பறவைகளின் வானம்

விசும்பு அறிவியல் கதைகள் தொகுதி வாங்க

அன்புள்ள ஜெ,

வணக்கம். பறவைகள் திசையறியும் விதம் குறித்த இந்த ஆய்வுக்கட்டுரை கண்டபின்  உங்கள் நினைவு வந்தது. எவ்வாறு மின்காந்த அலைகள் அவற்றைப் பாதிக்கிறதென்பது குறித்தும் எழுதியிருக்கிறார்கள்.

How Migrating Birds Use Quantum Effects to Navigate

விஜயகுமார்

அன்புள்ள விஜயகுமார்,

விசும்பு சிறுகதை 2005 திண்ணை இணைய இதழில் வெளிவந்தது. 2006ல் பி.கே.சிவக்குமார் முன்னுரையுடன் எனி இண்டியன் பதிப்பகத்தில் இருந்து தொகுப்பாக வெளிவந்தது. அதன்பின் பல பதிப்புகள்

அக்கதை வெளிவந்தபோது அந்தக்கால ‘அறிவியலாளர்’ (என்ன, ஒரு எம்.எஸ்.சி வாங்கியிருப்பார்கள்) பறவைகளுக்கு அப்படி மின்காந்த அலைகளை கண்டறியும் புலன்களெல்லாம் இல்லை (அதாவது கல்லூரிப் பாடத்தில் அப்படிச் சொல்லப்படவில்லை) என ஆவேசமாக மறுத்திருந்தனர். அப்படி ஒரு புலன் ஒரு பறவைக்கு இருப்பதை அறிவியல் ஆவணப்படுத்தவில்லை, மற்ற உயிர்களைப்போல கண்காதுமூக்குசெவிதான் அதற்கும் என்றனர்.

அந்த அறிவியலாளர்களில் ஒருவர் கிறிஸ்தவர். அவர் பறவைகளுக்கு ஆத்மா உண்டு என்னும் ‘இந்துத்துவ’ கருத்தை வலியுறுத்த நான் செய்யும் மோசடி அது, அதை அறிவியலாளர் ‘அணிதிரண்டு’ உடைக்கவேண்டும் என எழுதினார்.

நான் சயண்டிஃபிக் அமெரிக்கன் இதழில் அப்போது வெளிவந்த ஒரு கட்டுரையை ஆதாரமாக்கியே அதை எழுதினேன். அந்த அறிவியலாளருக்கு அனுப்பினேன். அவர் அதை படிக்கவில்லை. இன்னொருவர் அந்த அறிவியல்கட்டுரையில் இருக்கலாம் என்னும் ஊகம்தான் உள்ளது, அது அறிவியலுண்மை அல்ல என்று மீண்டும் பொங்கினார்

நான் அறிவியல்புனைகதைக்கு அறிவியலின் எல்லைதான் களம். நிரூபிக்கப்பட்ட உண்மை அறிவியல்புனைகதைக்கு தேவையில்லை. ஒர் அறிவியல் சாத்தியக்கூறு, ஒரு முகாந்திரம் இருந்தால்போதும் என எழுதினேன். ’அதெல்லாம் மோசடி’ என சொல்லிவிட்டார்.

சும்மா நினைத்துக்கொண்டேன்

ஜெ

முந்தைய கட்டுரைநூலக இதழ்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைஇஸ்லாமியக் கடைகளுக்குத் தடை?