கங்கைநதிக்கான அகிம்சைப் போராட்டத்தின் முதல் சட்டவெற்றி

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

மகிழ்வும் நிறைவும் தரக்கூடிய செய்தியொன்றை உங்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். கங்கை நதிப்படுகையில் சட்டத்திற்கு புரம்பாக செயல்பட்டு நதியை மாசுபடுத்திவரும் கனிமவள நிறுவனங்களை மூடக்கோரியும், கங்கை நதியின் தொன்மையையும் புனிதத்தையும் பாதுகாக்கக்கோரியும் தொடர்ந்து 114 நாட்கள் (2009ம் ஆண்டு) உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் சாது நிகமானந்தா. கங்கைக்கரையில் உள்ள மாத்ரிசதன் எனும் அமைப்பைச் சேர்ந்த துறவி இவர். அதன்பிறகு, ஐஐடி பேராசிரியரான ஜி.டி.அகர்வால் (சாது ஞானஸ்வரூப் சதானந்த்) அவர்கள் கங்கை நதியைக் காக்கும் போராட்டத்தில் 111 நாட்கள் (2018ம் ஆண்டு) உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். கங்கை நதியைக் காக்கும் லட்சியவாதப் போராட்டம் நெடுங்காலமாக அங்கு நிகழ்ந்துவருகிறது. அறிந்தும் அறியாமலும் எத்தனையோ சாதுக்களின் உயிர்கள் கங்கைக்காக உயிரிழந்திருக்கிறார்கள்.

அகர்வாலுக்குப் பிறகு, மாத்ரிசதன் ஆசிரமத்தின் துறவிகளுள் ஒருவரான, கேரளாவைச் சேர்ந்த இளஞ்சாது ஆத்மபோனந்த் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கத் துவங்கி, தொடர்ந்து 194 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துவந்த நிலையில், தூய்மை கங்கைத் திட்டத்தின் தேசியப் பணிக்குழுவின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா அளித்த எழுத்துப்பூர்வ உறுதிப்பாட்டின் அடிப்படையில் தன் நோன்பினைத் முடித்துக்கொண்டார் அவர். 2019ம் ஆண்டு, அவருடைய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் 60வது நாளன்று குக்கூ நண்பர்கள் இருபதுபேர் இங்கிருந்து கிளம்பிச்சென்று அவரை நேரில் சந்தித்து உரையாடினோம்.

ஹரித்துவாரில் அமைந்திருந்த மாத்ரிசதன் ஆசிரமத்தில் இரவு பதினோரு மணியளவில் நாங்கள் சாது ஆத்ம்போனந்தைச் சந்தித்தோம். ஆறுமாத காலம் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் மெலிந்த உடலோடு கம்பளி போர்த்தி மஞ்சள் வெளிச்சத்தின்கீழ் கட்டிலில் அமர்ந்திருந்தார். ஆனால், அவருடைய கண்கள் சுமந்திருந்த ஒளியும், தண்ணீரைக் காக்கும் அப்போராட்டத்தில் அவர் ஏற்றிருந்த துணிவும் எங்களுக்குக் கண்ணீரை வரவழைத்தன.

ஸ்டாலின் பாலுச்சாமி ஆத்ம்போனந்திடம், “இவ்வளவு பெரிய அரசதிகாரத்தை எதிர்த்து நின்று போராடினாலும்கூட, இறுதியில் இது தோற்றுப்போகும் என உறுதியாகத் தெரிந்த பின்பும், எப்படி உங்களால் இத்தனை எளிமையாக உயிரைத்தர முடிகிறது?” எனக் கேட்டான். அதற்கு அவர் சிறுபுன்னகையுடன், “இந்த உடல் எப்படியானலும் அழியக்கூடியதுதான். ஆனால் இந்த ஆத்ம மனமும், அது சுமந்திருக்கும் நோக்கங்களும் ஒருநாளும் அழியாது. நம்மைச் சுற்றிய காற்றில் அது பெளதீகமாகக் கலந்திருக்கும். என்றாவதொரு நாள் யாராவதொரு மனிதன் அந்த ஆன்மாவைப் பற்றிக்கொண்டு எழுவான். நிகமானந்தாவின் ஆத்மாவை ஜி.டி.அகர்வால் பற்றிக்கொண்டு போராடினார். நான் அவ்விருவரின் ஆத்மாவையும் பற்றிக்கொண்டு போராடுகிறேன். எனக்குப்பின் யாரோ ஒருவரில் இதே நோக்கத்தை ஏந்தி என் ஆத்மா எழும். என்றாவதொருநாள் இந்த கங்கை தூய்மையாகும்; குழந்தைகளுக்காகச் சுரக்கும் தாய்ப்பால் போல இத்தண்ணீரும் மாறும்” என்றார். இரு கண்களிலும் நீர் கசியக்கசிய அவர் பேசிய அந்த பின்னிரவு வார்த்தைகளை இக்கணம் நினைத்துப் பார்க்கிறேன்.

