அன்புள்ள ஐயா,
திருநெல்வேலியில் உங்கள் உரையினை நேரில் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. நான் உங்கள் உரையினை நேரில் கேட்பதென்பது இதுவே முதன்முறை. மிகச்சிறப்பான உரையாக அமைந்தது. பலவகையான மக்களமைந்திருந்த கூட்டம் கேட்டார் பிணிக்கும் சொல் போல உங்கள் உரைகேட்டு ஆழ்ந்து அமைந்திருந்ததனை கண்டேன்.
நெல்லையில் சென்ற பல ஆண்டுகளில் நான் கேட்ட உரைகளில் முதன்மையான உரையிதுவே. எனக்கு அகவை அறுபத்தெட்டு. பல புகழ்பெற்ற பேச்சாளர்களின் உரைகளை கேட்டடவன், உங்கள் உரையில் ஒரு வார்த்தைகூட வீணானதாக அமையவில்லை. பேச்சு எங்கும் மடைதிரும்பவில்லை. சொல்லவந்த மையத்தினை ஆணித்தரமாகச் சொன்னீர்கள். தேவையற்ற கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஏனையவை இல்லை. தொடர்பற்ற மேற்கோள்கள், பழகிப்போன மேற்கோள் ஆகியவையும் இல்லை. இன்றைய பேச்சாளர்கள் பலர் பாதிக்குமேல் நகைச்சுவை துணுக்குகளையே பேசுகின்றார்கள்.
நான் குன்றக்குடி அடிகளாரின் உரையை கேட்டவன். நான் கேட்ட உரைகளில் அவருடைய உரையே தலைசிறந்தது என துணிவேன். புலவர் கீரன் உரை அங்கங்கே அலையுமெனினும் அவர் சரியானபடி இருந்தால் உரை அரிதான பலவற்றைச் சொல்லும்தகைமை கொண்டிருக்கும். இன்றைக்கு நமக்கு தேவை புதியவிஷயங்களை அழகுறச் சொல்லும் நல்ல பேச்சாளர்கள்தான். சைவம் குறித்தும் தமிழ்த்தொல்லிலக்கியங்கள் குறித்தும் பேச நல்ல பேச்சாளர் அருகியருகி வருகின்றனர்
நெல்லையில் நீங்கள் கட்டணம் வைத்து உரையாற்றியதாகச் சொல்லியறிந்தேன். நீங்கள் நம் மரபுச்செல்வங்கள் பற்றிய உரைகளை தொடர்ந்து ஆற்றவேண்டுமென விரும்புகிறேன். இன்று நல்ல உரைகளுக்கான தேவை மிகவும் உள்ளது.
இராம. சங்கரலிங்கம்
***
அன்புள்ள சங்கரலிங்கம் அவர்களுக்கு,
பாராட்டுகளுக்கு நன்றி, ஆனால் என் உரைகள் எவையும் எனக்கு நிறைவை அளிப்பதில்லை. ஏனென்றால் உண்மையில் மேடை சார்ந்த ‘உதறல்’ இன்னமும் கூட என்னிடமிருந்து விலகவில்லை. மேடையில் பேசவேண்டும் என்பதே பதற்றமூட்டும் ஒன்றாக உள்ளது. எத்தனை தயாரித்துக் கொண்டாலும் மேடையுரையில் சொற்குளறுபடிகளும், செய்திக் குளறுபடிகளும் அமைகின்றன. கொஞ்சம் உளறாமல் ஓர் உரையும் இதுவரை ஆற்றவில்லை. ஆகவே கூடுமானவரை மேடையுரைகளை தவிர்ப்பதே என் வழக்கம். இனியும் அப்படித்தான்.
