‘வெண்முரசு’ உலகின் மிகப் பெரிய நாவல்.மொத்தம் 26 பகுதிகளையும் 1932 அத்யாயங்களையும் 22,400 பக்கங்களையும் உடையது. இது மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஜெயமோகன் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர். இவரைப் பற்றிய அவதூறான விமர்சனங்கள் தமிழில் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால், இவரின் படைப்புகளைப் பற்றிய கறாரான மதிப்பீடுகள் மலையாளத்தில்தான் எழுதப்பட்டுள்ளன.
ஜெயமோகன் எழுதிய ‘வெண்முரசு’ நாவல் பற்றி விரிவாகக் கட்டுரைகளை எழுதியவர் ‘எழுத்துலகத்தேனீ’ டாக்டர் ப. சரவணன். இவர் 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் வெண்முரசு பற்றித் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து புனைவுலகில் ஜெயமோகன் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு ‘வெண்முரசு’ ஓவியர் ஷண்முகவேல் ஓவியங்களை வரைந்துள்ளார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், ந. பிரியா சபாபதி, கமலதேவி, விமர்சகர்கள் சுபஸ்ரீ, இரம்யா ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
இந்த நூல் டாக்டர். ப. சரவணன் ‘வெண்முரசு’ நாவலுக்கு உருவாக்கிய வரைபடம். ஒட்டுமொத்தமாக ‘வெண்முரசு’ நாவலைத் தொகுத்துக் கொள்ள, அதன் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன உள்ளது என்று விரித்துக்கொள்ள உதவும் நூல் இது. ‘கூகிள் எர்த்’ வரைபடம்போல. அதைப் பார்க்கும்போது சலிக்காமல் நாம் செய்வது சுருக்கி சுருக்கி ஓர் உருளையாக ஆக்குவதும் பின்னர் விரித்து விரித்து நம் வீட்டை அடையாளம் காணமுயல்வதும்தான். – ஜெயமோகன், எழுத்தாளர்.