வள்ளுவரும் தாமஸும்

தாமஸ் வந்தார்

க.நா.சுப்ரமணியம்

அன்புள்ள ஜெ,

வணக்கம். சென்னை புத்தக கண்காட்சியில் க.நா.சு வின் “தாமஸ் வந்தார்” நாவலை வாங்கி வாசித்தேன்.

2000 வருஷ காலப் பிரக்ஞை க.நா.சு விற்கு இருந்ததாகத் தெரியவில்லை. நாவலில் “ஹிந்து மதம்” என்றே சொல்லப்படுகிறது. மலையாள தேசம் என்றும் அழைக்கிறார். வள்ளுவரும் தாமஸும் சந்திக்கும் இடங்களில் அறிவார்ந்த விவாதம் நடைபெறவேயில்லை. சாமானியர்களை மட்டுமே மதமாற்ற முடியும் என்பது போல வள்ளுவரை தாமஸ் மத விவாதத்திற்குக் கூட அழைக்கவில்லை. வெறும் மேடை பிரசங்கம் மட்டுமே செய்கிறார்.

தர்க்கமே நடக்கவில்லை. நம்பிக்கையும் அதிசயமும் மட்டுமே மதமாற்ற உதவுகின்றன.கதாநாயகனான வாதூலன் மதம் மாறுவதற்கான காரணங்களும் திருப்தியாக இல்லை. வாதூலனின் விதியைப் பற்றி மட்டும் வள்ளுவரும் தாமஸும் ஒரே மாதிரியாகச் சொல்கின்றனர். வள்ளுவர் வாதூலனை ஏன் கைவிட்டார் எனவும் தெரியவில்லை.

ஏசுவைப் போலவே பிறரால் துன்புறத்தப்பட்டு உயிர் விட்டால் தான் அது மகாத்தியாகம் எனத் தாமஸ் நினைப்பது சுவனம் செல்வதற்கான வழி என நினைக்கிறேன். இந்த நாவலைப் படித்தும் எனக்குச் சரியான புரிதல் இல்லை. இந்நாவல் பற்றி உங்கள் கருத்தை அறிய விழைகிறேன்.

அன்புடன்,
கிருஷ்ணமூர்த்தி.

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி

க.நா.சுவுடைய பிற்கால நாவல்கள் பல உளத்தோய்வின்றி அவருடைய விருப்பத்திற்கேற்ப எழுதப்பட்டவை. சுந்தர ராமசாமி க.நா.சு பற்றிய தனது நினைவுரையில் பிறரது கலையில் துல்லியத்தை, முழுமையை, வரிதோறும் செறிவை எதிர்பார்த்த க.நா.சு தன்னுடைய படைப்புகளில் அவற்றை கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிறார். க.நா.சுவுக்கு இலக்கியம் என்பது பெரும்பாலும் எதையாவது எழுதிப்பார்ப்பது என்ற விதத்திலேயே இருந்தது. அவரே தன் எழுத்துக்களைப்பற்றி சொல்லும்போது விதவிதமான துறைகளில் எழுதவேண்டும். வெவ்வேறு வடிவங்களில் எழுதிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை தனக்கு எப்போதும் உண்டு என்கிறார்.

அடிப்படையில் இந்த உளநிலையே இலக்கியத்திற்கு எதிரானது. இலக்கியம் எழுதிப்பார்ப்பதற்கான ஒரு ஊடகம் அல்ல. ஒருவனுடைய ஆழ்ந்த அகத்தேடல். அவனுடைய கொந்தளிப்பு, மாளாத்தனிமை ஆகியவற்றின் வெளிப்பாடாகத்தான் இலக்கியம் என்றுமே இருந்து வருகிறது. ’எழுதிப்பார்ப்பவர்’ பெரும்பாலும் தனக்கு அந்நியமான ஒன்றை நோக்கித் தன்னை தள்ள முயல்கிறார். தானல்லாத பிறிதொன்றை வெளிப்படுத்துகிறார். ஆகவே தான் உத்திச் சோதனைக்காக எழுதப்படும் எந்தப்படைப்பும் மேலோட்டமானதே. அந்த உத்தி எத்தனை மகத்தானதாக இருந்தாலும். எப்படி சிறப்பாக வந்திருந்தாலும்.