உரையின் பதிவுகளை திரும்பக் கேட்கையில் பிழைகள், விடுபடல்கள் வந்து அறைகின்றன. திரும்பத்திரும்ப ஒரே உரையை ஆற்றும்போது இப்பிழைகள் நிகழ்வதில்லை. உரையை மேடையில் சிந்தித்து நிகழ்த்தும்போது அமைகிறது. முக்கியமாக மனம் உரையை விட முன்னால் செல்கிறது. உள்ளே ஒரு சொல் இருக்க இன்னொரு சொல் வெளியே வருகிறது. எண்ணியது அல்ல சொல்லில் இருப்பது.
இந்த உரையிலேயே மயிலை சீனி வெங்கடசாமி என நினைத்து ந.மு.வெங்கடசாமி நாட்டார் என்று சொல்லியிருக்கிறேன். மு.அருணாச்சலம் அவர்களின் தமிழிலக்கிய வரலாறு 16 ஆம் நூற்றாண்டு சிற்றிலக்கியங்கள் வரைத்தான். நான் 19 ஆம் நூற்றாண்டு வரை என சொல்லியிருக்கிறேன் (அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இலக்கிய வரலாறு எழுத எண்ணியிருந்தார், எழுதவில்லை.)
இன்னொரு பிழை என்பது பேசும்போது ஒரு புதிய எண்ணம் தோன்றுமென்றால் மிக முக்கியமான தொடர்ச்சியை விட்டுவிட்டு அதை தாவிப் பற்றிக் கொள்வது. பின்னர் உரையை கேட்டால் அந்த விடுபடல் காரணமாக கேட்கவே முடியாதபடி ஏமாற்றமும் எரிச்சலும் மிஞ்சுகிறது. உரையை திருத்தியமைக்க முடியாது. இந்த உரையிலேயே கயவாகு காலக்கணிப்பு முறையில் இருந்து மனோன்மணியம் சுந்தரம் பிள்ளைக்கு வந்திருக்கவேண்டும். நெல்லையில் ஆற்றும் உரையில் அவர் விடுபடுவதென்பது பெரும் பிழை. பேசுவதற்கு முன்புகூட அவரைப் பற்றி எண்ணி குறித்து வைத்திருந்தேன். தாளிலேயே எஞ்சிவிட்டது.
ஆகவே சொற்பொழிவுக்கலை எனக்கு இன்னமும் அந்நியமானதுதான். நல்ல சொற்பொழிவாளர்கள் என் பெருமதிப்புக்குரியவர்கள்.
*
தமிழகத்தில் சொற்பொழிவு என்பது ஒரு மாபெரும் மக்களியக்கமாக கிட்டத்தட்ட நூறாண்டுகள் நடைபெற்றது. மக்கள் அதற்குப் பழகியிருக்கிறார்கள். ஆகவேதான் தமிழகத்தில் எந்த எழுத்தாளரை விடவும் சொற்பொழிவாளர்கள் பெரும்புகழ் பெற்றிருந்தார்கள். அவர்கள் பேசுவதற்குரிய மரபிலக்கியம் சார்ந்த அமைப்புகள் கிட்டத்தட்ட ஆயிரம் தமிழகத்தில் உள்ளன.
இவை பெரும்பாலும் 1900 முதல் 1950 வரையிலான தமிழ்மீட்பு அலையின்போது உருவானவை. சைவசித்தாந்த சபைகள், கம்பன் கழகங்கள், திருப்புகழ் மன்றங்கள், கந்தபுராண அரங்குகள், சைவத்திருமுறை அரங்குகள், திருவள்ளுவர் மன்றங்கள், இளங்கோ மன்றங்கள், வள்ளலார் மன்றங்கள், சேக்கிழார் மன்றங்கள் எனச் செயல்படும் வெவ்வேறு வகை அமைப்புகளின் இயல்புகளில் பொதுவானது தமிழ் மீட்புதான்.
