அனுபவங்களை விலக்கும் கலை -பி. கே. பாலகிருஷ்ணன்

ஜேன் ஆஸ்டன் -பி.கே.பாலகிருஷ்ணன்

ஜேன் ஆஸ்டனின் இலக்கியப்படைப்புகள் முழுக்கவே நிலப்பிரபுக்களின் குடும்பங்களை, அவர்களின் பழைய கால வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரிப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. அந்த நிலப்பிரப்புக்களின் அன்றாட வாழ்க்கையை ஜேன் ஆஸ்டனைவிட நுண்மையாகவும், யதார்த்தமாகவும் சித்தரிக்க வேறு யாராலும் முடியாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. சமூக ஆவணங்கள் என்ற நிலையில் அவரின் படைப்புகளுக்கு உள்ள முக்கியத்துவத்தை விமர்சகர்கள் திரும்ப திரும்ப சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் ஜேன் ஆஸ்டினின் இலக்கியப் படைப்புகளின் கலைத்தன்மை என்பது அதன் சுருங்கிய அனுபவப்பரப்புதான். அவரது படைப்புகளைப் பற்றி விமர்சகர்கள் சுட்டிக்காட்டிய விஷயங்கள் முழுக்க முழுக்க சரியானது என்று சொல்லமுடியாது.

ஜேன் ஆஸ்டனின் ‘யதார்த்தம்’ என்பது உண்மைக்கு நெருக்கமானது அல்ல. அவரின் படைப்புகளில் உள்ள சமூகச்சித்திரங்கள் அந்த காலகட்டத்து அசல் சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கவும் இல்லை என்பதுதான் உண்மை. அவர் அக்காலகட்டத்தின் சமூகப்பின்னணியில் அங்குள்ள குடும்பங்கள் சார்ந்த ’comedy’ என்ற வகைமையைச் சேர்ந்த நாவல்களை எழுதியிருக்கிறார் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த குடும்பச்சூழலின் நுண்மையான, எல்லைக்குட்பட்ட விஷயங்களிலிருந்து அவர் எவற்றையெல்லாம் விலக்கினார் என்ற கோணத்தில் விமர்சகர்கள் சிந்திக்கவில்லை. ஜேன் ஆஸ்டனின் தனியாளுமை என்பது எல்லைக்குட்பட்ட அனுபவப்பரப்பு கொண்ட மிகச்சுருங்கிய உலகம். அவரது  இலக்கியப்படைப்புகள் அந்த சுருங்கிய உலகத்தை இன்னும் சுருக்கும் கலை. திருமணமாகாத கிராமத்துப்பெண்ணான ஜேன் ஆஸ்டன் தன் தனிவாழ்க்கையில் ஒரு சாதாரண பெண்ணுக்கு இருக்கக்கூடிய அனுபவங்களைவிட குறைந்த அனுபவங்கள் கொண்டவர் என்பதைப்பற்றி நாம் அவரை பற்றிய அறிமுகக்கட்டுரையில் விவாதித்தோம். ஏற்கனவே இடுங்கிய அனுபவப்பரப்பு. ஆனால் அந்த சுருங்கிய பரப்பில் உள்ள எவ்வளவு விஷயங்களை ஜேன் ஆஸ்டனின் இலக்கியப்படைப்புகள் தவிர்த்துவிட்டன!

