https://jegadeeshkumark.blogspot.com/
அன்புள்ள ஜெ
உங்கள் கதைகளின் ஆங்கில மொழியாக்கங்களை வாசிக்கிறேன். அவற்றை இங்கே என் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இங்கே அவர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி நான் என்ன படிக்கிறேன் என்பது. அவர்கள் ஆங்கிலத்தில் வாசிப்பார்கள். சேதன் பகத் வகையறாதான். ஆனால் ஆங்கிலத்தில் வாசிப்பது ஒரு கெத்து என நினைப்பும், ஆங்கிலம் தெரியாமல்தான் தமிழில் வாசிக்கிறேன் என்னும் நினைப்பும் அவர்களுக்கு உண்டு. நான் ஒன்றும் சொல்வதில்லை.
இந்தக்கதைகள் வெளிவந்தபோது இவற்றை அவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்தேன். அவர்கள் அந்த இதழ்களைத் தான் முதலில் பார்த்தார்கள். Prometheus Dreaming இதழை பார்த்தாலே அது ஒரு தீவிரமான இதழ் என்று தெரியும்.அது அவர்களை வாயடைக்கச் செய்துவிடும். கதையைப் படித்தால் மேற்கொண்டு கருத்து தெரிவிக்கவும் தெம்பிருக்காது. ஒரு சிலர் “நாங்கள் இவ்வளவு சீரியஸாக வாசிப்பதில்லை” என்றார்கள். ஒருவர் “தமிழில் இவ்வளவு சீரியஸ் இலக்கியமெல்லாம் இருக்கிறதா?” என்றார். அவர்கள் பார்ப்பது இந்தக் கதை மற்ற இந்திய எழுத்தாளர்களின் கதைகளில் ஒன்றாக வரவில்லை, கூட இருப்பது சர்வதேச எழுத்தாளர்களின் கதைகள் என்பதைத்தான். இந்த வகையான மொழியாக்கங்கள் எவ்வளவு முக்கியம், இவை முக்கியமான இதழ்களில் வெளியாவது எவ்வளவு முக்கியம் என்று இப்போது மிக தெரிகிறது.
பரவலாக இங்கே அறியப்பட்டிருப்பவர் பெருமாள் முருகன். இந்திய ஆங்கில இதழ்கள் அவரைப்பற்றி எழுதிக்கொண்டே இருந்தார்கள். மிகப்பெரிய ஒரு மீடியா டீம் அவருக்காக வேலை செய்தது. ஆனால் அந்த நூல்களை முன்வைப்பது தமிழனுக்கு கௌரவம் அல்ல. அவை மிக எளிமையான கருத்துப்பிரச்சார நூல்கள். அதை சொன்னதுமே “எங்களூரில் இதைவிட சிறப்பாக ஏராளமானவர்கள் எழுதுகிறார்கள்” என்று சொல்லி நாலைந்து பேரைச் சொல்வார்கள். அதோடு அந்நூல்கள் பற்றிய எந்த விவாதத்திலும் தமிழர்களுக்கு இலக்கியரசனை இல்லை, இலக்கியவாதியை அடிக்கப்போன முட்டாள்கூட்டம் என்பதும் சேர்ந்தே பேசப்படும். அந்த விஷயத்தால்தான் அந்நூல்கள் கவனிக்கப்படுகின்றன.
இந்தக்கதைகளில் உள்ள பொதுவான மிஸ்டிக் அம்சம், கவித்துவம் இந்தியாவில் மற்றமொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் கதைகளில் மிக அபூர்வம். பொதுவாக அரசியல் அல்லது சமூகம் சார்ந்து கருத்து சொல்லும் கதைகளே ஆங்கிலத்தில் வருகின்றன. ஏனென்றால் மொழியாக்கம் செய்யும் ஆங்கிலப்பேராசிரியர்களுக்கு அந்தக்கதைகள்தான் புரியும். அவற்றின் நடுவே இந்தக்கதைகள் தனித்து தெரிகின்றன. இவற்றை நாம் முன்வைக்கும்போது எந்த நண்பர்சபையிலும் ஒரு நிமிர்வு நமக்கு உருவாகிறது. நவீனத் தமிழிலக்கியம் பற்றி பெருமிதத்துடன் பேசமுடிகிறது. இது எவ்வளவு பெரிய கொடை என்று இலக்கியவாசகனுக்கே தெரியும். நம்மில் பலர் கூட இன்னும் இதை உணர்ந்திருக்கவில்லை.
ஜெகதீஷ்குமாரின் மொழியாக்கமும் மிகமிக நன்றாக உள்ளது. இந்தியன் இங்கிலீஷின் சாயல் இல்லை. அதேசமயம் இந்தியன் இங்கிலீஷ் ஆகக்கூடாது என நினைத்து செயற்கையாகச் சேர்க்கும் ஆங்கில இடியம்களும் க்ளீஷேக்களும் இல்லை. செறிவான நல்ல நடை. அழகான ஒழுக்குள்ள நடை.
இன்றைக்கு ”Heavier and denser things do not make noise when they sink”என்னும் வரியை என் டேபிளில் எழுதி வைத்திருந்தேன். பலபேர் கேட்டார்கள். அவர்களுக்கு இந்த கதையை அனுப்பி வைத்தேன்.
ஆர்.ரமணன்