ஒற்றன் வாசிப்பு- சௌந்தர்

சங்கடம் துக்கம் என்று வரும்பொழுது எல்லோரும் மனிதர்களே என்று தனது அமெரிக்கப் பயணத்தில் சந்தித்த எழுத்தாளர்களின், மனிதர்களின் கதைகளை உணர்வுகளை சிறுகதைக்கான சாத்தியங்களுடன் இந்த நூலில், அசோகமித்தரன்  பகிர்ந்துகொள்கிறார்.

1993-ல் எனது நண்பனின் நண்பனுக்கு, பாஸ்போர்ட்டே இல்லாமல் , ஐரோப்பா கண்டத்தில் வேலை கிடைத்துவிட, அப்பொழுது எனக்கிருந்த அரசு வேலை செல்வாக்கில், நட்பின் பொருட்டு, ஜாயின்ட் செகரட்டரி ஒருவர் கையெழுத்துப்போட, அவருக்கு ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் கிடைத்தது. இந்தக் கையெழுத்து நம்பிக்கையின்பேரில் போடுவது. போலீஸ் வெரிஃபிகேஷன் அப்புறம் நடக்கும். அசோகமித்திரனுக்கு, 1973-ல் அயோவா சிடியில் நடக்கும் ஒரு எழுத்தாளர் மாநாட்டிற்கு அழைப்பு வருகிறது. அவருக்கும் கையில் பாஸ்போர்ட் இல்லை. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி கையெழுத்துப் போட பாஸ்போர்ட் பத்து நாளில் கிடைக்கிறது. நாம் இப்பொழுது கோவிட் டெஸ்ட் கொடுத்துவிட்டு பயணத்திற்கு காத்திருப்பதுபோல, அசோகமித்தரனும் அம்மை மற்றும் மஞ்சள் சுரத்திற்கு தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு இருவாரம் காத்திருந்திருக்கிறார்.

‘எமிக்ரேஷன்’ க்யூவில் (லைனில்?)  நிற்பதில் ஆரம்பிக்கும் அத்தியாயம், மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் பிற நாட்டின் எழுத்தாளர்களை பற்றிய அவதானிப்பு, பிரிவு உபசாரம் பெற்று கிளம்புதுவரை என பதினான்கு அத்தியாயங்களாக அவரது அனுபவங்கள் நகைச்சுவையுடனும் சுவராஸ்யத்துடனும் பகிரப்பட்டுள்ளன.

எமிக்ரேஷன் க்யூவில் ஒருவன் இருபது ஆட்களின் டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு நிற்கிறான். ஐந்து ஆட்களுக்குப் பின்னால் நின்றாலும் இருபது ஆட்களுக்குப் பின்னால் நிற்பதுபோல் என சொல்லி வாசகனை நகைக்க வைக்கிறார். இங்கே வாசகனின் முகத்தில் பரிணமிக்கும் புன்முறுவல், நூல் முழுதும் பரவியிருக்கும் அமி-யின் வர்ணனைகள், சித்தரிப்புகள், உரையாடல்கள், போகப்போக அவனை வாய்விட்டுச் சிரிக்கவைக்கும்.  அவர் தங்கியிருக்கும் மேஃபிளவர் கட்டடத்தில், லிஃப்ட்டில் சந்திக்கும் பெண்,  மொட்டையாக, “நீ இன்றைக்கு வரவில்லை?” என்று கேட்க, தலையும் புரியாமல் காலும் புரியாமல் “எங்கே?”  என்கிறார்.

“உனக்குத் தெரியாது? எட்டரை மணிக்கு நாமெல்லோரும் மிஸ்ஸிஸ்ஸிப்பி  நதிக்குப் போகிறோம்.”

“எல்லோருமா?”

“ஆமாம். நீ தபால் பெட்டியைப் பார்க்கவில்லையா?”

“என்ன தபால் பெட்டி?”

“உன்னுடையதுதான் . நேற்றே கடிதம் வந்து விட்டதே?”

“கடிதமா?”

