நீலத்தாவணி

ரம்யாவின் முதல் சிறுகதை வனம் இதழில். பெண்களுக்கே உரிய உலகை பெரும்பாலும் உரையாடல்கள் வழியாக சரளமாக கொண்டுசென்றிருப்பதால், அதில் வெளிப்படும் உண்மையான வாழ்க்கைச்சிக்கலால் நல்ல கதையாக ஆகிறது. நம் குடும்பங்களில் ஒரு பெண் அழகா இல்லையா என்பதை உண்மையில் அவளுடைய குடும்பத்தவரே முடிவுசெய்து அவளுக்கு புகட்டிவிடுகின்றனர். வளரிளமையில் ஒரு பெண் தன் தோற்றம் பற்றிய நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் ஒருங்கே அடைந்து ஓர் நிலைக்காத ஊசலாட்டத்தை அடைகிறாள். எங்கோ ஒரு புள்ளியில் நிலைகொள்கிறாள்.

இதே கதை என் வீட்டில் நிகழ்ந்துள்ளது. என் தங்கை ஒரு இளஞ்சிவப்பு நிற தாவணியை விரும்பி வாங்கிக்கொண்டாள். அவளே சேர்த்த காசு. ஆனால் என் அக்கா ஒருத்தி “நீ மாநிறம். அது உனக்கு மேட்ச் ஆகலை” என்று ஒரே வரியில் அதை முறித்துப்போட்டாள். தங்கை அதை பிறகு அணியவில்லை. நான் ஒரு நாடகத்தில் தலைப்பாகையாக பயன்படுத்தினேன். இப்போது யோசிக்கும்போது அது தங்கை தன்னை வகுத்துக்கொள்ள முயன்ற ஒரு நுண்மையான தருணம் என தோன்றுகிறது. மிகச்சிறிய விஷயங்களை எழுதும்போது அவற்றில் மெய்யான வாழ்க்கை முனைகொண்டுவிட்டால் ஓர் அழகு உருவாகிறது. அந்த அழகு நிகழ்ந்த கதை இது

நீலத்தாவணி – ரம்யா

இவ்விதழில் சுதா ஸ்ரீனிவாசனின் இரண்டாவது கதையும், ஆனந்த்குமார் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

இதழ்வடிவமைப்பை வாசிப்புக்கு உகந்ததாக ஆக்கலாம். பொதுவாக வெள்ளையில் கறுப்பு எழுத்துக்கள் தவிர எவையுமே வாசிப்புக்கு உகந்தவை அல்ல. அதேபோல அச்சில் பத்தி என்பது ஒரு வார்த்தை தள்ளி அமைவதனால் நிகழலாம். இணையப்பக்கத்தில் நாம் ஸ்க்ரோல் செய்து வாசிக்கிறோம். பத்திக்கு பத்தி ஒரு வரியின் இடைவெளி இருந்தாலொழிய சுமுக வாசிப்பு நிகழ்வதில்லை – இந்த தளத்தில் அப்படித்தான் உள்ளது. கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் வெளிவரும் இந்த தளம் பல ஆயிரம் வாசக எதிர்வினைகள் வழியாக உருவாக்கிக்கொண்டவை இந்த விதிகள்.

முகப்பு-வனம்

முந்தைய கட்டுரைவெண்முரசில் மரவுரி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉரை,கடிதங்கள்