1850 முதல் தொடர்ச்சியாக ஏடுகளில் இருந்து அச்சேறி பொதுவாசிப்புச் சூழலை வந்தடையத் தொடங்கிய தமிழ் மரபிலக்கியத்தை வாசிப்பதெப்படி என தமிழ்ப்பொதுப் பண்பாட்டுக்குக் கற்றுத்தந்தவை இந்த அமைப்புகள். இந்திய அளவில் இன்னொரு மொழியில் இத்தனை பிரம்மாண்டமான மரபிலக்கியம் ஒரேசமயம் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டதில்லை. இத்தனைபெரிய வாசிப்பியக்கம் நிகழ்ந்ததும் இல்லை. இந்த அமைப்புக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
ஞானியார் சுவாமிகள், மறைமலை அடிகள், வி.கனகசபைப் பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், அ.சீனிவாசராகவன், ம.பொ.சிவஞானம், புலவர் கீரன், குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன் எனத் தொடங்கி பாரதி பாஸ்கர், மரபின் மைந்தன் முத்தையா வரை ஒரு பெரிய பேச்சாளர் வரிசை இந்த அமைப்புகளைச் சார்ந்து செயல்பட்டது. அவர்களின் பங்களிப்பு தமிழ் பண்பாட்டுக்கு மிக முக்கியமானது.
ஆனால் நம் மரபிலக்கியம் சார்ந்த அமைப்புகள் இன்று ஒரு சிக்கலில் உள்ளன. சட்டென்று மரபிலக்கியம் கல்விநிலையங்களில் இருந்து அனேகமாக மறைந்தது. வீடுகளில் திருமுறைகளையோ, கந்தபுராணத்தையோ, ஆழ்வார்பாடல்களையோ பிள்ளைகளுக்கு அளிப்பதும் நின்றது. படிப்பில் தமிழ் ஒரு சிறிய துணைப்பாடமே என ஆகியது. தமிழ் இன்று எதற்கும் தகுதிப்பாடம் அல்ல இன்று. கல்வியில் மையமொழி ஆங்கிலமே. விளைவாக தமிழ் அறிந்த, தமிழ்மேல் ஆர்வம் கொண்ட அரங்கினர் எந்த ஊரிலும் இன்று அமைவதில்லை. இளைய தலைமுறையினர் இவ்வரங்குகளில் மிகமிகக் குறைவு.
இப்படி தமிழார்வம் அற்ற அரங்கினர் அமைந்தபோது அவர்களுக்கு தீவிரமான தமிழார்வத்தை ஊட்டும்வகையில் தமிழமைப்புக்கள் செயல்பட்டிருக்கவேண்டும். தமிழ் மறைந்துவரும் சூழலுக்கு ஓர் எதிர்விசையாக நிலைகொண்டிருக்கவேண்டும். ஆனால் நேர்மாறாக அவை அந்த தமிழார்வம் அற்ற மக்கள்திரளை மகிழ்விக்கும் வகையில் சொற்பொழிவுகளை அமைக்கத் தொடங்கின. அவர்களுக்கு என்ன தெரியுமோ, எதில் ஆர்வமுண்டோ அதைப் பேசத் தொடங்கின.
இவ்வமைப்புகளை நடத்துபவர்களில் உண்மையான தமிழார்வம் கொண்ட சிலரை எனக்கு தெரியும். அவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் காரணமும் நியாயமானது. அவர்கள் நன்கொடை வாங்கித்தான் நிகழ்ச்சிகளை அமைக்கவேண்டும். அந்நிகழ்ச்சிகளுக்கு பெருந்திரளாக மக்கள் வரவில்லை என்றால் நன்கொடை அளிப்பவர்கள் நிகழ்ச்சிகளுக்கு பணம் செலவிடப்படவில்லை என நினைப்பார்கள். நிகழ்ச்சிகளுக்கு ‘பிரபலங்கள்’ வரவில்லை எனில் பணம் கிடைக்காது. வெறும் நகைச்சுவைகளை பேசுபவர்களே பிரபலமாக இருக்கிறார்கள். ஆகவே வேறுவழியில்லை.