முதல் ஒரு வாரத்தில் புதுச் சூழ்நிலையில் இருக்கும் எந்த ஒருவரும் எதிர்கொள்ளும் திண்டாட்டத்தை பிரதிபலிக்கும் உரையாடல்.

எத்தனை வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் மாமிசம் இல்லாமல் சாப்பிட உணவகங்கள் அருகில் இருக்காது என்பதற்காக நீண்ட நாட்கள் பயணம் செய்யும் வெஜிடேரியன் மட்டும் சாப்பிடும் நண்பர்கள் கூடவே குக்கரையும் அரிசியையும் எடுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரனுக்கும் சாப்பாட்டு கஷ்டம் பெருங்கஷ்டமாகத்தான் இருந்திருக்கிறது. சீரியல், கார்ன் ஃப்ளேக்ஸ் , ஃப்ரென்ச் ஃப்ரைஸ் , காப்பி மற்றும் காப்பி என்று அந்த ஏழு மாதங்களை ஓட்டியிருக்கிறார். மற்றவர்கள் இரண்டு முறை ஒயின் ஊற்றிக்கொள்கிறார்கள். இவர் இரண்டு கப் காப்பி குடிக்கிறார். மதியத்திற்கு கார்ன்ஃப்ளேக்ஸா என்று உடன் இருப்பவர்கள் அனுதாபமாக புன்னகைக்கிறார்கள்.

அமெரிக்க வாழ்க்கையில் இன்று வரை நான் ஷாக் ஆகும் ஒரு விஷயம், இந்த ஷிப்பிங்கிற்கு கொடுக்கின்ற தொகைதான்.  நூறு / நூற்றம்பது ரூபாய்க்கு இந்தியாவிலிருந்து வாங்கி வந்த புத்தகத்தை, வேறு நகரில் இருக்கும் நண்பனுக்கு அனுப்ப ஐந்து டாலர் போஸ்டலுக்கு கொடுப்பேன். அதுவும், எக்ஸ்ப்ரஸ், சிக்னேச்சர் க்யாரண்டி எல்லாம் வேண்டாம் என்று சொல்லவேண்டும்.  அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அலீசியா என்ற எழுத்தாளருக்கு அவள் வாங்கிய பரிசுப் பொருட்களை பார்சல் செய்து அனுப்ப உதவி புரிகிறார் அசோகமித்திரன். அந்தப் பெண் பத்து டாலருக்கு வாங்கிய பரிசை அர்ஜெண்டினாவிற்கு அனுப்ப முப்பத்தேழு டாலர் அறுபத்தெட்டு சென்ட் தபாலாபீஸிற்கு கொடுக்கிறாள். “அந்தச் செலவுதான் இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குவதுபோல அலீசியா தான் பேசுவதை எதுவும் கவனிக்காமல் கவலையில் இருந்தாள்” என்று இந்த ஷிப்பிங்க் அனுபத்தை ‘மகா ஒற்றன்’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

ஜூன் 1997-ல் ஹூஸ்டன் வந்திறங்கிய முதல் நாளில், அசோக் என்ற மும்பையை சேர்ந்த நண்பன், “Downtown-ல் தனியாக பஸ் ஸ்டாப்பில்  நின்றால், கண்டிப்பாக பர்ஸில் இருபது டாலர்களாவது வைத்துக்கொள், பனம் கேட்டு வருபவர்களிடம் இல்லையெனும் பட்சத்தில், அடிவாங்கவேண்டியது இருக்கும்.” என்று எச்சரித்தான்.

ஒற்றன் நூலிலிருந்து, அமி-யின் வரிகள்.“அமெரிக்காவில் எந்த ஊரிலிமே தனியாக, பாதசாரியாக, ஆறு மணிக்குப் பிறகு வெளியே செல்வது பைத்தியக்காரத்தனம் என்று ஒருவர் இல்லை ஒன்பதுபேர் சொல்கிறார்கள். பர்ஸில் பணம் நிறைய இருந்தால் எல்லாம் போயிற்று. பணம் இல்லாதுபோனால் வழிப்பறிக்காரன் கோபத்தில் என்ன செய்வான் என்று சொல்லமுடியாது. பாஸ்போர்ட்டைக் கிழித்துப் போடலாம். சுண்டுவிரலை வெட்டித் தள்ளலாம். காதில் துளை போடுவது போலச் சுட்டுவிட்டுப் போகலாம்.”

