இந்த 2020 இல் தமிழ் நிலத்தின் பொது வாசிப்பு சூழல் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதைக் காண முடிகிறது. மொபைல் புரட்சியும் ஜியோ புரட்சியும் இதன் துவக்கம்.
ஒரு பெட்டிக்கடையில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் விற்பனை உள்ள பல்வேறு தினசரிக்கள் இடத்தை 24 மணி நேர செய்தி சானல்கள் இடம் மாற்றி விட்டன. இன்று 25 வயதுக்கு உட்பட்டவர்களில் ஒரு செய்தித்தாளைக் கொண்டு தங்கள் காலையை துவங்குவோர் அநேகமாக எவரும் இல்லை.
பத்திரிக்கையில், சமையல் பத்திரிக்கை, ஆத்மீக ஜோதிட பத்திரிக்கை பெண்கள் பிரத்யேக பத்திரிக்கை அனைத்தையும் யூ டியூப் இடம் மாற்றி விட்டது. அரசியல் சமூக குற்ற விஷயங்களை ஆய்வு செய்யும் ஜர்னலிச பத்திரிகைகள் கிட்டத்தட்ட அதன் இறுதி மூச்சை தக்க வைக்க போராடிக்கொண்டு இருக்கின்றன. விகடனும் குமுதமும் வெறும் விளம்பரங்களால் நிறைந்து, ஒரு பக்கத்தில் ஒரு பெரிய படம் அதில் கீழே மூன்றே வரிகள் மட்டுமாக நெட் ப்ளிக்ஸ் அமேசான் போன்ற தளங்களின் தொடர்கள் படங்கள் குறித்த அறிமுகம், முகநூல் அரட்டைகளின் மீள் பதிவு சினிமா செய்திகள் tv செய்திகள் என பத்திரிக்கை என்பதன் அடையாளத்தையே இழந்து தள்ளாடிக்கொண்டு இருக்கின்றன.
இதே நிலைதான் பொழுதுபோக்கு வாசிப்புக்கும். அநேகமாக இந்திரா செளந்தர்ராஜனுடன் அவரை இறுதியாக கொண்டு இந்த வெகுஜன மாத எழுத்து வரலாறு முடிவுக்கு வருகிறது என்று சொல்லிவிட முடியும்.
இந்த தலைமுறையில் ஒரு 25 வயது யுவனோ யுவதியோ அமேசான், நெட்ப்ளிக்ஸ், தாண்டி வந்து புத்தகத்தை கையில் ஏந்தி அதுவும் தமிழில் வாசிக்க வரும் நிலை மிக அரிதான ஒன்றாகவே படுகிறது. அப்படி வாசிக்க வருகையில் இன்று கேளிக்கை எழுத்து என்ற ஒன்றோ சுஜாதா போன்ற ஒருவரோ களத்தில் இல்லை. களத்தில் இருப்பது தீவிர இலக்கியப் புனைவுகள் மட்டுமே. இந்த தீவிரக் களத்துக்கு வாசகர்களை கொண்டு வருவதில், யூ டியூப்பில் கதை சொல்லும் பவா செல்லத்துரை, பாத்திமா பாபு போன்ற பலர் முக்கிய காரணிகள். அந்த யூ டியூப் களத்தில் கதை சொல்லிகளுக்கு இருக்கும் ஒரே கருவூலம் தீவிர புனைவுகள் மட்டுமே கொண்டது. அங்கேயும் வெகு மக்கள் கேளிக்கை எழுத்துக்கள் எதுவும் கதைகளாக சொல்லப்படுவதில்லை.
இது ஒரு முக்கியமான தருணம். தங்களை மடைமாற்றும் எல்லா கேளிக்கைகளில் இருந்தும் மீறி, வாசிக்க வருவோருக்கு வாசிக்க கிடைப்பது ஒரு நேரடியான தீவிர புனைவு உலகம். இப்படித் தீவிர இலக்கியத்தின் உள்ளே வரும் வாசகருக்கு முன் ஒரு முக்கியமான பிரச்னை உள்ளது. அது ‘சொல்லப்படும்’ கதையின் தாக்கம் என்பது வேறு. அந்தக் கதையை எழுத்தாக வாசிக்கையில் அந்த எழுத்து குறி வைக்கும் தாக்கம் என்பது வேறு. சொல்லப்பட்ட கதையை எழுத்தில் வாசிப்பதன் வழியே, கேட்கப்பட்ட கதையை எழுத்து வடிவில் வாசிக்கும் இன்பத்தை மட்டுமே பெற்று கொண்டு, ‘எழுத்து’ வழியே சென்று எதை அடைய வேண்டுமோ அதை அடைவதை வாசகர்கள் தவற விட்டு விடுவார்கள்.
