புதுமைப்பித்தனின் பெண்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே? சிறிது காலமாக தொடர்ந்து புதுமைப்பித்தனை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய படைப்புகளில் வெளிப்படும் ஒரு பொதுப் பண்பாக இருப்பது அவருடைய பெண்கள் சார்ந்த சித்தரிப்புகள். அவருடைய படைப்புகளில் வெளிப்படும் பெண்கள் பெரும்பாலும் அன்றைய சமூகத்தால் வரையறுக்கப்பட்ட “குடும்பப் பாங்கான அடக்க ஒடுக்கமான பெண்கள்” எனும் வகை மாதிரியிலேயே சித்தரிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன் sir (செல்லம்மாள், கோபாலய்யங்காரின் மனைவி, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ஒரு நாள் கழிந்தது போன்ற கதைகள்). அவர்களுக்கு பெரும்பாலும் agency என்ற ஒன்று இருப்பதில்லை. அவர்கள் பேதைகளாக, குடும்பத்திற்கு அப்பால் வேறு ஒன்றும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி இல்லாத பெண்கள் சிறிது எதிர்மறையாகவே சித்தரிக்கப்படுகிறார்கள் (காஞ்சனை, மாய வலை, புதிய கூண்டு போன்ற கதைகள்). அகல்யை, சாப விமோசனம், பொன்னகரம் போன்ற கதைகளில் கற்பு, பெண்களுக்கான நீதி போன்றவை நேரடியாகவே கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் சித்தரிப்புகள் என்ற வகையில் அக்கதைகளிலும் பெண்கள் காலத்தின், சூழ்நிலைகளின் கைப்பாவைகளாகவே இருக்கிறார்கள்.

இது புதுமைப்பித்தன் காலத்து பெண்களின் நிலையைப் பற்றிய கச்சிதமான சித்தரிப்பாகவே இருக்கிறது. ஆனால் புதுமைப்பித்தன் அன்றைய சமூகத்தின் பல்வேறு குறைகள் மீதான மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். அவரிடம் இருந்த மேற்கத்திய தாக்கத்தாலும், அறச் சீற்றத்தாலும் அன்றைய சமூகத்தால் ஏற்கப்பட்ட பல பழமைகளை அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறார். ஆனால் பெண்கள் சார்ந்த சித்தரிப்புகளை மட்டும் அப்படியே அவர் ஏற்றுக்கொள்வது மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது. இதற்கான காரணங்களை அவர் தனிவாழ்க்கையிலிருந்து பெறுவது சரியா என்று தெரியவில்லை sir.  இத்தகைய கேள்விகளைக் கொண்டு ஒரு படைப்பாளியை அணுகுவது சரியா sir? இத்தகைய கேள்விகளுக்கான விடைகளை அறிவதற்கு சரியான அணுகுமுறை எது sir?

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

***

அன்புள்ள விக்னேஷ்

புதுமைப்பித்தனின் பெண்கள் பற்றி ஏறத்தாழ என் கோணத்திலேயே இந்த வினா அமைந்திருக்கிறது.

இந்திய மொழிச்சூழலில் நவீன இலக்கியம் எழுதப்பட்டபோது முதலில் நிகழ்ந்த கருத்தியல் முயற்சி என்பது பெண்ணை மறுவரைவு செய்வது தான். பாரதியின் புதுமைப்பெண் எனும் உருவகம் உதாரணம். ஏறத்தாழ இந்தியாவின் எல்லா மொழிகளிலுமே நவீன இலக்கிய முன்னோடிகள் ஒரு ’புதிய பெண்’ணுக்கான முன் வரைவை உருவாக்க முயன்றார்கள்.

குமாரனாசான் மலையாளத்தில் சிந்தாவிஷ்டாயாய சீதா எனும் கவிதையில் மொத்த ராமாயணத்தையே, அதன் அடிப்படை ஒழுக்கவியலையே எதிர்த்து கேள்வி கேட்கும் சீற்றம் மிகுந்த சீதையை உருவகிக்கிறார். பொறுமையின் வடிவமாக உருவாக்கப்பட்ட புவிமகள் சீதை அவருடைய கவிதையில் பொறுமையற்ற புதிய பெண்ணாகக் காட்டப்படுகிறார்.

