பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியனின் குரல்
அன்புள்ள ஜெ,
பின்தொடரும் நிழலின் குரல் – வாசகர் கடிதங்கள் கண்டேன் இங்கே, குமரப்பாவின் வாதத்தை மீண்டும் முன்வைக்கிறேன். `முதலாளித்துவத் தொழில் முறைக்கும், சோஷலிசத் தொழில்முறைக்கும் பெரிதான வேறுபாடுகள் இல்லை. இரண்டுமே, உற்பத்தியை இயந்திர மயமாக்கி, மூலதனத்தைக் குவிக்கும் முறைகளே. இதில் சோசலிச முறை உடைந்தால், அது உடனே, முதலாளித்துவமாகத் தான் உருமாறும் என்றார் குமரப்பா`. 1992 ல் சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்தது இதுதான். கம்யூனிசம் என்னும் பெயரில் நிகழ்ந்த வன்முறையும், ஹிப்போக்ரைசியும் விமரிசிக்கத் தக்கதுதான். அதை, ஒரு இலக்கிய ஆக்கமாக ஆக்கி முன்வைக்கிறது உங்கள் நாவல்.
அதே போல, பல உரையாடல்களில், உலகில் கம்யூனிச ஏதேச்சதிகாரங்கள் நிகழ்த்திய வ்ன்முறையைப் பட்டியிலிடுகிறீர்கள். ideal and ideology பற்றிய உரையிலும், சோவியத், கம்போடியா, வட கொரியா போன்ற உதாரணங்களை முன் வைத்தீர்கள்.
கம்யூனிசம், முதலாளித்துவம் என்னும் இருமை தாண்டி, காந்தியப் பொருளியல் நோக்கி என்னும் உருப்பெருக்கியில் பார்க்கையில், இந்த தோல்விகளுக்கும், விளைவுகளுக்கும் இன்னும் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். முதலாளித்துவ வழியில் சென்ற ஜெர்மனி ஏற்படுத்திய அழிவை (வலது சாரி, தேசிய வாதம்) நாம் பேசுவதில்லை. அது ஏற்படுத்திய பேரழிவு சோவியத் யூனியன் கம்யூனிசம் என்னும் பெயரில் ஏற்படுத்திய அழிவிற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.
அதேபோல, 2008 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நிகழ்ந்த நிதித் துறை மோசடி, சோவியத்தில் உருவான பொருளாதார அழிவை விட மிக அதிகம். ஐஸ்லாந்த், க்ரீஸ் நாடுகளின் பொருளாதாரங்கள் சரிந்தன. லட்சக்கணக்கான மக்களின் ஓய்வூதிய நிதிகள் திவாலாகின. நிலைமையச் சீராக்க 800 பில்லியன் டாலர் பணம் கொட்டப்பட்டது. அதில் கூட, திவாலான பல நிறுவனங்களின் இயக்குநர்கள் டெர்மினேஷன் போனஸ் எனப் பணத்தை எடுத்துக் கொண்டார்கள் என்னும் குற்றச்ச்சாட்டு எழுந்தது. உலகப் பொருளாதார நஷ்டம் கிட்டத்தட்ட 2 ட்ரில்லியன் டாலர்கள். அன்றைய இந்தியாவின் பொருளாதாரம் 1.2 ட்ரில்லியன் டாலர். இது தவிர உலக அமைதிக்காக அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படுத்தும் போர்கள் தனி.
இந்த வாதம் சோவியத் ரஷ்யாவின் தோல்விக்கு சப்பைக் கட்டு கட்டுவதல்ல. மையப்படுத்தப்படும், தொழில் மய உற்பத்திப் பொருளாதார மாதிரிகள், கம்யூனிச மாதிரிகளில், அதீத அதிகாரக் குவிப்பினாலும், முதலாளித்துவ மாதிரிகளில் பேராசையினாலும் தோல்வியுறுகின்றன. சோவியத் தன் தோல்வியைச் சமாளிக்கத் தெரியாமல் உடைந்து சிதறியது. அமெரிக்கா, தன் தோல்விக்கான செலவை தன் மக்கள் மற்றும் உலக நாடுகள் மீது சுமத்திவிட்டு சாமர்த்தியமாக விலகி விட்டது.
பின் தொடரும் நிழலைப் படிக்கும் வாசகர்களுக்கு இந்த உண்மைகள் தெரிந்திருக்கும். இருந்தாலும், ஒட்டு மொத்த நோக்கில், மேற்கு நாடுகள் முன்னிறுத்தும் பொருளாதார மாதிரிகளின் எல்லைகளைச் சுட்ட இதை எழுதினேன்.
அன்புடன்
பாலசுப்ரமணியம் முத்துசாமி
***
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307