ஒரு கொள்கையை. நம்பிக்கையை. தரப்பை முன் வைக்கும் பொருட்டு எழுதப்படும் எந்தப்படைப்பும் ஆழமற்றதே. ஏனெனில் அது அந்த எழுத்தாளனிலிருந்து எழவில்லை. அந்த எழுத்தாளன் சென்றடைய விரும்பும் இடமாகவே அதன் மையம் இருக்கிறது. அவன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாவனையாகவே எஞ்சுகிறது. பிரச்சாரம் என்று அத்தகைய எழுத்துக்களை குறிக்கிறோம். க.நா.சு பிரச்சார எழுத்துக்களை மிக வலுவாக நிராகரித்தவர். மிகுந்த தீவிரத்துடன் கலைக்காக நின்று போராடியவர். ஆனால் அவருடைய சில நாவல்கள் எளிமையான கருத்து வெளிப்பாடுகள் அல்லது பிரச்சாரங்களாகத் தோன்றும். தாமஸ் வந்தார் அல்லது வள்ளுவரும் தாமஸும் அத்தகைய ஒரு நூல். (வள்ளுவரும் தாமஸும் என்ற பெயரில் முதலில் வெளிவந்தது)

தாமஸ் இந்தியாவுக்கு வந்தது ஒரு வரலாற்றுப் பொய். தொன்மத்துக்கும் பொய்க்கும் வேறுபாடுண்டு. தொன்மம் இயல்பாக உருவாகி நிலைகொள்வது. பொய் குறிப்பிட்ட அரசியல் நோக்கத்துடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு பரப்பப்படுவது. பொயு 4 ஆம் நூற்றாண்டிலோ 5-ஆம் நூற்றாண்டிலோ சிரியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கானாயி தாமஸ் (கேரளத்தில் க்னாயி தொம்மன்) என்ற மதப்பரப்புநர் பற்றி தெளிவான ஆதாரங்கள் உள்ளன. அவர் உருவாக்கிய சுரியானி தேவாலயமே புனித தாமஸ் மலையிலிருப்பது. அங்கு முழுமையாக ஆவணப்படுத்தப்பட்ட சிரியக் மொழி (சுரியானி மொழி) கல்வெட்டுகளும் உள்ளன. அவற்றின் காலம் ஐந்தாம் நூற்றாண்டா பிறகா என்றுதான் இன்றுவரை வரலாற்று ஆசிரியர்களுடைய விவாதம் உள்ளது.

இந்த அனைத்துச் செய்திகளையும் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட காலத்தில் மறைக்கத்தொடங்கினர். புனித தாமஸ் என்று இங்கே சொல்லப்படுபவர் ஏசுவின் சீடரான தாமஸ்தான் என்று மாற்றிக்கொண்டனர். அதற்கு ஆதாரங்கள் இல்லையென்பதனால் இருக்கும் ஆதாரங்களை வெளித்தெரியாமல் மறைத்தனர். இன்று  நீங்கள் சென்றால் சிரியக் மொழிக் கல்வெட்டுகளை பார்க்க முடியாது. அவை ஏதோ ரகசிய அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன. (நான் 1981ல் அவற்றை பார்த்திருக்கிறேன். இன்றுள்ள கான்கிரீட் கட்டுமானங்கள் எல்லாம் பிறகு வந்தவை)

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை வரைக்கும் வந்து, அங்கு கொல்லப்பட்டு, சிரியாவில் எடேஸா என்னும் ஊரில் அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவருடைய எலும்புகள் ரோமுக்கு கொண்டுசெல்லப்பட்டன. பொயு 2 ஆம் நூற்றாண்டில் Basilica di San Tommaso in Ortona, Italyயில் அவை வைக்கப்பட்டன. இது வரலாறு. ஆக்டாதோமா என்ற நூல் வழியாக அது வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மைலாப்பூரிலும் பறங்கிமலையிலும் உள்ள தாமஸ் ஆலயம் 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. அதற்கு முன் அங்கே சில சிரியன் மரபைச் சேர்ந்த கல்சிலுவைகள் மட்டுமே இருந்தன. அவற்றில் சிரியன் எழுத்துக்கள் இருந்தன. தாமஸ் மலை பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு வழிபடப்பட்டமைக்கு எந்தச் சான்றும் எந்த ஆவணத்திலும் இல்லை.

