வாடிவாசல் வாசிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்புக்கு அருகில் இருக்கும் சேதுநாராயணபுரம் அந்த நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு பிரபலம். ஊருக்கு அருகில் இருக்கும் சதுரகிரி மலையடிவாரத்திலும் அதன் அருகில் இருக்கும் “ஓனாக் குட்டம்’ “ஆனைக் குட்டம்” போன்ற சிறு குன்றுகளிலும் மேய்க்கப்படும் “பளிஞ்சி” (மலை மக்கள் பளியர்கள்) மாட்டுக் காளைகள் ஜல்லிக்கட்டுக்கு ஏற்றது.

மலையில் வளர்வதால் அதன் கால்கள் பலம் கொண்டு, பழகாத மனிதர்களை கிட்டத்தில் அண்டவிடாமல் (சிறிய கன்றிலிருந்து கையில் பிடித்து வளர்க்கப்படும் காளைகளும் இருந்தது) ஜல்லிக்கட்டுக்கு உரிய இலக்கணங்களை இயல்பாகக் கொண்டிருந்தது.

https://www.vikatan.com/oddities/miscellaneous/__01e459003d2542b3b29325aae9959aa3__9398-virudhunagar-jallikattu

எங்களூரில் மேய்ச்சல் மற்றும் காவல் சாதிகள் நிலவுடமை கொண்டதாக மாறியபோது பளிஞ்சி மாடுகள் வளர்ப்பது அவர்களின் அந்தஸ்த்தின் அம்சமாக இருந்தது. ஜல்லிக்கட்டின்போது அவர்கள் அனைவருக்குள்ளும் வெளித்தெரியாத போட்டிகள் மாடுகளை வைத்து நடக்கும். மதுரை, திருச்சி போன்ற வெளியூர்களில் இருந்தும் ஏராளமான காளைகள் வரும்.

கல்லூரியில் படிக்கும் காலம்வரை வாடிவாசலுக்கு அருகில் இருக்கும் காரை வீட்டு மாடியில் நிரம்பி வழியும் கூட்டத்தில் ஒருவனாக கரும்பைக் கடித்துக் கொண்டே ரசிக்கும் வாய்ப்பைத் தவற விடுவதே இல்லை. உரசிக்கொண்டிருக்கும் சாதிகளுக்குள் “பற்றி” கொள்ளும் வாய்ப்பிருந்ததால் சில சமயம் கல்லுரி விடுதியிலிருந்து வர வேண்டாம் என்று கட்டுப்படுத்தப் பட்டதும் உண்டு.

அப்போதெல்லாம் தைமாதத்திற்கு முன்பாகவே அறுவடை ஆரம்பித்துவிடும், அறுவடை செய்த நிலத்தில் மலையிலிருந்து “பளிஞ்சி” மாடுகளை இறக்கி, நிலம் நிறைத்து “கிடை” அமர்த்துவார்கள். “இரண்டுநாள் கிடை” “மூன்று நாள் கிடை” என்று அடுத்த போகத்திற்கு முன்னேற்பாடுகள் நடக்கும்.

ஜல்லிக்கு நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே காளைகளை “சுருக்காங்’ கயிறுகளை வீசி அதன் தரத்தைப் பொறுத்து “மூன்று கட்டு” “நான்கு கட்டு” கட்டி பிரித்து வைப்பார்கள். சுட்டியான கன்றுகள் அடையாளம் காணப்பட்டு கைக்காளையாக வளர்க்க அழைத்துவரப்படுவதும் உண்டு.

ஜல்லிக்கட்டு ஆரம்பிப்பதற்கு முன்பு கிராம தெய்வத்தை வணங்கி அலங்கரிக்கப்பட்ட கோவில் காளை முன்னாள் வர மூங்கில்குச்சிகள் வைத்துப் பூசாரிகள் ஆடிவருவார்கள். அவர்கள் வந்தவுடன் கோவில் காளை முதலாவதாக விடப்பட்டு ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கும்.

சி. சு. செல்லப்பா அவர்களின் “வாடிவாசல்” அந்த நினைவுகளை எழுப்பி துல்லியமான காட்சிப்படுத்தல் மூலமாக மறுபடியும் அந்த வாழ்க்கையைக் கிளறியது. நாவலில் வரும் மொக்கையாத் தேவர், பிச்சி, அம்புலித்தேவர் எல்லாம் உயிரோடு எனக்குமுன் இருந்தவர்கள்.