ஜேன் ஆஸ்டனின் படைப்புகளின் அடிப்படைக்கூறான நிலப்பிரபுக்களின் குடும்பங்களை, சமூகப்பின்னணியை தனியாக ஆராய்ந்தது பார்த்தால் அந்த உலகம் ஜேன் ஆஸ்டனின் இலக்கிய படைப்புகளை தவிர வேறெங்கும் அவ்வளவு விசித்திரமானதாக இருக்காது. கதையோட்டத்திற்கு, கதைக்கட்டுமானத்திற்கு(plot) தேவையான மனிதர்கள் , அதற்கு தேவையான சலனங்கள்- இவற்றை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட விசித்திரமான உலகம் அது. வீடுகள், விருந்துகள் என இயங்கிக்கொண்டிருக்கும் அவரது புனைவுலகில் ஒரு வீட்டில்கூட வீட்டுவேலைக்காரர்களை நாம் காணமுடியாது. ஜேன் ஆஸ்டனின் மிகச்சில படைப்புகளில் தவிர்க்கவே முடியாத சில பிரத்யேகமான விஷயங்களை சொல்வதற்காக ஒன்றிரண்டு வேலைக்காரர்கள் எட்டிப்பார்க்கிறார்கள். இதை தவிர்த்துவிட்டு பார்த்தால்  உயர் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவர்களை தவிர வேறு யாருமே ஜேன் ஆஸ்டனின் புனைவுலகில் இல்லை. தன் சொந்த சமூகநிலையை சேர்ந்த நிலப்பிரப்புகளின் குடும்ப வாழ்க்கையை எழுத வேண்டும் என்பதுதான் ஜேன் ஆஸ்டனின் இலக்கு. அதற்காக சமூகத்தில் தன்னைவிட கீழ்த்தட்டை சேர்ந்தவர்களை இப்படி ஏன் தன் புனைவுலகில் ஜேன் ஆஸ்டன் சுத்தமாகவே தவிர்க்க வேண்டும்? சமையல்காரர்கள், ஏவலர்கள் போன்றவர்களும் மற்ற சாதாரண ஆட்களும் பாதிரியாரின் மகளான ஜேன் ஆஸ்டனின் சொந்த வாழ்க்கைப்பரப்பில் நிச்சயமாக இருப்பார்கள். ஜேன் ஆஸ்டினின் படைப்புலகம் சமூகஆவணம் என்ற நிலையில் உண்மையானதாக இருக்கவேண்டுமென்றால் ஏவலர்களும், வேலையாட்களும் அதில் இருந்தே ஆகவேண்டும் என்பது வெளிப்படையானது. ஜேன் ஆஸ்டினின் புனைவுலகில் ஏவலர்கள், வேலையாட்கள் போன்றவர்களையும் சேர்த்து சித்தரிக்கும் வாய்ப்புகள் தாராளமாகவே இருக்கிறது. பகடிக்காக இலக்கியத்தில் ஏவலர்கள், பணியாட்கள் போன்ற கதாப்பாத்திரங்களை எல்லாகாலத்திலும் இலக்கியவாதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், அம்மாதிரியான கதாப்பாத்திரங்கள் தன் புனைவுலகிற்கு அந்நியமானவை என்று முடிவுசெய்து அவர்களை தன் புனைவுலகிலிருந்து  ஜேன் ஆஸ்டன் வெளியேற்றியிருக்கிறார். இந்த இடத்தில் ஜேன் ஆஸ்டனின் வாழ்க்கையனுபவங்களற்ற புனைவுலகம் அனுபவங்களை விலக்கும் புனைவுலகமாக மாறிவிடுகிறது.

இவற்றையெல்லாம்விட கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், ஜேன் ஆஸ்டனின் நாவல்களில் உள்ள குழந்தைகள் பற்றிய சித்திரம். அவரின் ஒன்றிரண்டு படைப்புகளில் குழந்தைகள் அங்கிங்கென வந்து எட்டிப்பார்த்துவிட்டு மறைகிறார்கள். ஆனால் அவரது ஒரு படைப்பில்கூட ’குழந்தைகள்’ அதன் கதைக்கட்டுமானத்தின்(plot) முக்கியமான கூறாக இல்லை. ஒரு கதாப்பாதிரமாக நிலைநிற்கும் அளவுக்கு ஒரு குழந்தைகூட எந்த படைப்பிலும் இல்லை. ஜேன் ஆஸ்டனின் புனைவுலகில் மரணம் அதை தொடர்பான களங்கள், நோய்ப்படுக்கை போன்றவை ஏன் இடம்பெறவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தீவிரமான காதல் போன்ற கடுமையான உணர்வுநிலைகள் ஏன் அவரது புனைவுலகில் இடம்பெறவில்லை? என்ற கேள்வியைக்கூட பொருட்படுத்தப்படத்தக்க கேள்வி இல்லை என்று விலக்கிவிடலாம். திருமண உத்தேசத்துடன் பெண்களை காதலிப்பது, அல்லது பெண்களின் காதலில் குழப்பங்களை ஏற்படுத்துவது என்ற இரண்டு விஷயங்களை தவிர்த்து வேறெந்த நிலையிலும் வெளிப்படும் ஆண் கதாப்பாத்திரத்தை ஜேன் ஆஸ்டன் ஏன் தன் புனைவுலகில் சித்தரிக்கவில்லை? என்ற கேள்வியைக்கூட ஜேன் ஆஸ்டனின் ஆளுமையைப்பற்றி அறிந்தவர்கள் கேட்பதில்லை. ஆனால் குழந்தைகளை புனைவுலகிலிருந்து விலக்கியது ஏன் என்பது அவ்வாறு எளிமையாக தவிர்த்துவிடக்கூடிய கேள்வி அல்ல.