பட்டிமன்றத்துக்கு மட்டுமே இன்று மக்கள் வருகிறார்கள். சொற்பொழிவுகளுக்கு எவரும் வருவதில்லை. பட்டிமன்றம் என்னும் அமைப்பு உருவானது எதற்கு என குன்றக்குடி அடிகளார் ஒரு நூலில் சொல்கிறார். சிலப்பதிகாரம் முதலிய செவ்விலக்கிய நூல்களைப் பற்றிய உரைகள் நடக்கும்போது ஓர் உரை முடிந்ததுமே மக்கள் கலையும் வழக்கம் இருந்தது. அத்தனை உரைகளையும் அவர்களை கேட்கவைக்கும் பொருட்டே பட்டிமன்றம் என்னும் அமைப்பு உருவாகியது. ஓர் உரையை கேட்டவர் இறுதித் தீர்ப்புரையை கேட்காமல் கிளம்ப முடியாது.
நம் பட்டிமன்றங்களின் தலைப்புகள் இன்று எப்படி மாறியுள்ளன என்று பார்த்தால் இது தெரியும். ‘தலைவியரில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா?’ என்று விவாதித்த காலம் மறைந்துவிட்டது. ‘கொடுமைப்படுத்துவது மாமனாரா மாமியாரார்?’ ‘தமிழ் சினிமாப்பாடல்களில் காதலா காமமா?’ இதெல்லாம்தான் இன்றைய பட்டிமன்றத் தலைப்புகள். இன்னும் ஒருபடி மேலே சென்று திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் தமிழ்ச் செவ்விலக்கியங்களை, தனித்தமிழை, தமிழியக்கத்தையே கேலியும் கிண்டலும் செய்வதே இன்று பட்டிமன்றங்களில் நடைபெறுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சைவ ஆலயத்தின் திருவிழாவில் சொற்பொழிவு நிகழ்ச்சி. ஒரு பேச்சாளர் நகைச்சுவை என்ற பெயரில் அத்தனை நாயன்மார்களையும் கேலி செய்துகொண்டிருந்தார். திருமுறை பாடல்களை அபத்தமாக கேலிப்பாடலாக பாடிக்காட்டினார். பரோட்டாவுக்கு சால்னா கேட்பதை ‘பித்தா பிறைசூடி’ என்னும் பாணியில் சொல்லி காட்டினார். அரங்கு சிரித்துக்கொந்தளித்துக் கொண்டிருந்தது.
இச்சூழலின் விளைவாக மரபிலக்கியம் சார்ந்த அமைப்புகள் இலக்கியரசனைக்கு எதிரான மனநிலையை உருவாக்குவனவாக மாறிவிட்டிருக்கின்றன. அங்கே வந்தமரும் கூட்டம் ஒரு கேலிச்சிரிப்பு மனநிலையிலேயே இருக்கிறது. நாம் மேடையில் அனைத்தையும் கேலிசெய்யவேண்டும், நம்மைநாமே கேலி செய்யவேண்டும். அதை அவர்கள் ரசிப்பார்கள்.
அதைவிட அபாயமான ஒன்று உண்டு. அங்கே வருபவர்களில் பலர் ஏற்கனவே அவர்களுக்கு என்ன தெரியுமோ அதையே பேச்சாளர் சொல்லவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தமிழ்ப்பெருமிதம், சைவப்பெருமிதம், புளிக்கப்புளிக்க புகழ்மொழிகள், கூசக்கூச வரலாற்றுப் பொய்கள். எல்லாவற்றுக்கும் கைதட்டுவார்கள். பேசுபவர் எத்தகைய அறிஞர் என்றாலும் அவர்களுக்கு ஏற்கனவே தெரியாத, அவர்கள் முன்னரே ஏற்றுக்கொண்டிராத ஒன்றை சொல்லிவிட்டால் சிக்கல்தான். கொதித்து எழுந்துவிடுவார்கள்.