அந்த மரபு இன்றும் நவீன இலக்கியத்தில் தொடர்கிறது. இதுவரை நவீன எழுத்துக்களில் சீதையும் திரௌபதியும் மற்றும் புராண பெண் கதாபாத்திரங்கள் எங்ஙனம் மறுபுனைவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது இந்தப் புதியபெண் எனும் உருவகம் எப்படி தொடர்ந்து வலுவான ஒரு கருத்துநிலையாக எழுந்து வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அன்று இருவகையான புனைவுமரபுகள் இருந்தன. மரபிலிருக்கும் பெண்ணை புதிய சூழலுக்கேற்ப மறுபுனைவாக்குவது ஒரு வகை. குமாரனாசான் சீதையை செய்தது போல. அதை புதுமைப்பித்தனும் செய்திருக்கிறார். சாபவிமோசனம் கதையில் வரும் அகலிகை புதியபெண் ”அவன் சொன்னானா?” என்று கேட்கையில் அவளில் எழும் அந்த சீற்றத்தை வியாசன் உருவகித்திருக்க முடியாது. அப்போக்கின் தொடர்ச்சியாகத்தான் எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி வருகிறது.

இன்னொன்று பழைய உலகிலிருந்து தன் அறிவால் நுண்ணுணர்வால் மீறி எழுந்து வரும் புதியபெண். முன்னுதாரணம் அற்றவள், அல்லது ஐரோப்பிய முன்னுதாரணம் கொண்டவள்.  பாலியல் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் மீறுபவள். அல்லது தன்னுடைய அகம் கூறும் ஆன்மிகத்தை தேடுபவள் என அவர்களை இருவகைப்படுத்தலாம்.

தி.ஜானகிராமனின் பெண்கள் எவருக்கும் ஆன்மிகமான எந்த உசாவலும் இல்லை. தங்கள் ஆளுமையைப் பற்றிய தெளிவு கூட இல்லை. அறிவார்ந்த எந்த பயணமும் அவர்களுக்கில்லை. அவர்கள் அழகிகள், காதலிக்கப்படுபவர்கள், காதலிப்பவர்கள் மட்டுமே. அவர்கள் நாடுவது பாலியல் விடுதலையை. யமுனாவோ பாலியோ நாடுவது அவர்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள பழைய பாலியல் நெறிகளிலிருந்து எழுந்து பிறிதொன்றை சென்றடைவ்து மட்டுமே.

ஆனால் ஜெயகாந்தனின் கதாநாயகியர் அறிவார்ந்த ஒரு விடுதலையை நாடுகிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்களில் கங்கா, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணி போன்றவர்கள் எளிய பாலியல் விடுதலையை அல்லது குடும்பத்திலிருந்து வெளியே செல்வதை மட்டும் எண்ணுபவர்கள் அல்ல. அவர்கள் தங்களுக்கான ஆளுமையைத் தேடுகிறார்கள். தங்களுக்கான அடையாளம், தங்களுக்கான அறிவார்ந்த தனித்தன்மை ஆகியவற்றை அடைய முயல்கிறார்கள். அடைகிறார்கள் அல்லது அதில் தோற்று, ஆனால் தோல்வியை ஏற்காமல் நிமிர்ந்து நிற்கிறார்கள்.

இவ்வண்ணம் நம் தமிழ் இலக்கியத்தில் எப்படியெல்லாம் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்க்கையில் பல வண்ண அடுக்குகள் நமக்கு வருகின்றன. ஓர் எல்லையில் பாரதியின் புதுமைப்பெண் போல அதீத கற்பனை வீச்சுடன் புனையப்பட்ட பெண். ராஜம் கிருஷ்ணனின் கதைகளில் அத்தகைய பெண்ணை பார்க்கலாம். பல முற்போக்கு நாவல்களில் அத்தகைய எரிந்தெழும் பெண்ணை நவயுகப் பெண்ணைப் பார்க்கலாம். அவள் ஆளுமை அல்ல, கதாபாத்திரம் கூட அல்ல. ஒரு மாதிரி வடிவம் மட்டுமே. அந்தப்போக்கின் உச்சம் என்பது வ.ரா எழுதிய கோதைத் தீவு எனும் நாவல்.

மறு எல்லையில் அனைத்து சமூக நெறிகளையும் கட்டிக்காத்து குடும்பம் மதம் சமூகம் என அனைத்திற்கும் தானே பொறுப்பேற்று கரை கடக்காது வாழும் மரபான லட்சியப்பெண்ணின் உருவகம். தமிழின் பிரபல ஊடகப்புனைகதைகள் அனைத்திலும் இந்த ஊடகமே முன்வைக்கப்பட்டது. லக்ஷ்மி எழுதிய நாவல்கள், கல்கியின் நாவல்கள் இந்த எல்லையைச் சார்ந்தவை. இவ்விரண்டுக்கும் இடையே பல நுண்ணிய வண்ண வேறுபாடுகள்