கே-மார்ட்டில் வாங்கிய ஜோடுகள் (அமி-யின் வார்த்தை), கடிகாரம் உள்ள பேனா, டைப்ரைட்டர் என்ற அவரது அனுபவங்கள் கடைசி பத்தி படிக்கும்வரை ஒரு சின்ன சஸ்பென்ஸுடன் சுவாரஸ்யமாக  எழுதப்பட்டுள்ளது. சில நவீன வாசகர்கள் அந்த சஸ்பென்ஸை முதலிலேயே ஊகிக்கலாம் என்றாலும், அசோகமித்திரன்  நடையில் உள்ள ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அன்றுக்கும் இன்றுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை என்ற காலத்தின் பதிவும் இருக்கிறது.

அவர் இருந்த ஏழு மாதங்களில், குளிர்காலத்தையும் பார்த்துவிடுகிறார். உறைபனி பெய்வதை , பனியில் நடப்பதை, கீழே மல்லாந்து விழுவதை, பகிர்ந்துள்ள பதிவுகள்,  நாம் மதிக்கும் ஒரு ஆளுமையை அருகில் இருந்து பாப்பதுபோல் ஒரு அனுபவத்தை தருகிறது. “அந்த ஆண்டு அயோவா சிடியில் உறைபனி பெய்த முதல் நாளன்றே  நான் சறுக்கி விழுந்தேன்.” – வீழ்ச்சி எனும் அத்தியாயத்தில்.

‘ஒற்றன்’ என்ற அத்தியாயத்தில், அபே குபேக்னா எனும் எத்தியோப்பியா  நாட்டு எழுத்தாளனையும், மகா ஒற்றன் என்ற அத்தியாயத்தில் ஹோஸே அண்டோனியோ பிராவோ எனும் பெரு நாட்டு எழுத்தாளனையும் அறிமுகப்படுத்துகிறார். ஒரு நாவல் எழுதினாலும், ஆங்கில மொழியாக்கம் செய்து சாதனை செய்யும் அபே குபேக்னா, கஜூஹா எனும் பெண்ணுடன் அமி-க்கு இருக்கும் தோழமையை தப்பாக  நினைத்து, இவரை முகத்திலும் தோளிலும் குத்துகிறான். பொறாமை?

பிரோவோ, தனது அறையின் சுவற்றில் அவன் எழுதவிருக்கும் நாவலில் வரும் பாத்திரங்களை வெவ்வேறு வர்ணத்தில் எழுதி ஒரு ‘சார்ட்’ போல் போட்டு வைத்திருக்கிறான். ஒவ்வொருவரும் மற்றவருக்கு என்ன உறவு என்று குறிகள் காட்டுகின்றன என இவருக்கு விளக்குகிறான். பிராவோவின் மேல் இவருக்கு எழுத்தாளனாக பெரும் மதிப்பு வந்துவிடுகிறது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த அலீசியாவிற்கு, பெரு நாட்டின் பெருமை பிடிக்காது என்றாலும், அவளிடம் பிராவோ பற்றி பெருமையாக பேசுகிறார். ஒரு மாதம் வெளியே வராமல் நாவல் எழுதுகிறேன் என்று சொன்ன அவனுடன் , ஒரு பெண்ணும் உடன் இருந்திருக்கிறாள் என்று இவருக்குத் தெரிய வருகிறது. இவர்களைப் பார்த்துக்கொள்ளும் ஜான் என்பவன், “வா, இன்று போய் பிரோவாவின் மனைவியை ஏர்போர்ட் சென்று அழைத்து வருவோம்” என்று அமி-யை ஒரு நாள் அழைக்கிறான். காரில் ஜானுடன் இவரைப் பார்க்கும் பிராவோவிற்கு , ‘சங்கடம்’.