குழந்தைகளை இனிமையின், புன்னகையின் அட்சயபாத்திரம் என்பதற்கப்பால் வேறொன்றுமில்லை. அதனால், குழந்தைகள் என்பவை ஜேன் ஆஸ்டனின் புனைவுலகின் இனிமையை குலைக்கக்கூடிய அம்சம் என்று சொல்லமுடியாது. பிறகு ஏன் ஜேன் ஆஸ்டனின் புனைவுலகில் குழந்தைகள் இடம்பெறுவதில்லை? என்ற கேள்வி நமக்கு இயல்பாக தோன்றும். ஜேன் ஆஸ்டன் போன்ற திருமணமாகாத பெண்ணின் உணர்வுநிலைகளில் மிக முக்கியமான அம்சமாக ஆகவேண்டியது குழந்தைகள்தான். முதிர்ந்த கன்னிப்பெண்களின் வாழ்க்கை என்பது பெரும்பாலும் குழந்தைகளை சார்ந்த வாழ்க்கையாக இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஜேன் ஆஸ்டன் தன் சகோதரிகளின் குழந்தைகள் மேல் அன்பு கொண்டவர்தான். வீட்டுச்சூழலின் பின்னணியில் நாவல்களை எழுதிய ஜேன் ஆஸ்டன் தன் தனிவாழ்க்கையின் முக்கியமான அம்சங்களான குழந்தைகளை, தன் புனைவுலகில் சுத்தமாகவே விலக்கியிருக்கிறார். அப்படி விலக்கியதற்கான காரணத்தை ஆராய்ந்தால் ஜேன் ஆஸ்டனின் படைப்பாக்கத்தின் ரசகியத்தை நாம் புரிந்துகொள்ளலாம். ஜேன் ஆஸ்டனின் படைப்பாக்கம் என்பது இரக்கமற்ற அனுபவ விலக்கம்தான். அவரின் கலைப்படைப்புகளின் அடிப்படையான உணர்வுநிலை முரண்நகை (irony). முரண்நகை என்ற உணர்வின் தீவிரம் மட்டுப்பட்டால் ஜேன் ஆஸ்டனின் கலைத்தன்மையின் ஒளிர்வு மங்கி அவரது புனைவுலகம் இருண்டதாக, பிறழ்ந்ததாக ஆகிவிடும். அதை ஜேன் ஆஸ்டன் அறிவார். முரண்நகை என்பது உணர்வுப்பூர்வமான தளைகள் இல்லாத, சில சந்தர்ப்பங்களில் குரூரமான என்றே சொல்லத்தக்க மனநிலை. அந்த மனநிலைக்கு குழந்தைகள் என்ற விஷயம் பொருந்தக்கூடியது அல்ல என்பதை ஜேன் ஆஸ்டனின் கலைமனம் அறிந்திருக்கிறது.