திராவிட இயக்க நாவல்களில் பெண்கள் சித்தரிக்க்கப்பட்டிருக்கும் விதம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.ஆண்கள் எதிர்ப்பவர்களாக, மீறுபவர்களாக, அடங்காதவர்களாக அமைகையில் அந்த ஆண்களுக்கு அடங்கி அவர்களுக்கு கை கொடுத்து நின்றிருக்கும் கற்புள்ள மரபான பெண்ணாகவே சி.என்.அண்ணாத்துரை, எஸ்.எஸ்.தென்னரசு, மு.கருணாநிதி ஆகியோர் படைப்புகளில் பெண்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

திராவிட இயக்க எழுத்தாளர்களில் முதன்மையானவர் என்று நான் நினைக்கும் விந்தனின் படைப்புகளில் கூட பெண்கள் அப்படிப்பட்டவர்கள் தான். இன்னும் சொல்லப்போனால் திராவிட இயக்க எழுத்தாளர்கள் கண்ணகி- மாதவி என இருமையைக்கட்டமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். நாகரீகப்பெண்ணை மாதவியாகவும் தமிழர் பண்பாட்டை பேணும் மரபார்ந்த பெண்ணை கண்ணகியாகவும் முன் நிறுத்தினார்கள். திராவிட இயக்கம் தன் முழு இலக்கிய இயக்கத்திலும் முன் வைத்த பெண் கண்ணகியின் இன்னொரு வடிவம் தான். கண்ணகி சீதையின் இன்னொரு வடிவம்.

இந்த அடுக்கில் புதுமைப்பித்தன் எங்கிருக்கிறார்? புதுமைப்பித்தன் புரிந்துகொண்ட இந்த வினாவை நாம் வகுக்க முடியும். புதுமைப்பித்தன் முழுக்கவே கற்பனாவாதத்திற்கு எதிரானவர். யதார்த்தத்தை முன்வைப்பவர். தமிழிலக்கியத்தில் அவருடைய பங்களிப்பென்பதே யதார்த்தம் தான். இங்கே யதார்த்தவாத அழகியலை நான் சொல்லவில்லை. வாழ்க்கைப்பாதையிலுள்ள நடைமுறை யதார்த்தத்தை நான் சொல்கிறேன். ஆகவே கனவுகள், லட்சியங்கள், அறவிழுமியங்கள், ஆன்மிகப் பெருநிலைகள் அனைத்தையுமே ஐயப்படக்கூடிய, எள்ளி நகையாடக்கூடிய ஆசிரியனாகத்தான் புதுமைப்பித்தன் நிலைகொள்கிறார்.

லட்சியவாதம் உச்சத்தில் ஓங்கி நின்ற ஒரு காலத்தில் எழுதிய எழுத்தாளன் இவ்வண்ணம் அமைந்ததென்பது ஒரு ஆர்வமூட்டும் விஷயம்தான். அவருடைய காசநோய் அதற்குக்காரணம் என்று ஒருவர் சொன்னால் அதை முழுமையாக மறுத்துவிடமுடியாது. கசப்பும் ஐயமும் கொண்டவராகவே புதுமைப்பித்தன் கதைகளில் வெளிப்படுகிறார்.

சுதந்திரப்போராட்டத்தை அவர் எப்படிப் பார்க்கிறார்?. கேலியும் கிண்டலுமாகத்தான் அதை எழுதியிருக்கிறார். அது ஒருவகையான மிகைலட்சியவாதம் அல்லது ஒரு பாவனை என்று மட்டுமே அவரால் சித்தரிக்க முடிகிறது.

சமூக சீர்திருத்தம் அவர் பார்வையில் நாசகாரகும்பலின் காலடியில் விழுந்து நொறுங்கும் எளிய கிளர்ச்சியாகவே தென்படுகிறது, அல்லது கோபால அய்யங்காரின் மனைவி போல கேலிக்கூத்தாக முடிகிறது. பிரம்ம சமாஜத்தில் கோபால அய்யங்காருக்கு ஒரு லட்சிய திருமணத்தை பாரதி நடத்தி வைக்க அதை அபத்தத்தின் உச்சத்திற்கு புதுமைப்பித்தன் திருப்பிக்கொண்டு போவதை சுந்தர ராமசாமி சுட்டிக்காட்டியிருக்கிறார். இரு எல்லைகள் அவை.