ஏனென்றால் மேடைப்பேச்சாளரை அவர்கள் தங்களுக்கு எதையாவது கற்பிப்பவர் என நினைக்கவில்லை. தங்களை மகிழ்விப்பவர் என நினைக்கிறார்கள். குன்றக்குடி அடிகளார் முன் அமர்ந்திருந்த கூட்டம் குருவின் முன் சீடர்கள் என உணர்ந்தது. இன்று முச்சந்தியில் வித்தை காட்டுபவன் முன் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்ப்பவர்களாக உணர்கிறது. அவன் கம்பிக்குள் நிர்வாணமாக நுழையவேண்டும். சவுக்கால் தன்னைத்தானே அடித்துக் கொள்ளவேண்டும். இவர்கள் எதிர்பார்ப்பது அதையே.
உண்மையில் மேடையில் நின்றுபேசுபவர் ஓர் அறிஞர். இன்று மேடையில் பேசும் ஒருவர் மறைமலை அடிகளாரும் குன்றக்குடி அடிகளாரும் நின்ற அதே பீடத்தில் நிற்பவர். அவர் தன் மனைவி தன்னை செருப்பாலடிப்பாள் என்றும், பக்கத்து வீட்டுக்காரன் காறித்துப்புவான் என்றும் பேசும்போது தன்னை மட்டுமன்றி ஒரு மரபையே கீழிறக்குகிறார். ஆசிரியர், கற்பிப்பவர் என்னும் நிலையில் இருந்து மிகமிகக் கீழிறங்குகிறார்.
ஒரு மேடைப்பேச்சாளர் அவ்வாறு தன் தரம் விட்டுக் கீழிறங்கியபின் அவர் சொல்வதன் மேல் அந்த அரங்கினருக்கு எந்த மதிப்பும் உருவாவதில்லை. பலசமயம் அவர் தீவிரமாக ஏதாவது சொல்லும்போதும் அரங்கு சிரிக்கிறது. தொடர்ந்து அவர் கனமாக எதையாவது பேசினால் அப்படியே உளம் விலகிவிடுகிறது, அரங்கில் ஒரு சலசலப்பு உருவாகிவிடுகிறது.
பேச்சாளன் தன்னை கீழிறக்கி கொள்வதை எதன்பொருட்டு கூட்டம் ரசிக்கிறது? அதில் ஒரு திரள்சார் உளநிலை உள்ளது. பலமுறை அதைப்பற்றி எழுதியிருக்கிறேன். பெருந்திரளுக்கு பிரபலங்கள்மேல் வழிபாட்டுணர்வு உள்ளது. ஆனால் அதற்கும் ஆழத்தில் ஒரு வெறுப்பும் உள்ளது. அந்த வெறுப்பு சாமானியனின் காழ்ப்பு (Common man’s Grudge) எனப்படுகிறது. அது நடிகர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆகவேதான் அவர்கள் மிகமிகமிகப் பணிவானவர்களாக மேடைகளில் தோன்றுகிறார்கள்.
எந்த சாமானியனும் தன் ஆழத்தில் தன்னை மிகப்பெரியவனாகவே நினைத்துக் கொள்கிறான். உலகமே தன்னைச்சுற்றித்தான் நிகழ்வதாகக் கற்பனை செய்துகொள்கிறான். ’நான் அரங்கில் இருக்கிறேன், இவன் மேடையில் இருக்கிறான், ஆனால் நான் இவனைவிட ஒரு படி மேல்’ இதுதான் சாமானியனின் மனநிலை. அந்த மனநிலையை பயன்படுத்திக்கொண்டு அவனிடம் கைதட்டல் வாங்கவே மேடைப்பேச்சாளர் தன்னை கீழிறக்குகிறார்.
இப்படியே நையாண்டியுரைகள் கேட்டுக்கேட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்ட அரங்கினரே எல்லா ஊர்களிலும் உள்ளனர். அவர்களுக்கு முன்னால் உரையாற்றுவது என்பது மிகமிகக் கடினம். அவர்கள் நம்மை கவனிக்க மாட்டார்கள். நாம் நம்மையே கோமாளியாக்கிக் கொண்டு நகைச்சுவையை பரிமாறுவோம் என எதிர்பார்ப்பார்கள்.