ஜேன் ஆஸ்டனின் கலைத்தன்மை பற்றிய ஆய்வில் மிக முக்கியமான விஷயம் அனுபவங்களை விலக்கும் செயல்பாடு. ஜேன் ஆஸ்டனின் கலைத்தன்மை என்பது  தன் சொந்த அனுபவங்களின் சுருங்கியபரப்பில் அடங்கியது. அதைவிட, அவரது கலைத்தன்மை என்பது தன் குறைவான சொந்த அனுபவங்களிலேயே முக்கியமான பல கூறுகளை விலக்கும் செயல்பாடுதான் என்று சொல்லலாம். ஜேன் ஆஸ்டனின் நாசுக்கான தன்மையை ஒரு முன்மாதிரி என போகிறபோக்கில் சொல்பவர்கள் அந்த நாசுக்கான தன்மையில் உள்ள ஜேன் ஆஸ்டனின் தனியாளுமையின் வடிவத்தை பார்க்கத் தவறியவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஜேன் ஆஸ்டனின் கலைத்தன்மை என்பது ‘அனுபவங்களை விலக்கும் கலை’ என்ற விசித்திரமான செயல்பாடு. அசாதாரணமான அழகுடன் பூக்களை மலரவைக்கும் பாலைநில கள்ளிச்செடிப்போல ஜேன் ஆஸ்டன் என்பவர் சுருங்கிய அனுபவப்பரப்பில் முளைக்கும் விந்தையான செடி. எழுதப்பட்டு ஒன்றரை நூற்றாண்டிற்கு பிறகு வேறு யாராலும் பின்பற்ற முடியாதபடி தனித்த ஒரு இலக்கிய வகைமைபோல ஜேன் ஆஸ்டனின் நாவல்கள் வாழ்வதன் ரகசியம் இதுதான்.