(ஆனால் நீங்கள் இன்று புனித தாமஸ் அடக்கத்தலம் என கூகிளில் தேடினால் எந்த ஆதாரமும் இல்லாத இந்த சுற்றுலா இணையப்பக்கம் முதலில் வரும். தாமஸ் அடக்கம் செய்யப்பட்டது சென்னையில் என அது ஆணித்தரமாகச் சொல்கிறது. தாமஸ் சென்னையில் கொல்லப்பட்டார், அடக்கம் செய்யப்பட்டார் என்றெல்லாம் விக்கியில் ஏற்றியிருக்கிறார்கள்.)

தாமஸ் இந்தியாவுக்கு வந்தாரென்பதை இன்னும் கூட வாட்டிகன் ஏற்றுக்கொண்டதில்லை. தென்னிந்தியா வந்தார் என்பதை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. இங்கே தமிழ்நாட்டில்தான் அதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன். பொதுவாக இந்திய அரசியல்வாதிகள் மற்றும் உயர்பதவியில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களைப் போற்றுமுகமாகவும் இந்தியாவைக் கிறிஸ்தவர்களின் நாடு என்று சொல்லும் முகமாகவும் புனித தாமஸ் இந்தியாவுக்கு வந்தார், கிறிஸ்தவம் இந்தியாவில் கிபி ஒன்றாம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என்று சொல்லும் வழக்கம் உண்டு. அதை வரலாற்று ஆதாரமாக எடுத்துக்கொண்டு மேலே செல்கிறார்கள்.

தாமஸ் இந்தியாவுக்கு வந்ததற்கு இந்தியாவில் இங்குள்ள அறிஞர்களிடம் உரையாடலில் ஈடுபட்டதற்கும் ஒரு சிறு தடயம் கூட இங்குள்ள எந்த நூலிலும் கிடையாது. ஆனால் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூலே என்று கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் திட்டமிட்டு திரும்பத் திரும்ப முப்பதாண்டுகளுக்கு மேலாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பேராயர் அருள் காலகட்டத்தில் கணேச ஐயர் என்பவர் அதற்காக ஒரு போலி சுவடி செய்து ஊடகங்கள் முன்வைத்தார். உலகம் முழுக்க கொண்டுசென்றார். அந்த மோசடி சர்வதேச ஆய்வாளர்களால் அம்பலப்படுத்தப்பட்டு பேராயர் அருள் மன்னிப்பு கோரினார். கணேச ஐயர் இருக்குமிடம் தெரியாமல் மறைந்தார்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்னர் திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட உண்மை என்பதாக பேச ஆரம்பித்தனர். இன்றும் பேசி வருகிறார்கள். இதற்கு அவர்களுக்கு உள்நோக்கம் உள்ளது. இதற்காக பெரும்செலவில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. அறிஞர்கள் இங்கிருந்து வரவழைக்கப்பட்டு சர்வதேச கருத்தரங்குகளில் கட்டுரைகள் வாசிக்கும்படி ஊக்குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை ஏற்று சைவ அறிஞர்களே அவர்களின் மேடைகளில் பேசியிருக்கிறார்கள். இந்தப் பிரச்சாரம் ஆய்வுக்களத்தில் ஏற்றுக்கொள்ளப் படவில்லை எனினும் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. திருக்குறளில் உள்ள கருத்துக்கள் அனைத்துமே கிறிஸ்தவ மதக்கருத்துக்கள் தான் என்றும் திருக்குறளில் இறைவனைப் பற்றி சொல்லப்பட்டவை அனைத்தும் ஏசுவைப்பற்றி சொல்லப்பட்டவை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

