கங்கைப்போர் -கடிதங்கள்

கங்கைநதிக்கான அகிம்சைப் போராட்டத்தின் முதல் சட்டவெற்றி

அன்புள்ள ஜெ

காலையில் சிவராஜ் அண்ணாவின் கங்கைக்கான அகிம்சை போராட்டத்தில் சட்டவெற்றி பதிவை படித்தவுடன் ஓர் உணர்வெழுச்சி. அப்போது கடந்துவிட்டேன். பின்னர் பார்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த அவர்களின் ஊர்க்கிணறு புனரமைப்பு காணொளியில் சாது நிகமானந்தாவை பார்க்கையில் இப்போதும் அதே உணர்வெழுச்சி. கண்களில் நீர் தளும்பியது.

யோசித்து பார்க்கிறேன், இது எதனால் நடக்கிறது ? நான் நம்பி ஏற்றுக்கொண்ட இலட்சியவாதத்தின் இருப்பை காண்பதால். இன்றும் இங்கே நீரின் பொருட்டு, பல்லாயிரம் உயிர்களின் தன்னை கொடுப்பது எத்தனை மகத்தானது. ஆனால் இங்கே யதார்த்தம் மீண்டும் மீண்டும் இவை மிகையுணர்ச்சிகள், நடக்கவியலாதவை என சொல்கிறது. ஆம் ஒரு சாமானியன் தன் அன்றாடத்தில் இருந்து பார்க்கையில் இது பைத்தியக்காரத்தனம். அவனால் அடிப்பட்டு விழுந்து கிடப்பவனை கண்டு இரக்கப்பட முடியும். பல்லாயிரவரின் பொருட்டு தன்னை அர்ப்பணம் செய்பவன் அவனுக்கு புரியாதவனாக, பைத்தியக்காரத்தனமான கேலிக்குரியவனாகவே தென்படுகிறான். எங்கேனும் தன் உள்ளத்தில் இலட்சியவாதத்திற்கு இடம் கொடுத்தவனே நிகமானந்தாக்களை உணர்கிறான்.

வீடே நீ சொல்வது நடக்காது என சொல்லுகையில் தான் சொன்னது நடப்பதை பார்க்கும், அதனை மற்றவர்களுக்கு காட்ட எண்ணும் சின்னஞ்சிறு சிறுவனின் மகிழ்ச்சியே இந்த உணர்வெழுச்சி என தோன்றுகிறது.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள ஜெ

கங்கைக்கான போர் பற்றிய செய்திகளை இப்போதுதான் தொகுத்துப் படித்தேன். ஒரு பெரிய எபிக் போல இருக்கிறது. நம் சமகாலத்தில் நடந்த மாபெரும் தியாகப்போராட்டம். கண்ணீர் மல்க வாசிக்கவேண்டியது

ஆனால் ஏன் நம் ஊடகங்களில் இது ஒரு செய்தியாக மாறவில்லை? ஏன் நாளிதழ்கள்கூட கவனிக்கவில்லை? நான் எல்லா நாளிதழ்களையும் படிப்பவன். உங்கள் இதழ் வழியாக மட்டுமே இதை தெரிந்துகொள்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது, என்ன நடக்கிறது?

இங்கே வன்முறையை கொண்டாடுகிறார்கள். கங்கைக்கான போரில் பலர் கொல்லப்பட்டிருந்தால் தலைப்புச் செய்தியாக ஆகியிருக்கும். மறைமுகமாக செய்தி ஊடகங்களும், அவற்றை வாசிக்கும் மக்களும் வன்முறையை ஊக்குவிக்கிறார்கள்.

காந்தி காலகட்டத்தில் செய்தி ஊடகங்கள் அவருடைய தியாகத்தை மதித்தன. அவை செய்தியாயின. ஆகவேதான் அவை வெற்றி அடைந்தன். ஒரு சத்யாக்கிரகப்போராட்டம் மக்களின் மனசாட்சி நோக்கி பேசுகிறது. மக்கள் சக்தியை ஆதரவாக திரட்டுகிறது. அதற்கான ஒரு பிரச்சாரநடவடிக்கை அல்லது குறியீட்டு நடவடிக்கைதான் சத்யாக்கிரகம், உண்ணாநோன்பு போன்றவை.

ஆனால் நம் ஊடகங்கள் அதை மறைத்தால் அது அப்படியே கண்ணுக்குத்தெரியாமல் ஆகும். அர்த்தமில்லாமல் ஒரு தியாகி சாவதில் முடியும். ஏன் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை என்றால் மக்கள் அதை ஆர்வமாக கவனிப்பதில்லை, அதுக்கு நியூஸ் வேல்யூ இல்லை என்பதனால்தான். மக்களுக்கு பரபரப்பான வன்முறை தேவைப்படுகிறது. மக்களுக்கு இன்று தியாகத்திலும் இலட்சியவாதத்திலும் நம்பிக்கை குறைவு,

மக்கள் சக்தியே சத்யாக்கிரகத்தின் சக்தி. மக்கள் கவனிக்காதபோது, ஆதரவாகத் திரளாதபோது அதை அதிகார அமைப்பு கவனிக்காது.அந்தப்போராட்டங்கள் தோல்வியடையும். அவை தோல்வியடைந்தால் வன்முறையே உருவாகும்.வன்முறை எப்படி நடந்தாலும் கடைசியில் பாதிக்கப்படுபவர்கள் மக்களே.

அதைத்தான் இலங்கையிலே பார்க்கிறோம். நான் 1975 முதல் இலங்கையை பார்த்துவருகிறேன். அங்குள்ளவர்கள் முதலில் வன்முறையை ரொமாண்டிஸைஸ் செய்தார்கள். அதைப்பற்றி பேசி எழுதி கொண்டாடினர். எல்லா அகிம்சைவழி போராட்டங்களையும் ஏகடியம் செய்தார்கள். கடைசியில் வன்முறை வந்தது. போராடும் இரு தரப்பும் தோற்று தரைமட்டமாகியது. நடுவே புகுந்த சக்திகள் ரத்தம்குடித்தன. இன்றைக்கு இலங்கை கொடுத்துக் கொண்டிருக்கும் விலை என்பது வன்முறைமேல் அவர்கள் காட்டிய ஆர்வத்தின் விலைதான். இந்தியாவும் அந்தமனநிலையையே அடைந்துகொண்டிருக்கிறது

எஸ்.எம்.ராகவன்

முந்தைய கட்டுரைபுயலிலே ஒரு தோணி வாசிப்பு- அனங்கன்
அடுத்த கட்டுரைதிருப்பூர் உரை,ஒரு நாள்