ஆகவே அன்றைய ஒட்டு மொத்த சமூகமும் முன்வைத்த கற்பனாவாதப் பெண் புதுமைப்பித்தனுக்கு எவ்வகையிலும் ஏற்புடையவளாக இருக்கமாட்டாள். கு.ப.ராஜகோபாலன் புனைந்து முன்வைத்த மெல்லுணர்வுகள் கொண்ட ,உயர் பண்புகள் கொண்ட, ஆணின் காமத்தால் எழுதப்பட்ட அழகிய பெண்ணை கு.ப.ராவின் பகற்கனவென்றே எண்ணியிருப்பார். வசீகர மர்மம் கொண்ட மௌனியின் பெண்ணோ, அம்பாள் கருவறையில் கொலு வீற்றிருப்பது போல் இல்லத்தில் வீற்றிருக்கும் லா.ச.ராவின் பெண்ணோ புதுமைப்பித்தனுக்கு கேலிச்சித்திரங்களாகத்தான் தோன்றியிருக்கும்.

எவ்வகையிலும் பெண்ணை புனைந்துரைக்க முயலாத ஒரு எழுத்தாளராக அவரை நாம் பார்க்கலாம்.அவரிடம் நாம் காண்பது அவர் கண்டறிந்த பெண்களை .யதார்த்தமான பெண்களை. சர்வசாதாரணமாக நெல்லை ஆச்சிகள்தான் கதையில் வந்து செல்கிறார்கள்.

அவர்கள் அன்று பழமையை பற்றிக்கொண்டிருந்தார்கள். நெறிகளுக்குள் நிற்பதே உயர்வென நினைத்திருந்தார்கள். எவ்வகையான மீறல்களுக்கும் அவர்கள் சித்தமாக இருக்கவில்லை. பாலியல் மீறலை விரும்பினாலும் சமூக மீறலை விரும்பவில்லை (கல்யாணி) அறிவார்ந்த தேடலோ ,ஆன்மிகமான உசாவல்களோ அவர்களிடம் இருக்கவில்லை. குடும்பத்துக்குள் நின்று குடும்பத்துக்கு அப்பால் இருக்கும் எதையும் அறிந்துகொள்ளாமல் வாழ்ந்து முடிந்தனர்.

புதுமைப்பித்தன் அவர்களை உன்னதப்படுத்தவில்லை. ஏனெனில் அவர் எதையுமே உன்னதப்படுத்தவில்லை. அவர்களை சித்தரிக்கிறார். அது அவர்களை முன்வைக்கவில்லை. அவர்கள் அவர் கதையில் வருகிறார்கள். ஏனெனில் அன்று அவர்கள் அவ்வண்ணம் இருக்கிறார்கள்.

அவர் காட்டுவது அவருடைய உருவகத்தை அல்ல, அன்றிருந்த மெய்மையை. ஆனால் அவர் பெண்ணை உருவகப்படுத்தி கதை சொல்லும்போது அந்தப்பெண் புதுமைப்பெண்ணாகவே இருக்கிறாள். சாபவிமோசனத்தின் அகலிகை போல. அதாவது சீற்றம் கொண்டவளாக, அடிப்படை வினாக்களை உசாவுபவளாக, தனக்கான அறத்தை முன் வைப்பவளாக இருக்கிறாள்.

அதே போல அவருடைய புனைகதைகளில் யதார்த்தத்துக்குள் ஆழுள்ளம் எழுதப்படும்போது பெண்ணின் அடங்காத விடுதலை வேட்கையும் சீற்றமும் வெளிப்படுகிறது. செல்லம்மாள் ஒரு உதாரணம். செல்லம்மாள் விழிப்பு நிலையில் தன் கணவனைப் புரிந்துகொண்டவளாக, இல்லத்திற்குள் அடங்கியவளாக, ஒரு எளிய ஆச்சியாக மட்டுமே இருக்கிறாள். ஆனால் சாவின் நுனியில் தன்னிலை மயங்கும்போது அவள் உளறும் சொற்களின் வழியாக வெளிப்படும் செல்லம்மாள் பிறிதொருத்தியாக இருக்கிறாள். அடங்கி வைக்கப்பட்ட ஒன்று அங்கே எரிந்தெழுந்து திமிறுவதைப் பார்க்க முடிகிறது.

உளமயக்குகளை எழுதாமல் உள்ளதை எழுதியதனால் புதுமைப்பித்தன் கலைஞன். உள்ளவற்றுக்கு அடியில் இருக்கும் அறிய முடியாமைகள் அவனை மீறி கலையில் நிகழ்ந்தமையால் அவன் மாபெரும் கலைஞன்.

ஜெ

கண்ணகியும் மாதவியும்

முந்தைய கட்டுரைஉரை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகம்பன் கனவு