எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது நண்பர்களோடு 2013-ஆம் ஆண்டு காலகட்டதில் சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரா போன்ற இடங்களிலுள்ள குகைகளை காண சென்ற பொழுது அவர் நிம்மதி இழந்து இருந்ததாகவும், குகைகளின் உள்ளே பயணிக்கும் பொழுது மேலே மலைகள், காடுகள் எண்ணற்ற ஊர்கள் என இருப்பதும் அதன் பொருட்டு குகைகளில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் பயணிப்பது போல் ஒரு உணர்வு வந்ததாக கூறுகின்றார். மேலும் தொலைத்தொடர்புத் துறையில் அவர் பணிபுரிந்து வந்த காலத்தில் வட கேரளாவில் கோலிகோட்டில் தொலைபேசி அமைக்க நிலம் தோண்டும்போது ரகசிய சுரங்கப்பாதை ஒன்றை ஊழியர்கள் கண்டறிந்ததாகவும் அது சாமுந்திரி /போர்ச்சுகீசிய காலகட்டத்தில் தோண்டப்பட்டு பல்வேறு நகரங்களை இணைப்பதாக நீண்டு விரிந்து செல்வதாகவும் சொல்ப்பட்டது எனவும், அதை யாரும் பொருட்படுத்தாமல் செய்தியாகக் கூட வெளியாகாமல் நின்று போனது என்றும் குறிப்பிடுகின்றார்.
இன்று நாம் நடமாடிக் கொண்டிருக்கும் இடங்களிலும் அதற்கு கீழேயும் மன்னர் ஆட்சியின் போது தோண்டப்பட்ட எண்ணற்ற சுரங்கப்பாதைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கலாம் அல்லது இருளடைந்து இருக்கலாம் இன்னும் எத்தனை உயிர்கள் ஜீவித்துகொண்டு இருக்கலாம் என்று கூறும் ஆசிரியர், இந்த குறுநாவல் என்பது ஒவ்வொரு நபருக்குமான நமக்குள் உள்ள நமக்கு மட்டுமே தெரிந்த குகை வழியை பற்றியது என்று குறிப்பிடுகின்றார்.
குகை – குறுநாவல் ஆனது, நீண்ட காலமாக சொந்த வீடு வாங்கவேண்டும் என்று இருந்த ஒரு குடும்பம் பழமையான ஒரு வீட்டினை விலைக்கு பெற்று அதில் குடியேறுகின்றனர். அதில் மனப்பிறழ்வு கொண்ட ஒருவன் அல்லது உளவியல் உட்கூறுகளின் தாக்கத்தால் பீடித்து மன மிதவை கொண்டிருக்கும் ஒருவன் அந்த வீட்டின் ஒரு அறையில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் எழுகின்றது. இந்த நாவலின் முழுவதும் கிடைக்கின்றது கதையுன் பிரதான மாந்தன் மனச்சிதைவு கொண்டவன் போலவே உணரத் தோன்றுகின்றது. அதன்பொருட்டு அந்த அறையில் அவன் தனித்து இருக்கும் நேரங்களில் ஏதோ ஒரு பயம் அவனை தொற்றிக்கொள்கிறது. இருப்பினும் போகப்போக அது அவனுக்கு பிடித்தமாய் ஆகின்றது. அவன் தங்கியிருக்கும் அறையின் கீழ் ஒரு சுரங்கம் இருப்பதை அவன் கண்டு உணர்கிறான். அதனை, அவன் வீட்டில் உள்ள நபர்கள் எவருக்கும் சொல்லாமல் தவிர்க்கின்றான். சொன்னால் கூட அவன் மனநிலையை பொறுத்து அவர்கள் யாரும் நம்ப வாய்ப்பில்லை என்று எண்ணுகிறான்.