காரணம், மரபார்ந்த இசையை ரசிக்க அதன் ஆழங்களுக்கு செல்ல, அதன் அடிப்படை குறித்த சில விஷயங்கள் எவ்வாறு பரியச்சயம் கொண்டிருக்க வேண்டுமோ, அதே நிபந்தனை தீவிர இலக்கியத்துக்கும் உண்டு.
அப்படி தீவிர இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தவர்கள் அதிலேயே நிலைபெறும் வண்ணம் அதன் அடிப்படைகளை கற்றுத் தரும் நூல்கள் மிக மிக குறைவே. ஜெயமோகன் எழுதிய நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், நாவல் கோட்பாடு, எழுதும் கலை போன்ற இலக்கிய அடிப்படை குறித்த நூல்கள் வரிசையில் நான் வாசிக்க நேர்ந்த நூல் , எதிர் வெளியீடாக க.பூர்ணசந்திரன் எழுதிய – கதையியல் – எனும் நூல்.
ஓவியத்தை எடுத்துக்கொண்டால் எக்கலையும் போலவே அதிலும் கலை கலையல்லாதது எனும் அடிப்படை வேறுபாடு துவங்கி, கலையில் உள்ள பல்வேறு அழகியல் ஓடைகள் எனும் பிரிவுகள் வழியே நீளும் நெடிய மரபு அது. அதில் நுழைய அறிமுக ரசிகன் கவனம் குவிக்க வேண்டிய கற்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் (சட்டகத்தினுள் கோடுகள், வடிவங்கள், உருவங்கள், அவை அமைத்திருக்கும் பின்னணி முன்னணி இடங்கள் அவற்றின் நிலைகள், வெளி, தூரம், வண்ணம், ஒளி, இருள், நுண் விவரனை) சில உண்டு. கோடுகள் குறித்த பயிற்சியே ஓவியத்தின் இம்ப்ரஷனிசம் கியூபிசம் போன்ற அழகியல் வகை மாதிரிகளை அணுக முதல் படி.
இப்படி ஓவியத்தின் ஒவ்வொரு அலகையும் நுணுகி அணுகி அறிவதைப்போல, இலக்கியத்திலும் அதன் தொழில்நுட்ப கட்டுமானத்தை புறவயமாக அணுகி அறியும் வகைமையை பயிற்றுவிக்கிறது இந்த நூல். புனைவு வகைகளில் சிறுகதைகள் எனும் வகையை மட்டும் பேசுபொருளாக எடுத்துக்கொள்ளும் இந்த நூல் 15 இயல்களில், முதலில் கதைகளின் தோற்றுவாய் என்னவாக இருந்தது, குட்டிக்கதைகள் நீதிக்கதைகள், தேவதைக்கதைகள், உருவகக் கதைகள் என அவற்றின் வகை மாதிரிகள் வழியே, பாரதியார் சிறுகதைகள் வரை அதன் வளர்ச்சி முகம் விளக்கப்படுகிறது.
அடுத்து இலக்கிய வாசிப்பில் கேளிக்கைக்கும் தீவிர கலைக்கும் உள்ள அடிப்படை வித்யாசம் விரிவாக விளக்கப்படுகிறது. பின்னர் பாரதி முதல் இன்று வரை தீவிர இலக்கிய சிறுகதை வரலாற்றை அதில் நிகழ்ந்த பரிணாமகதியை சுருக்கமாக சொல்லி, அதிலிருந்து சிறுகதை எனும் செவ்வியல் வடிவம் சார்ந்த கதைக்கட்டுமான அலகுகளை விளக்கப் புகுகிறது இந்நூல்.
கருப்பொருள், கதையமைப்பு,கதைப்பின்னல், பாத்திர உருவாக்கம், நோக்குநிலை, முரண், பெர்செப்ஷன், எமோஷன், மனவுணர்வு, பின்னணி, சூழல் வர்ணனை, துவனி, மொழிநடை, குறிப்பாலுணர்த்தும் பாங்கு, என கதைக்கட்டுமானத்தில் எவற்றை வாசகர் நெருங்கி அறிய வேண்டுமோ அவை ஒவ்வொன்றையும் விரிவாக விளக்கி இறுதியாக கதை வாசிக்கும் முறை எனும் அத்தியாயத்தில் முழுமை கொள்கிறது இந்நூல்.