திருக்குறளின் காலம் சிலப்பதிகாரத்தை ஒட்டியது. சிலப்பதிகாரத்தின் காலம் கயவாகு காலக்கணிப்பு முறைப்படி கிபி இரண்டாம் நூற்றாண்டு. திருக்குறள் மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம். அதன் பின் இங்கு கிறிஸ்தவம் கானாயி தொம்மன் வழியாக  வந்தது. ஆனால் இங்குள்ள எந்த சிந்தனை மரபுகளுடனும் அது உரையாடவில்லை. பெரும்பாலும் வணிக மையங்களை ஒட்டி, கடலோரங்களை ஒட்டி, சிறுமதப்பரப்பு குழுக்களாகவே கிறிஸ்தவம் இங்கு நீடித்தது. இன்று தொன்மையான கிறிஸ்தவ தடயங்கள் கிடைக்குமிடங்கள் அனைத்துமே பழைய கடலோர வணிகத்தலங்கள்தான் கொடுங்கல்லூரிலிருந்து குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோடு வரை. மகாபலிபுரம் அன்று தொன்மையான துறைமுகமாக இருந்திருக்கிறது. அதன் அருகே இருந்த செயிண்ட் தாமஸ் மௌண்ட் கிறிஸ்தவ செட்டில்மெண்டாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இங்குள்ள மத அமைப்புகளுடன் கிறிஸ்தவம்  எவ்வகையிலும் உரையாடியதற்கான எந்த சான்றும்  எந்த நூலிலும் இல்லை.

கிறிஸ்தவ தொன்மங்கள் மிகப்பிற்காலத்தில் சைவ சமயத்தில் ஊடுருவியிருக்கலாம், கிறிஸ்தவர்கள் புனிதர்களை உருவகிக்கும் முறை சைவ நாயன்மார்களின் தியாகங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம். இந்தியாவில் மதப்புனிதர்களை சித்திரவதை செய்வதும் துன்புறுத்துவதும் வழக்கமல்ல. அவ்வாறு ஒரு வரலாற்றுச் சான்று கூட தொன்மங்களில் இல்லை. அது பெரிய பழி சேர்ப்பதென்றே கருதப்பட்டது. இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற மன்னர்கள் அனைவருமே அனைத்து மதங்களையும் ஆதரிப்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தீவிர சைவனாகிய ராஜ ராஜ சோழனும், ராஜேந்திர சோழனும், குலோத்துங்க சோழனும் வெட்டி அளித்த சமணக் குகைப்பாழிகள் மற்றும் கட்டிய சமணப்பள்ளிகள் தெளிவான கல்வெட்டுகள் மூலம் தெரியவருகின்றன.  தீவிர வைணவர்களாகிய நாயக்கர்கள் கட்டிய சைவக்கோயில்கள், சமணக்கோயில்கள் இங்கே உள்ளன. தீவிரமான இந்துக்களாகிய நாயக்கர்கள், திருவிதாங்கூர் அரசர்கள் கிறிஸ்தவ மதப்பரப்புநர்களை ஆதரித்ததற்கும், நிலம் வழங்கியதற்கும், கோயில் கட்ட நிதியுதவி வழங்கியதற்கும் ஆவணச்சான்றுகள் ஏராளமாக இங்கு கிடைக்கின்றன.

ஆகவே மதப்பூசலில் ஞானிகள் வதைக்கப்படுவதென்பது இந்தியாவில் இல்லை. அது மத்திய கால ஆசியாவிலிருந்தும், மத்திய கால ஐரோப்பாவிலிருந்தும் உலகெங்கும் பரவிய வழக்கம். இங்கு மத நம்பிக்கை சார்ந்த பழி பாவம் சார்ந்த ஒரு அச்சம் எல்லா மதத்தின் ஞானிகள் மேலும் இருந்தது. ஆனால் சைவத்தொன்மங்களில் சைவமதக்குறவர்களை சமணர்கள் கழுவிலேற்றியதாகவும் கடலிலிட்டதாகவும் கதைகள் உள்ளன. இவை கிறிஸ்தவச் செல்வாக்கால் பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் உருவானவையாக இருக்கலாம். (இங்கே உண்மையாகவே நடந்த, விரிவான ஆதாரங்கள் கொண்ட கோவா மதஒடுக்குமுறை பற்றிய பேச்சே இருக்காது. உண்மையில் நடக்காத, எந்த ஆதாரமும் இல்லாத இந்துமத ஒடுக்குமுறை பற்றி ஒவ்வொருநாளும் பேசுகிறார்கள். உள்நோக்கம் மிகமிக வெளிப்படையானது. அதை மெய்யாகவே அறியாத அறிவுஜீவிகளே இல்லை)