இப்படியாய் அவன் இரவு நேரங்களில் அந்த சுரங்கத்தில் நுழைந்து தூக்கத்தை விடுத்து மருந்துகளை உட்கொள்ளாமல் சுரங்கத்தின் உள்ளேயே இரவு நேரங்கள் முழுவதுமாய் பயணம் மேற்கொள்கின்றான். விடியும் நேரம் சரியாக அவன் வந்த பாதையிலேயே மீண்டும் தன் அறையினை அடைந்து பகல் முழுக்க உறங்குகிறான். இவ்வாறு நித்தம் சுரங்கத்தில் பயணித்து ஒவ்வொரு வீட்டின் அறைக்கு கீழேயும் இருந்து கொண்டு அவர்கள் கேட்கும் இசையை, பேசும் சொற்களை உற்றுநோக்கி அங்கேயே உறங்கிக் கிடக்கிறான். அதிலேயே திளைத்து கிடக்கிறான்.
அதே குகைகளில் பல நாட்கள் சுற்றி வரும் தருவாயில் பழங்கால ஆங்கில உடைகளை அணிந்துகொண்டு சிலரை சந்திக்க முற்படுகிறான். அவர்களிடம் பேசுகிறான் இதுவரை தனியாகவே இருப்பதாக எண்ணிய அவனுக்கு இங்கும் ஆட்கள் இருப்பதால் நிம்மதி ஒன்று கிடைக்கிறது. அவ்வாறு வயது முதிர்ந்த ஆங்கிலேயர் ஒருவர் இவனை யாரிடமும் பேச வேண்டாம் என்று எச்சரித்து செல்கின்றார்.
இவ்வாறு ஒரு நாள் ஒரு அறைக்கு கீழே அவன் அமர்ந்திருக்கும் பொழுது மேலே சென்று பார்த்தால் எண்ண என்ற எண்ணம் வர, அந்த வீட்டின் அறைக்குள் நுழைந்து விடுகிறான், அது ஒரு தம்பதியரின் படுக்கை அறையாக இருப்பதை காண்கின்றான். இவனையும் அவர்கள் கண்டு கொண்டு விரட்ட முயல்கின்றனர். இவன் அது சமயம் ஒரே படபடப்பு நிறைந்து பதறி அடித்துக்கொண்டு சுரங்கத்தில் நுழைந்து பழையபடி வீட்டிற்கு வர முயல்கின்றான். ஆனால் இதுநாள் வரை பாதை மாறாமல் வந்த அவனுக்கு அன்று பாதையை மறந்து தவிக்கின்றான்.
இக்கதை இத்தோடு முடிகின்றது. ஆனால் இக்கதையில் வருகின்ற சுரங்கத்தில் அவன் சந்திக்கும் நபர்கள் இவனைப் போன்று சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு வழியை தேடி அலைகின்றனரா என்ற கேள்வியும், மனச்சிதைவு கொண்ட ஒருவன் இவ்வாறு தன் வீட்டிற்கு கீழ் சுரங்கம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு பயணிப்பதாக எண்ணுகின்றானா? என்ற பலவாறான சிந்தனைகள் வாசிக்கையில் வாசகனாய் எனகுள் தானாகவே எழுகின்றது.
இந்த கதையை வாசிக்கும் பொழுது இக்கதையின் நிகழ்வுகள் உண்மையிலேயே சாத்தியமானதா என்ற ஒரு குழப்பம் எழுகிறது. சாத்தியம் எனில் எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. எது எப்படியாகிலும் வாசகன் என்ற வகையில் பல்வேறு கேள்விகள் என் மனக்குகைக்குள் எழுகிறது. அதற்கான பதிலையும் அதனூடாகவே சென்று தேடுகிறது. ஒவ்வொரு வாசகனுக்கும் வாசிக்கும் பொழுது இவ்வாறே மனதில் தோன்றுமா என பல்வேறு வினாக்கள் எழுகின்றது.
இன்றும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில்களின் பிரதான மண்டபங்களில் இருந்து சுரங்கங்கள் செல்வதாகவும், அது பல கிலோமீட்டர்கள் உள்ள பெரும் நகரங்களை இணைப்பதாகவும் இன்றும் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றனர். இன்று ஒருவேளை அதனை காண்பதற்கான வாய்ப்பு கிடைத்தால், பார்ப்பதற்காக அனைவரும் வரிசையில் நின்று முண்டிக்கொண்டு இருப்போம் என்பது என்னவோ உண்மைதான்.
கலைகார்ல்மார்க்ஸ்
திருவாரூர்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307