எழுத்தாளர்களாக கூடிய மாநாடு இந்த மாநாட்டில், விவாதங்கள், சந்திப்புகள் வெவ்வேறு நகரங்களிலும் நடக்கிறது. அயோவா மாநிலத்தின் தலைநகரான, டெமாய்ன் நகரில். ‘கவிதைவாசிப்பு’ நடக்கிறது. அசோகமித்திரன் , கவிதை எனது துறை இல்லை என்று சொல்லிப் பார்க்கிறார். அவர்கள் விடுவதாக இல்லை. ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’ கவிதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வாசிக்கிறார். பாடவும் வற்புறுத்துகிறார்கள். அன்று இரவு, அவருடன் தங்கியிருக்கும் எழுத்தாளருடனான உரையாடல்.

“உனக்குத் தெரியுமா? நான் பாட்டேதும் பாடவில்லை. எங்கள் தமிழ் மொழியின் முப்பது எழுத்துக்களைத்தான் ராகம் போட்டுப் பாடினேன். “

அவனும் வியப்பேதும் இல்லாமல்,“அப்படியா? நானல்லவா அப்படிச் சமாளித்ததாக நினைத்துக்கொண்டிருந்தேன். நானும் எங்கள் மொழி எழுத்துக்களைத்தான் பாட்டாகப் பாடினேன்.” என்கிறான்.

விக்டோரியா எனும் பெண் ஒவ்வொரு நாட்டினரும் சொன்ன அல்லது எழுதிய கவிதையை   இணைத்து  நாடகமாக உருமாற்றிஅரங்கேற்றுகிறார். அதில் ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’ நாடகமாக நடிக்கப்படுகிறது.

ஒருவர் பார்வையில் வாசிக்கப்படவேண்டிய இந்தக் கவிதையை இருவரின்  பார்வையில் எப்படி நாடகமாக மாற்றினாய் என்று அசோகமித்திரன் , விக்டொரியாவிடம் கேட்கிறார். அதற்கு அவள் “எனக்குப் பொய்கள் சொல்ல அம்மா மட்டும்தான் இருக்கிறாள், அப்பா யாரென்றே தெரியாது” என்கிறாள். துக்கம்.

ஹூஸ்டன் ப்ராஜெக்ட் முடிந்து , தெற்கு கலிஃபோர்னியா நகர் ஒன்றுக்கு என்னை இடம் மாற்றினார்கள். அந்த நகரை மிஸ்ஸன் வியாஜோ (Mission Viejo) என்று நான் உச்சரித்தேன். எனது மேலாளர், ‘மிஸ்ஸன் வியாஹோ’ என்று சொல்லவேண்டும் என்று ‘j’ வரும் இடங்களை ‘ஹ’ சொல்ல கற்றுக்கொடுத்தார். அமி-க்கு, இருந்த ஏழு மாதங்களில் அந்தக் கவனம் இருந்திருக்கிறது. Des Moines என்று ப்ரெஞ்ச் வார்த்தையை கொண்ட அயோவா மாநிலத்தின் தலைநகரை , டெமொய்ன் என்று S-ஐ விடுவித்து சரியாக பிரயோகப்படுத்தியுள்ளார். பெரு நாட்டின் எழுத்தாளனை,  ஹோஸே அண்டோனியோ பிராவோ என்று சரியாக சொல்கிறார். லிஃப்ட்டை எலிவேட்டர் என்றுதான் அமரிக்காவில் சொல்வார்கள் என்று அவர் கண்டுகொண்டிருப்பார். இருந்தும் இந்தியனாக, இந்திய-ஆங்கில உபயோக வழக்கத்தில் லிஃப்ட் என்றே இருக்கட்டும் என்ற அவருக்கே உரித்தான நுணுக்கத்துடன் கையாண்டிருக்கலாம்.

காலத்தைப் பதிவு செய்த, காலத்தால் அழியாத நூல், அசோகமித்தரனின், ‘ஒற்றன்’.

ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைதன்மீட்சி- கடிதம்
அடுத்த கட்டுரைமன்னிக்காதே நெல்லி