மாடுகளை வாடிவாசல் வரை கொண்டுவந்துஅது செல்லவேண்டிய இடத்திற்கு வழிகாட்டும் நிகழ்வு, “பெயர்பெற்ற” காளைகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்துவரும் சிறப்பு, முதன் முதலாக விடப்படும் கோவில் காளையை யாரும் அணையாமல் தொட்டுக் கும்பிடுவது, தொழுவதத்துள் உள்ள காளைகளை வாடிவாசல் கட்டிய பலகைகள் நடுவில் உள்ள ஓட்டைகள் வழியாக மாடணைபவர்கள் கவனித்துக்கொண்டே இருப்பது, நின்று விளையாடும் “மதிப்பு மிகுந்த” காளைகள் என மிக நுணுக்கமான தகவல்களுடன் காரை வீட்டு மாடியில் இருந்தது போன்ற பரபரப்புடன் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.

பிச்சியைப் போல எங்களூரில் சில “தேர்ந்த” காளைகளை அணைய வருடக்கணக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்தார்கள். அதற்கு அவர்களும் ஒரு சில காரணங்கள் வைத்திருந்தனர். மாடணைபவருக்கு வெறும் துண்டு மட்டுமே அந்த நாட்களில் பரிசாகக் கொடுக்கப்பட்டது. பரிசாகக் கிடைக்கும் துண்டை எண்ணிக்கை சொல்லி பெருமைப்படுவார்கள்.

அணைகொடுத்த காளைகளுக்கு மதிப்பு குறையும். தொடர்ந்து அணைகொடுக்கும் காளைகளுக்கு இணை காளைகள் அடையாளம் காணப்பட்டு, காயடித்து (இப்போது காயடிப்பதில் வலிகுறைந்த எளிதான முறை வந்துவிட்டது. அன்றெல்லாம் காயடிப்பது கொட்டைகளை நசுக்குவதுதான்), வசக்கி உழவுக்கும் செக்குக்கும், கமலை ஏற்றத்திற்கும் கொண்டுசெல்வார்கள். வசக்குவதில் காயடிப்பு, தலைகீழ் V வடிவ கட்டைகளைக் கழுத்தில் தொங்கவிடுதல், குறைந்த உணவு கொடுப்பது என்று பல படிநிலைகள் இருந்தது.

ஒரு மலைமாடு ஜல்லிக்கட்டு காளையாகி வண்டி மாடாகி, கமலை இழுக்கும் மாடாக வருவது ஒரு பயணம். அந்த சங்கிலித் தொகுப்பில் ஜல்லிக்கட்டு ஒரு கண்ணி. அது காளைகளைத் தேர்ந்தெடுக்கும் இடமாகவும் இருந்தது. ஜல்லிக்குப் பிறகு அநேக காளைகள் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்குக் கைமாறும். சில பத்து வருடங்களுக்கு முன்பு மனிதக் காளைகளையும் அங்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

கால மாற்றத்தில் இந்த சங்கிலித் தொகுப்பில் பல கண்ணிகள் உடைந்து இப்போது ஒரு தொன்மம்போல ஏனோதானோ என்று எப்போதாவது நடக்கிறது.வாடிவாசல் நாவலில் ஜமீன் தனது “காரி” காளை அணைகொடுத்ததும் கொன்றுவிடுகிறார்.

எங்கள் பகுதியில் மாட்டைக் கொல்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது (எங்கள் ஊரில் ஜமீன்தார்கள் இல்லை, நிலச் சுவான்தார்கள் மட்டுமே). மாடுகளைக் கொல்வது எங்கள் ஊர் நம்பிக்கையின் படி பரம்பரை பரம்பரையாகத் தொடரும் “பாவம்”.  அணைகொடுத்த காளைகள் வசக்கப்பட்டு ஏர் மாடாகவோ செக்கு மாடாகவோதான் மாற்றப்படும்.

“வாடிவாசல்” விறுவிறுப்பான ஜல்லிக்கட்டை கண்முன் கொண்டுவரும், எடுத்தால் வைக்கவிடாமல் வாசிக்க வைத்த நாவல்.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி -சில கேள்விகள்
அடுத்த கட்டுரைபோளச்சனும் ஔசேப்பச்சனும்-கடிதங்கள்