கடந்த ஜூலை 14, 2021-இல் உங்களுடைய சீவகசிந்தாமணி உரையின் விளைவாக காவியம் வாசிக்கும் ஆவல் எழுந்தது. புதிய வாசகர் சந்திப்பு’21 மூலம் அறிமுகமான நண்பர் ஸ்ரீனிவாசுடன் – ஆங்கில வழியில் வெண்முரசின் கூறுமுறையினூடாக கீதையின் தத்துவக்கட்டமைப்பை ஆராய்ச்சி செய்யும் முனைவர் பட்ட மாணவர் அவர் – இணைந்து கிளப்ஹவுஸ் செயலி வழியாக ‘புதுப்புனல்’ என்ற பெயரில் தொடர்ந்து அமர்வுகளை நிகழ்த்தி வருகின்றோம். வாரத்திற்கு மூன்று அமர்வுகள் என்று வகுத்துக்கொண்டபோது இதை நம்மால் தொடர்ந்து செயல்படுத்திவிட முடியுமா என்ற ஐயம் இருந்தது. கம்பன் வரிகளில் கூறுவதென்றால் பாற்கடலை நக்கிக்குடிக்க எண்ணும் பூனை போல ஆசைப்பற்ற குதித்துவிட்டோம்.