கானாயி தொம்மன் தொன்மத்தை கிறிஸ்தவ முதல் அப்போஸ்தலராகிய தாமஸுடன் இணைக்கும்போது தாமஸ் கொல்லப்பட்டார் என்ற செய்தியை இங்கே கொண்டு வந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக  தாமஸ் மயிலாப்பூரில் கொல்லப்பட்டார் என்று மாற்றிக்கொண்டார்கள். சென்னை மயிலாப்பூர் பிராமணர்களின் இடமாக ஆனது இந்நூற்றாண்டில். இவர்கள் எண்பதுகளுக்குப்பிறகு கொன்றவனை குடுமியுடன் ஒரு அந்தணனாகச் சித்தரிக்க ஆரம்பித்தார்கள். இவை அனைத்துமே அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இன்று சிற்பங்கள், ஓவியங்கள், கட்டிடங்கள் வழியாக அதை இந்தியாவெங்கும் எடுத்துச் செல்கிறார்கள். தக்கலையில் நான் பணியாற்றிய அலுவலகத்தின் பக்கத்து அலுவலகம் பிஷப் குடியிருப்பு. அந்த பிஷப் என் நண்பரும்கூட. அதன் முகப்பில் ஒரு பிராமணன் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் புனித தாமஸை பின்னாலிருந்து ஈட்டியால் குத்துவது போன்று ஒரு வண்ணச்சித்திரம் பொறிக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க கற்பனையான ஒன்று, மத-சாதிய வஞ்சம் பரப்புவது. இங்குள்ள அரசியலோடு ஒத்துப்போவதனால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. குத்துபவன் சோழ மன்னனாகவோ, பாண்டியனாகவோ, மறவராகவோ சித்தரிக்கப்பட்டிருந்தால் எத்தனை எதிர்ப்பு வந்திருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும் ஆகவே தான் அந்தணனாக சித்தரிக்கிறார்கள்.

இவ்வளவு அரசியல் பின்னணியை யோசிக்க வைப்பது வள்ளுவரும் தாமஸும் என்ற தொன்மம். ஆனால் க.நா.சு மிக எளிதாக எடுத்துக்கொள்கிறார். அதைச் சார்ந்த வரலாறுகள் உள்விவாதங்கள் எதையுமே அவர் படிக்கவில்லை. குறைந்தது ஆக்டா தோமா போன்ற ஒரு நூலைக்கூட புரட்டிப்பார்த்ததில்லை. அவர் காலகட்டத்தில் விக்கிப்பீடியாவும் இல்லை.

கிறிஸ்தவத்திற்கும் திருவள்ளுவருக்கும் ஒரு உரையாடல் நடந்தது என்று கற்பனையாக ஒரு நூல் எழுதக்கூடாதா என்றால், எழுதலாம். இலக்கியத்திற்கு அதற்கான உரிமை உண்டு. ஆனால்  அது இரு மதங்களுக்குமிடையே அடிப்படையில் என்ன நிகழ்ந்தது என்பதைக்காட்டுவதாக இருக்க வேண்டும். தாமஸின் ஆன்மிகத்தையும் தத்துவத்தையும் வள்ளுவரின் தத்துவத்தையும் ஆன்மிகத்தையும் உரையாடவிடுவதாக இரண்டையும் தெளிவு படுத்துவதாக இருக்க வேண்டும்.