என்னை மரபிலக்கிய அமைப்புகள் தொடர்ந்து அழைப்பதுண்டு. கல்லூரிகளும் அழைப்பார்கள். முழுமையாகத் தவிர்ப்பதே என் வழக்கம். பாரதி பாஸ்கர் ஒரு முறை மிக வருந்தி அழைத்தார். அவர் என் மதிப்புக்குரியவர் என்றாலும் தவிர்த்துவிட்டேன்.
என்னால் பொது அரங்கினர் எதிர்பார்க்கும் உரையை நிகழ்த்த முடியாது. என் குரலும் உச்சரிப்பும் ஓங்கி ஒலிப்பவை அல்ல. என்னால் கத்த முடியாது. என் உச்சரிப்பில் ஒரு கன்யாகுமரித்தனம் உண்டு. (குறிப்பாக, விளவங்கோட்டுத்தனம்). தெரியாதவர்கள் அதை மலையாளம் என்பார்கள். குலசேகரம் உச்சரிப்பு என்பது என் அடையாளம். அதை நான் மறைக்கவோ அழிக்கவோ விரும்பவில்லை.
என்னால் ஒரு மையப்பொருள் சார்ந்தே பேசமுடியும். திசைதிரும்பி நகைச்சுவைகளைச் சொல்ல முடியாது.என் உரை தெளிவாகத் திட்டமிடப்பட்ட கட்டமைப்பு கொண்டிருக்கும். நினைத்து நினைத்து நான் பேசுவதில்லை. ஆகவே கேட்பவர் தன் நினைவில் இருந்து என் உரையை திரும்பச் சொல்லமுடியும். நான் எந்த உரையையும் முறையான தயாரிப்பு இன்றி பேசுவதில்லை. ஒருமுறை பேசியதை திரும்பப்பேசுவதே இல்லை.
தமிழ் மரபிலக்கியம் சார்ந்தும் பக்தியிலக்கியம் சார்ந்தும் நான் சில உரைகளை ஆற்ற முடியும். மற்றவர்கள் சொல்லாத சிலவற்றைச் சொல்லவும் முடியும். நான் சொல்பவற்றில் முக்கியமாக வாசகர் கொள்ளவேண்டியது அந்த ஒருங்கிணைப்பைத்தான். அதன் வழியாக ஒரு பார்வையை முன்வைக்கிறேன். அந்தப்பார்வையை கேட்பவர் பரிசீலிக்கலாம். அவர் அதை மறுக்கலாம், ஆனால் யோசித்து மறுத்தாரென்றால் உரை தன் இலக்கை எய்திவிட்டது என்றேபொருள்.
நான் எப்போதுமே சிந்தனையைச் சீண்டும் ஒரு பார்வையையே முன்வைக்க முயல்கிறேன். ஒருவகை Brain Teaser என சொல்லலாம். அதையொட்டி அரங்கு யோசிக்கலாம் என்றே எப்போதும் முடிப்பது வழக்கம். மரபான கருத்துக்களைச் சொல்வதில்லை. ஒரு புதிய வினா, புதிய பார்வை இல்லாமல் ஓர் உரையைக்கூட ஆற்றியதில்லை.
ஆனால் அது அந்த மேடையில் நிகழ்வது. ஆகவே சிலசமயம் மேடையிலேயே நான் குழம்பிவிடுகிறேன். சரியாகச் சொல்கிறோமா என்னும் குழப்பம் வருவதுண்டு. சட்டென்று புதிய ஓர் எண்ணம் வந்து அதைநோக்கி தாவி விடுவதுமுண்டு. என் உரைகள் முடிபுகளைச் சொல்பவை அல்ல. ஒருவகை சிந்தனைகள், என்னுடன் சிந்திக்க அரங்கை அழைக்கிறேன்.