அப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பியவுடனேயே உங்களுக்கு ஓர் கடிதம் எழுதினோம். உங்கள் தளத்தில் ‘நீர் நெருப்பு – ஒரு பயணம்’ எனும் பெயரில் அக்கடிதம் வெளியாகியது. தண்ணீரைக் காப்பதற்காக உண்ணாவிரதமிருந்து தங்கள் உயிரையே தருமளவுக்கு இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். கங்கைநதி ஆசிரமச்சாதுக்கள் கொண்டிருந்த மனவுறுதியும் லட்சியவாதத்தீவிரமும் எங்களுக்குள் ஏதோவொருவிதத்தில் அகச்சலனத்தைக் கூட்டிக்கொண்டே இருந்தது. நீருக்காக நிகமானாந்தா எனும் மனிதன் நிகழ்த்திக்காட்டிய முற்றளிப்பு குறித்த எண்ணத்தின் நீட்சியாக ‘ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தை’ நண்பர்களிணைந்து உருவாக்கினோம்.

அவ்வியக்கத்தின் முதன்மைப் பணியாக ஊரிலுள்ள பொதுக்கிணறுகளை தூர்வாரி மீட்டெடுக்கிறோம். கிருஷ்ணகிரி, திருவண்ணாமலைப் பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவினாலும், தண்ணீர் சார்ந்த தீண்டாமையும் பல இடங்களில் இன்னும் தொடர்வதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். ஆகவே அதற்கான ஓர் மாற்றுச்செயல்பாடாக, கிராமத்தில் பொதுச்சொத்தாக இருந்து கைவிடப்பட்டு தூர்ந்துபோன பழமையான கிணறுகளைத் தூர்வாரி பயன்பாட்டின்கானதாக மாற்றித்தருகிறோம். அவ்வாறு இதுவரையில் 10 கிணறுகள் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளன. பதினோராவது கிணற்றைத் தூர்வாரும் பணிகள் நிகழ்ந்துவருகின்றன.

ஊர்க்கிணறு புனரமைப்பு காணொளி இணைப்பு:

இந்நிலையில், சில தினங்கள் முன்பாக ஓர் மகிழ்வுக்குரிய தகவல் எங்களுக்கு வந்துசேர்ந்தது. கங்கை நதயின் இரு கரைகளிலும் அமைந்துள்ள கனிமவளக் குவாரிகளை மூட வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தனைக்கால நெடும்போராட்டத்தில் இத்தகைய தீர்ப்பு என்பது நிச்சயம் மிக முக்கியமான வெற்றி. தீர்ப்பு வழங்குவதற்கான முதன்மை ஆதாரங்களாகவும் சாட்சிகளாகவும் மாத்ரிசதன் அமைப்பு வழங்கிய பல ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. நிகமானந்தா, ஜி.டி.அகர்வால் என தொடர்ந்து உயிர்த்தியாகம் செய்த சாதுக்களின் ஒற்றைநோக்கம் சட்டரீதியாக ஓர் வெற்றியை ஈட்டியிருக்கிறது.

உயர்நீதிமன்ற தீர்ப்பினை செயல்முறைப்படுத்தும் பொறுப்பு அரசதிகாரிகளுக்கே இருப்பதால் நடைமுறையில் இதன் தாக்கம் எத்தனை மாற்றத்தைத் தந்துள்ளன என்பதையும் விரைவில் நாம் அறியக்கூடும். தேச வளர்ச்சி, நெடுங்கால ஒப்பந்தம் என விதவிதமான காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட கங்கைமீட்புக் கோரிக்கைகள் இத்தீர்ப்பினால் மீண்டும் துலக்கம் பெறும் வாய்ப்புள்ளது. காந்திய வழியில் நின்று கங்கைக்கரை சாதுக்கள் நிகழ்த்திய உண்ணாவிரதப் போராட்டமும், சட்டப்போராட்டமும் சமகாலத்தின் மிக முக்கியமான சமூக அசைவுகள் என்றே கருதுகிறோம். ‘வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்’ என்ற வள்ளுவ வார்த்தைகள் இத்தருணத்தில் இன்னும் கூடுதல் அனுபவ அர்த்தம் பெறுகிறது.

ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தின் மூலம் ஒவ்வொரு கிணற்றையும் தூர்வாரி, அதற்குரிய கிராமத்து மக்களிடம் ஒப்படைக்கையில்… சாவதற்கு சிலநாட்கள் முன்பாக நிகமானந்தா அளித்த ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்த வார்த்தைகளையும், நிகமானந்தாவின் உயிர்பிரிந்த தருணத்தில் அவரது அகம்கொண்டிருந்த தவிப்பையும் தான் நினைத்துக்கொள்வோம் நாங்கள். சூழியல் ரீதியான பல வழக்குகள் இத்தீர்ப்பின் மூலம் மீள்நம்பிக்கை பெறக்கூடும். தாகம் சுமந்து உயிர்துறந்த நீர்த்தியாகிகள் எல்லோரையும் இக்கணத்தில் தரைபணிந்து கரங்கூப்பி வணங்குகிறோம். நீருக்காக உயிர்துறக்கத் துணிந்திருக்கும் எஞ்சிய மனங்களையெல்லாம் நீருறை தெய்வங்கள் காத்தருள்க!

~

நன்றியுடன்,

சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி
புளியானூர் கிராமம்

கங்கைப்போர்- நூல் பெற்றுக்கொள்ள…

கங்கைப்போர் முடிவு

நீர் நெருப்பு – ஒரு பயணம்

நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு

முந்தைய கட்டுரைஉரை,கடிதங்கள்
அடுத்த கட்டுரைகல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துக்களும்