பனி உருகுவதில்லை, விமர்சன அரங்கு உரைகள்
அன்புள்ள ஜெ
சென்னையில் அருண்மொழி நங்கை அவர்களின் நூல் விமர்சனக் கூட்டம் உரைகள் கேட்டேன். எல்லா உரைகளுமே சிறப்பாக இருந்தன. அ.வெண்ணிலா, கார்த்திக் புகழேந்தி, ஜா.தீபா ஆகியோரின் உரைகள் சிறப்பு. அவர்கள் பரவலாக அறியப்பட்ட பேச்சாளர்கள். ஆனால் அவ்வளவாக தெரியாத பிகு, அருந்தமிழ் யாழினி உரைகள் கூட மிகச்சிறப்பாக இருந்தன.
அருண்மொழி நங்கை உரையை ஒரு அருமையான கலைநிகழ்வு என்று சொல்லவேண்டும். அந்த எனர்ஜி, அவையை தன் சொந்தக்காரர்கள் என்று எடுத்துக்கொள்ளும் நட்புணர்வு, எந்தக் கசப்பும் எதிர்ப்பும் இல்லாத நட்புணர்வு, இயல்பான தலையாட்டல் சிரிப்பு என்று அழகான உரை. ஆத்மார்த்தமான உரை. ஆனால் கூடவே சங்க இலக்கியம் முதல் தொட்டுத்தொட்டு க்ரியேட்டிவிட்டியின் பல நுட்பமான விஷயங்களை தொட்டுச்சென்ற உரை.
ஆனால் அரங்கில் ஓர் ஐம்பதுபேர்தான் இருந்தார்கள். சிறிய அரங்கு.நம் இலக்கியக்கூட்டங்களில் நீங்கள், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் பேசும்போது வரும்கூட்டம் அதேயளவே தீவிரமாகப் பேசும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களின் கூட்டத்திற்கு வருவதில்லை. இது வருத்தமான விஷயம். அடுத்த தலைமுறையை கவனிக்காவிட்டால் நமக்கு இலக்கியத்தில் என்ன நடக்கிறதென்றே தெரியாமலாகிவிடும்.
கே.ஆர்.ரகுநாதன்
அண்ணா வணக்கம்
அருண்மொழி உரைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன் . தமிழ் ஆசியா புக்ஸ் , பனி உருகுவதில்லை புத்தக வெளியீட்டு விழா , ஆகுதி ஒருங்கிணைத்த சென்னை விமர்சன அரங்கு ஆகிய உரைகளை கேட்டேன் . மிக செறிவான உரைகள். இவ்வளவு dense உரை ஆற்றும் பொது கொஞ்சம் மெதுவாக பேசினால் நன்றாக இருக்கும். என் மனம் பின்னால் நின்று கொள்கிறதோ தெரியவில்லை , ஏனோ என்னால் சரியாக பின்தொடர்ந்து செல்ல முடியாமல் நிறுத்தி நிறுத்தி கேட்டேன். அருண்மொழி பேசியதில் தமிழ் ஆசியா புக்ஸ் உரை ஒரு கிளாசிக்.
உங்கள் உரையில் ஒரு மெதுவான flow இருக்கிறது . என் மனதால் எளிதாக பின்தொடர்ந்து செல்ல முடிகிறது.பல முறை உங்கள் நேரடியான உரையை கேட்கும் போதும் நான் notes கூட எடுத்திருக்கிறேன்.
இதையே அருண்மொழி உரையில் செய்ய வேண்டுமானால் typewriter short hand முடித்தவர்களால் தான் முடியும்.இதை மறக்காமல் அக்காவிடம் சொல்லிவிடவும்.
அன்புடன்
பன்னீர் செல்வம் ஈஸ்வரன்