மேலே சொன்ன நெல்லை உரையில் மரபிலக்கியம் -நவீன இலக்கியம் இரண்டுக்குமான முதன்மையான வேறுபாடென்ன என்பதை வரையறுக்க முயல்கிறேன். ஏன் அவை ஒன்றையொன்று எதிர்க்கின்றன, ஏன் அவை ஒன்றாகவே முடியாது, ஆனால் எவ்வண்ணம் அவை முரணியக்கமாக இணைந்து செயல்பட முடியும் என்று விளக்க முயல்கிறேன். கவனியுங்கள், விளக்கவில்லை. அது ஒரு முயற்சிதான்.
மயிலை சீனி வேங்கடசாமி அவிநயத்தை உருவாக்கியதை ஒரு நவீன நாவலாசிரியன் நாவலாக்கினால் நிகழ்வது என்ன என்பதே நான் முன்வைக்க விரும்பியது. அது ஒன்றை ஒன்று மறுத்து செயல்படும் இரு இயக்கங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் தருணம். அதன் சாத்தியங்கள் என்ன என்று சொல்ல முயல்கிறேன். அது புனைவிலக்கியம் மரபைச் சந்திப்பது. மரபிலக்கியம் புதிய புனைவால் மறுவரையறை செய்யப்படுவது. அது நிகழவேண்டும் என்று சொல்ல வந்தேன். சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன்.
அந்த மையத்தை ஒட்டி நவீன இலக்கியம் – பண்டைய இலக்கியம் என்னும் முரணியக்கம் குறித்து மேலும் யோசிக்கும் ஒருவரை எண்ணியே பேசுகிறேன். அவர் என்னை மறுத்தாலும் அந்த மையம் சார்ந்து மேலும் சென்றாரென்றால் போதும். அதற்கு நான் பேசுவதை கவனிக்கும் அரங்கு வேண்டும். குரல்பயிற்சி இல்லாத, சீராக ஒழுகும் பேச்சுமுறை இல்லாத என்னைப்போன்ற பேச்சாளர்களைக் கேட்கவேண்டும் என்றால் கூர்ந்த கவனம் தேவை. அது நம் பொதுச்சூழலில் இல்லை.
அத்துடன் ஒன்றுண்டு, நான் அரங்கை மகிழ்விப்பவன் அல்ல, அரங்கின் ஆசிரியன். மேடையில் நின்றிருக்கும் நான் நித்யசைதன்ய யதியின், எம்.கோவிந்தனின், சுந்தர ராமசாமியின் மரபினன். ஓர் ஆசிரியன் என்றே என்னை என்னால் முன்வைக்க முடியும்.
இலக்கியம் குறித்தும், மெய்யியல் குறித்தும் அப்பாலுள்ள ஆன்மிகநிலைகள் சில குறித்தும் கற்பிக்கும் தகுதி கொண்டவன் என இன்று என் ஆசிரியர்களை நினைத்துக்கொண்டு என்னால் சொல்லமுடியும். அதை சற்றேனும் ஏற்காமல் எங்களிடம் விகடம் செய் என என்னிடம் கோரும் ஓர் அரங்கின் முன் பேசுவது என்னையும் என் மரபையும் நான் சிறுமைசெய்துகொள்வதாகும்.
ஆகவேதான் கட்டண உரைகள். அங்கே அந்த உறுதிப்பாட்டை அரங்கு எனக்கு அளிக்கிறது. பெரிய திறந்த அரங்கு எனக்கு அளிக்கும் பதற்றமும் இல்லாமலாகிறது. குறைவான கூட்டம், ஆனால் என்னை கேட்பதற்கென்றே வந்தவர்கள். நான் சொல்வதை ஒட்டி ஏற்றும் மறுத்தும் யோசிப்பவர்கள்.
நிறைய பேசுகிறேனோ என்றும் அவ்வப்போது தோன்றுகிறது. என் உரைகளை என்னுடைய நல்ல வெளிப்பாடுகள் என சொல்ல மாட்டேன். அவற்றினூடாக என்னை அறிவது சரியானதும் அல்ல.
ஜெ
***