க.நா.சுவின் நூல் எந்த உளத்தோய்வும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறது. அதன் உரையாடல்கள் மிகச் சாதாரணமான அரட்டைகள் போலிருக்கின்றன. சொல்லப்போனால் இன்றைய முகநூல் விவாதங்களைவிட ஒருபடி கீழே இருக்கின்றன. அது ஏன் என்பது ரகசியமல்ல. நவீனத்துவர்களான க.நா.சு.வும் சரி, அவர் தலைமுறையின் எழுத்தாளர்களும் சரி, தத்துவத்தை ஒவ்வாமையுடன் பார்த்தனர். ’தூய’ அனுபவவாத இலக்கியம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அன்றைய எழுத்துகளில் தத்துவக்கிழவன் தத்துவப்பாடை என்று தத்துவத்தை ஏளனம் செய்யும் வரிகளைப்பார்க்கலாம். தத்துவம் சார்ந்த கல்வியோ, தத்துவப்படுத்தும் பயிற்சியோ இல்லாதபோது சிந்தனைகள் மிகச் சாதாரணமான எண்ணங்களாகவே வெளிவருகின்றன. அவற்றுக்கு ஆழமோ செறிவோ இருப்பதில்லை. ஏனென்றால் தத்துவம் என்பது ஒரு சிந்தனையை அதுவரைக்குமான சிந்தனை மரபுடன் இணைத்துக்கொள்கிறது. அதை சரியாக தர்க்கப்படுத்துகிறது. தெளிவாக மொழியில் வரையறை செய்து முன்வைக்கிறது. மூன்றும் நிகழாதபோது ‘போகிறபோக்கிலான’ எண்ணங்களே நிகழ்கின்றன. ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலில் ஜே.ஜேயின் டைரியாக சுந்தர ராமசாமி எழுதிய பகுதிகளே இப்படித்தான் உள்ளன.

நவீனத்துவ நாவல் எதார்த்தத்தை ஒரு நெறியாக தனக்குள்ளே கொண்டிருக்கிறது. ஆகவே ஓர் அன்றாடக் கதாபாத்திரம் அன்றாட வாழ்வில் என்ன சொல்ல முடியுமோ அதை அக்கதாபாத்திரம் கூறினால் போதும் என எண்ணுகிறது. ஆகவே தத்துவ்ம் ஒரு நவீனத்துவ நாவலுக்கு இன்றியமையாதது அல்ல. ஆனால் தத்துவம் இருந்தால் அது பல படிகள் மேலெழும் என்பதற்கு உதாரணமாக பல முக்கியமாக நவீனத்துவ நாவல்கள் உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் நிகாஸ் கசந்த் சகிஸீன் கிறிஸ்துவின் இறுதி சபலம். ஆனால் இங்கு ஒரு நவீனத்துவ நாவல்கள் எழுதியவர்கள் எல்லாருமே அன்றாடத்தின் எல்லைக்கு வெளியே செல்லாதவர்கள்.

செவ்வியல் நாவல்கள் எதார்த்தம் என்னும் இரும்புச் சட்டையைப் போட்டுக்கொண்டவை அல்ல. அவை தீவிரமான தத்துவ விவாதமாக நேரடியாக மாறவும், உச்சகட்ட கவித்துவம் நோக்கி கற்பனாவாத எழுச்சியுடன் நகரவும் சுதந்திரம் கொண்டவை. உணர்ச்சியலைகள்,  தொன்மங்கள், மிகைநவிற்சிகள், குழந்தைக்கதைகள், சாகசக்கதைகள் என அவை தங்களை தொடர்ந்து உருமாற்றிக்கொண்டு ஒரு பெரும் தொகுப்புத் தன்மையை அடைய முடியும். அத்தகைய நாவல்களை விரிந்த தத்துவப் பயிற்சி இல்லாத ஒருவரால் எழுத முடியாது. ஆகவேதான் தமிழ் நவீனத்துவ எழுத்தாளர்கள் எவருமே செவ்வியல் தன்மை கொண்ட நாவல்களை எழுதவில்லை.