இந்த நூலின் பலம் என்பது இது ‘ரசனை’ என்பதை மையமாகக் கொண்ட பயிற்சி நூல் என்பது. நூலுக்குள் திட்டவட்டமாகவே அகடமிக் பயிற்சிக்கு மாற்றாக மாணவர்களுக்கு உண்மையாகவே பயனுள்ள வகையில் இலக்கியத்தை ரசனை அடிப்படையில் அறிமுகம் செய்ய வேண்டிய தேவை பேசப்படுகிறது. உணர்வையும் கற்பனையையும் கொண்டு இந்த வாழ்வை உள்ளார்ந்து அறிய ஒரு பாதையே இலக்கியக் கலை எனும் நோக்கிலேயே இதிலுள்ள கல்வி அமைந்திருக்கிறது. கேளிக்கைக்கும் கலைக்கும் உள்ள வித்தியாசம் துவங்கி செண்ட்டிமெண்ட்டுக்கும் உணர்ச்சிகர்த்துக்கும் உள்ள பேதம் வரை, கலை சார்ந்து வாசகரை ஆற்றுபடுத்தும் அனைத்து கூறுகளையும் புதுமைப்பித்தன் துவங்கி, கு பா ரா, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் செக்காவ் ஆகியோரின் முக்கிய கதைகள் வழியே (சில கதைகள் முழுமையாகவே தரப்பட்டிருக்கிறது) விளக்குகிறது இந்நூல். ஒவ்வொரு அத்தியாயம் வழியாகவும் வாசகர் நகர நகர அந்த அத்தியாயம் வழியே பிற கதைகளுக்கு சென்று இந்நூல் கூறியவற்றை கற்பனை செய்ய கண்டடைய சிந்தனை செய்ய ஊக்கம் பெறும் நிலையை இலக்கிய அறிமுக வாசகர் அடைய உத்தேசித்து உருவாக்கப் பெற்ற இந்த நூலின் பலவீனம் என்று நான் கருதுவது இறுதியாக வரும்1. சில புதிய நோக்குகள், 2.புனைகதைகளை மதிப்பிடுத்தல் எனும் இரண்டு அத்தியாயங்களை.
புதிய நோக்குகள் அத்தியாயத்தில் பேசப்படும் ஸ்டக்சுரலிசம் வழியாக கதைக் கட்டுமானத்தை அறிவது குறித்த அறிமுகம் வேறு தனி நூலாக வர வேண்டிய இந்த நூலுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று. இந்த நூலின் ஒருமையை குலைப்பதாகவே இந்த அத்தியாயம் இருக்கிறது.
புனைகதைகளை மதிப்பிடுதல் அத்தியாயத்தில், எழுத்துக்கு இருக்க வேண்டிய சமூக பிரக்ஞ்சை, எளியோர் பக்கம் ‘ நிற்க’ வேண்டிய கலை, வாசகன் எழுத்தாளர் படைப்பை விமர்சன நோக்குடன்தான் அணுகவேண்டுமேயன்றி ஹீரோ ஒர்ஷிப் செய்யக்கூடாது போல இன்னபிற குறித்தெல்லாம் பூர்ணசந்திரன் பேசுகிறார். இதெல்லாம் அவரது தனிப்பட்ட கருத்தே தவிர அவற்றுக்கும் இந்த நூலுக்கும் தொடர்பு ஏதும் இல்லை. தேடித் தேடி வாசித்து அதன் இறுதியில் இவர் ‘தன்னுடைய’ எழுத்தாளன் என்று எப்போது ஒரு வாசகன் சொல்லத் தலைப்படுவானோ அப்போதே அங்கு இலக்கியம் அளிக்கும் ‘பண்பாட்டு’ தாக்கம் தொழில்படுகிறது என்று பொருள். செக்காவை தன்னுடைய எழுத்தாளன் என்று உணராத ஒரு வாசகன் செக்காவை வாசிக்கவே இல்லை என்றுதான் பொருள். டால்ஸ்தாய் பற்றி எழுதும் க நா சு, எழுதி எழுதி இறுதியில் டால்ஸ்தாயை ‘மகரிஷி’ என்று விளித்து நிறைவு செய்கிறார். இவற்றையெல்லாம் புரிந்து கொள்ள நூலாசிரியர் இன்னும் வெகுதூரம் போக வேண்டும்.
ஆக, இந்த இரண்டு அத்தியாயங்களை தவிர்த்துவிட்டால் தீவிர இலக்கியச் சிறுகதை என்றால் என்ன? அதை ‘எதற்காக’ வாசிக்க வேண்டும்? வாசிக்கையில் ‘எவற்றையெல்லாம்’ கவனம் குவித்து வாசிக்கவேண்டும் என்று அறிமுக வாசகன் கற்றுக்கொள்ள உதவும் ஒரு முக்கியமான நூல் க. பூர்ணசந்திரன் எழுதிய இந்த – கதையியல் – எனும் பயிற்சி நூல்.
கடலூர் சீனு