்தோம்.

அதற்கான முன் வேலைகள் நடந்துகொண்டிருந்த வேளையில் பாலா “மாமா உங்களுக்காக” என்று கையில் வைத்திருந்த புத்தகத்தைத் தந்தான்.

“பழனிவேல் ராஜாவுக்கு
அன்புடன்
ஜெயமோகன்”
என்று கையெழுத்திடப்பட்ட குமரித்துறைவி.

புதிய வாசகர் சந்திப்பில் பாலா, உங்களிடம் எனக்காக வாங்கியது. பரவசத்தில் மனம் குளிர்ந்துவிட்டது.

இதைவிட வேறு எந்தப் பரிசு என்னை மிதக்க வைத்திருக்கும்? அன்னை மீனாட்சியின் அருள், அத்தோடு ஆசிரியர்களின் ஆசி.

மந்திரங்கள் முழங்க, குமரித்துறைவியின் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.

அடுத்த மூன்று நாட்களில் கிளம்பி மறுபடியும் என் பணியுலகிற்கு வந்துவிட்டேன்.

அன்புடன்
சி. பழனிவேல் ராஜா.

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைசெவ்வியல், விதிகள்
அடுத்த கட்டுரைதிருப்பூர் கௌசிகா நதி (திரு வெண் ஆற்றங்கரை ) பசுமை நடை