அதற்கு எதிரான உளநிலையை இங்கு உருவாக்கி வைத்திருந்தார்கள். செவ்வியல் தன்மை கொண்ட நாவல்கள் இங்கு வந்தபோது, குறிப்பாக விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் போன்றவை வெளியானபோது, அதில் உள்ள தத்துவார்த்தமான உரையாடல்களை வாசித்துவிட்டு ”இப்படியெல்லாம் அன்றாட வாழ்வில் மனிதர்கள் பேசிக்கொள்வார்களா என்ன?” என்று கேட்கும் வாசகர்கள் பலர் அவ்வாறு உருவாகியவர்கள்தான். அவர்களிடம் திரும்ப திரும்ப செவ்வியல் நாவல் என்றால் என்ன என்ன என்று சொல்லவேண்டியிருந்தது. தஸ்தாவெஸ்கியிலிருந்து தாமஸ் மன்னிலிருந்து உம்பர்ட்டோ ஈக்கோ வரை செவ்வியல் நாவல்களில் எத்தனை தீவிரமான உரையாடல்கள் நிகழ்கின்றன என்பதை முப்பதாண்டுகளாக நான் திரும்ப திரும்ப விளக்கி சொல்ல வேண்டிய தேவை இப்போதும் உள்ளது. அல்லது கேலியாக ‘நேர்வாழ்க்கையில் அப்படி ஆழமாகப் பேசமாட்டார்கள் சார், ஆனால் அபப்டிப் பேசுபவர்களைக் கொண்டே நாவல்கள் எழுதப்படுகின்றன’ என்பேன்.

க.நா.சுவின் நாவல் தத்துவார்த்தமாக விரிந்திருந்தால், செவ்வியல் வடிவை அடைந்திருந்தால், அது ஒரு முதன்மையான படைப்பாக இருந்திருக்கும். எண்ணிப்பாருங்கள் அன்றைய கடல்மல்லையின் ஒரு சித்திரத்தை அளித்திருக்கலாம். அது களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்த காலம். சமணம் மையமதமாக இருந்த காலம். அராபியர் ஆப்ரிக்கர்கள் கடல்மல்லைக்கு வந்துகொண்டிருந்த சூழல். தாமஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய ஆசிய கலாச்சாரத்திற்கும் வள்ளுவர் பிரதிநித்துவப்படுத்தும் இந்திய தமிழக கலாச்சாரத்திற்குமான பெரும் உரையாடலாக அந்நாவலை மாற்றியிருக்கலாம்.

ஆனால் அதற்கு அவர்கள் இருவரும் வாழ்ந்த வரலாற்று சூழல் பண்பாட்டு சூழல் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்து உள்ளே கொண்டு வருவதற்கு அறிவார்ந்த உழைப்பு வேண்டும். வரலாற்றார்வமும் தத்துவப் பயிற்சியும் வேண்டும். செவ்வியல் நாவல்கள் ஒருபக்கம் வரலாற்றையும் மறுபக்கம் தத்துவத்தையும் கொண்டு செயல்படுபவை. தத்துவம், பண்பாடு, ஆன்மிகம் ஆகிய மூன்றையும் சொல்வதற்கு கலவையான ஒரு தொகுப்புவடிவம் அடையப்படவேண்டும்.அந்த கனவோ அதற்கான முயற்சியோ க.நா.சுவிடம் இல்லை. க.நா.சு ஓர் அன்றாட, எளிய, உரையாடலை உருவாக்குகிறார்.

ஆனால் அவர் இந்த நாவலையே ஒரு தீவிரமான செவ்வியல் நாவலாக படைத்திருந்தால் தமிழில் நவீனத்துவ நாவல்களைப்படித்து பழகிப்போன எளிய வாசகன் ’தாமஸும் வள்ளுவரும் இப்படியா பேசிக்கொண்டிருப்பார்கள்? தாமசுக்கு மைலாப்பூர் கொசுக்கடி பெரிய பிரச்சினையாக இருந்திருக்கும்’ என்று சொல்வான். அவனிடம் செவ்வியல் நாவலைப் பற்றி பேசி நிறுவ வேண்டியிருக்கும். அதற்கு க.நா.சு அவர் வாழ்நாளெல்லாம் பேசிய நவீனத்துவ அழகியலை கைவிட்டு கடக்கவேண்டியிருந்திருக்கும். மாறாக அந்த கொசுக்கடி வாசகனை உத்தேசித்து எழுதிவிட்டார்.

ஜெ

திருக்குறள் ஜமீன்தாரிணி உரை 

முந்தைய கட்டுரைஜெகதீஷ்குமார் மொழியாக்கங்கள்
அடுத்த கட்டுரைதிருப்பூர் உரை அறிவிப்பு