ஜேன் ஆஸ்டனின் நாவல்களில் ஆண்களின் நிலையும் இதே விஷயத்தைதான் தெளிவாக்குகின்றன. அவரது புனைவுலகில் உள்ள ஆண்களை தனியாக ஆராய்ந்தால் அந்த ஆண்சிங்களில் பெரும்பாலானவர்கள் நிஜ வாழ்க்கையில் எந்த இடத்திலும், எந்த காலத்திலும் இருக்க சாத்தியமே அற்றவர்கள்.  இலக்கியத்தில் பாத்திரப்படைப்பிற்கு என சில திட்டவட்டமான விதிகள் இருக்கின்றன. அந்த இலக்கிய விதிகளின்படி ஆராய்ந்தால் கதாப்பாத்திரங்கள் என்ற நிலையில் தங்களுக்கு என்று சொந்தமான அதிகாரப்பூர்வதன்மை கொண்ட ஆண்கள் ஜேன் ஆஸ்டனின் புனைவுலகில் குறைவாகவே இருக்கிறார்கள். ஜேன் ஆஸ்டனின் மேதைமை என்ற உயிர்மூச்சை சுவாசிக்காவிட்டால், அவரது படைப்புகளில் கதைசொல்லியின் தரப்பிற்கு வக்காலத்து வாங்கும் அந்த ஆண் கதாப்பாத்திரங்கள் மரப்பொம்மைகள் போல உயிரற்றவர்களாக ஆகிவிட்டிருப்பார்கள். ஆண்களை ஜேன் ஆஸ்டன் கையாளும்முறையை யோசித்தால் சிரிப்புதான் வரும். கதைக்கட்டுமானத்தின்(plot) திட்டவட்டமான சலனங்களுக்கு கண்டிப்பாக தேவை என்ற சந்தர்ப்பத்தில் ஆண்கள் இருப்பார்கள். அதைத்தவிர்த்து  ஆண்களை ஜேன் ஆஸ்டன் தன் புனைவுலகில் நுழைய அனுமதிப்பதில்லை. அதுகூட முக்கியமான கதாப்பாத்திரம் சரியான தருணத்தில் மட்டும்தான் உள்ளே நுழைய அனுமதி இருக்கிறது. ஆண்களுக்கு சாட்சியாக பெண்கள் இல்லாத, ஒரே ஒரு ஆண்கூட ஜேன் ஆஸ்டனின் புனைவுலகில் இல்லை. பெண்கள் பங்கேற்காத, இரண்டு ஆண்கள் மட்டும் தனியாக, சாவகாசமாக பேசிக்கொண்டிருக்கும்  ஒரு தருணத்தைகூட ஜேன் ஆஸ்டனின் படைப்புகளில் நம்மால் காணமுடியாது. ஏதாவது ஒரு பெண் கதாப்பாத்திரத்தின் மனப்பதிவு என்ற அளவில்தான் ஆண்களின் எண்ண ஓட்டங்களை ஜேன் ஆஸ்டன்  எழுதியிருக்கிறார். அதைத் தவிர்த்த வேறெந்த முறையிலும் ஆண்களை வெளிப்படுத்த அவர் ஒருபோதும் முயல்வதில்லை. திருமணமாகாத ஜேன் ஆஸ்டனுக்கு ஆண்கள் பாலிகேரா மலை1 போன்றவர்கள். பணத்தை ஒழுக்கநெறிகளின் அடிப்படையாக கொண்ட ஒரு சமூகத்தில் திருமணத்தில் முடியும் காதலை பேசுபொருளாகக் கொண்ட நாவல்களை எழுதிய ஜேன் ஆஸ்டன் ஆண்கள் என்ற பாலிகேரா மலையை காணவில்லை என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. இந்த நெருக்கடியான நிலையை அவர் எதிர்கொள்ளும் பிரத்யேகமான முறைமையைத்தான் மேலே விவாதித்தோம். ஜேன் ஆஸ்டன் தன் நாவல்களில் உயிராற்றல் கொண்ட எலிசபத் பென்னட் (Elizabeth bennet), எம்மா உட் ஹவுஸ்(Emma woodhouse), ஆன்னி எலியட் (Anne Elliot) போன்ற பெண் கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள். அப்படி உயிர்த்துடிப்பான ஒரு ஆண் கதாப்பாத்திரத்தைக்கூட ஜேன் ஆஸ்டன் உருவாக்கவில்லை. அவரது புகழ்பெற்ற நாவலான pride and prejudice முக்கிய ஆண் கதாப்பாத்திரமான டால்ஸி (dalse) கூட உயிர்த்துடிப்பும் விழைவும் கொண்ட கதாப்பாத்தி்ரம் அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். ஜேன் ஆஸ்டனின் புனைவுலகில் பாத்திரப்படைப்பு என்ற நிலையில் இந்த அம்சம் வெளிப்படையான தோல்விதான். ஆனால், இந்த தோல்வி அவரின் விசித்திரமான கலைத்தன்மையை மேலும் ஒளிர்வூட்டியிருக்கிறது என்று ஜேன் ஆஸ்டனின் படைப்புகளை வாசித்தவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.

  1. பாலிகேரா மலை: (பாலி ஏறமுடியாத மலை)- இந்த சொல்லாட்சி பாலியின் சாபம் தொடர்பானது. மதங்க முனிவர் அளித்த சாபத்தால் ரிஷ்யமூகம் என்ற மலையில் பாலி ஏறினால் தலைசிதறி இறக்க வேண்டிவரும். அதனால் மாவீரன் என்றாலும் பாலியால் ரிஷ்யமூக மலையில் மட்டும் ஏறமுடியாது. உறுதியானவர்களின் பலவீனமான இடம் அல்லது எவ்வளவு முயற்சித்தாலும் எட்டமுடியாத இலக்கு என்று ‘பாலிகேரா மலை’ என்ற சொல்லாட்சியை பொருள்கொள்ளலாம்.

தமிழாக்கம் அழகியமணவாளன்

நாவலும் மறைபிரதியும் – பி.கே.பாலகிருஷ்ணன்

நாவலின் பேசுபொருள் -பி.கே.பாலகிருஷ்ணன்

கலைமனதில் உயிர்த்தெழும் வாழ்க்கை அனுபவம்

முந்தைய கட்டுரைபழையகுரல்-கடிதம்
அடுத்த கட்டுரைஜெகதீஷ்குமார் மொழியாக்கங்கள்