ரம்யாவின் ‘நீலத்தாவணி’ கடிதங்கள்

நீலத்தாவணி

அன்புள்ள ஜெ

ரம்யா எழுதிய நீலத்தாவணி அழகான கதை. நீங்கள் சொல்வதுபோல மிகச்சிறிய விஷயத்தில் மிகமுக்கியமான ஒரு விஷயம் முனைகொள்வதனால் அழகாக வந்துள்ள கதை.ரம்யா தொடர்ந்து எழுதவேண்டும்.

தொடக்கநிலை கதையாசிரியர்கள் கவனிக்கவேண்டிய ஒன்று உண்டு. சரளமான இயல்பான உரையாடல்கள் கதைக்கு அவசியமானவை. ஆனால் அவை கூடவே சுவாரசியமாகவும் இருக்கவேண்டும். அழகும் வேடிக்கையும் ஏதோ ஒன்று இருக்கவேண்டும். அவை இரண்டும் இல்லாமல் சும்மா வாழ்க்கையில் நடப்பதுபோன்ற சாதாரணமான உரையாடலுக்கு கதையில் இடமில்லை. அதாவது சகஜமாகவும் இருக்கவேண்டும். அதில் ஒரு தனியழகும் இருக்கவேண்டும். இயல்பாக இருப்பது ஒரு பாவனைதான். இயல்பான உரையாடலுக்கு இலக்கியத்திலே இடமில்லை. தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, நீங்கள் ஆகியோர் கதையில் சாதித்தது அந்த உரையாடல் அழகைத்தான்

கே.வெற்றிவேல்

***

அன்புள்ள ஜெ

இரம்யா எழுதிய நீலத்தாவாணி கதைக்கான சுட்டியை தளத்தில் பார்த்தேன். மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. கதை எழுத போகிறேன், அது உங்களை தானாக வந்தடைய வேண்டும் என நினைக்கிறேன் என்று ஒரு கடிதத்தில் கூறியிருந்தாள். முதல் கதையிலேயே அது நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வளரிளம் பெண் தன்னை வகுத்து கொள்ளும் புள்ளி. ஆம் நீங்கள் சொல்வது உண்மை தான். அவளது மனம் முழுக்க நீங்கள் சொல்வது நானல்ல என்று தன்னை தனக்கென்று முன்வைக்க முயல்வது கதை நெடுக வருகிறது. இந்த கதையில் பிடித்ததே முதல் கதைக்குண்டான எந்த பிசிறும் இல்லாமல் வாழ்க்கையின் நுண்ணிய தருணத்தை அழகாக வெளிப்படுத்தியது தான்.

கீழ்வருவன அன்று நேரடியாக அக்காவுக்கே எழுதிய கடிதம். ஒருவித வாசிப்பு கோணம் உங்கள் பார்வைக்கு,

நீலத்தாவாணி கதையை வாசித்து விட்டேன். முதல் கதைக்கு வாழ்த்துகள். தேர்ந்த சிறுகதையாக வந்துள்ளது. உரையாடலில் பிசிறுகள் இல்லாமல், ஆற்றோழுக்கான நடையில் நல்ல கதை கருவுடன் ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கு உண்டான தடைகளின்றி அமைந்துள்ளது சிறப்பு.

நீலத்தாவாணியை வயதடைதல் வகைமையில் தாய்க்கும் மகளுக்குமான நுண்ணிய ஊடாட்டத்தை சொல்லும் கதையாக காண்கிறேன். இன்னொரு கோணமாக கன்னியாகையில் பெண் உணரும் சேயும் தாயுமான இரு நிலைகளை கச்சிதமாக வெளி கொண்டு வந்துள்ளது. பாண்டி பஜாரில் இந்துவின் கைப்பிடித்து நடக்கையில் சிறுமியாகவும் பாட்டிக்கு முதுகு தேய்த்து விடுகையில் அவள் கனிவின் வழியாக தாயாகவும் தென்படுகிறாள். இடையில் தாவாணி கட்டி முறை பையனிடம் தன்னை காட்டி கொள்ளும் கன்னியாகவும்.

பாட்டியிடம் நிகழும் உரையாடலில் சென்ற கால ஒழுக்க நெறிகளும் நடைமுறையும் கொள்ளும் மோதலும் தெளிவாக துலங்கி வருகிறது. அதில் ஆண்களின் பங்கு நுட்பமாக உணர்த்தப்பட்டிருக்கிறது. வளராத சிறுமியாக பெண்ணை வைத்து கொள்ளும் வரை தான் தாய்க்கு உள்ள முதன்மையிடம் என்பது.

மோனாவின் துள்ளலும் துடிப்பும் எல்லையை தாண்டும் வேகமும் சிறப்பாக அமைந்து முழுமை கொள்கிறது கதை. இளம்பெண்ணுக்கும் தாய்க்குமான நுண்புள்ளி ஒன்றை எளிய நேரடியான கதைக்கூறலின் வழி காட்சிப்படுத்திய அழகான கதை.

அன்புடன்

சக்திவேல்

***

முந்தைய கட்டுரைமன்னிக்காதே நெல்லி
அடுத்த கட்டுரைஅரசியல் கட்டுரைகள் -கடிதம்