ஆதிமூலத்தின் கோட்டு ஓவியங்களைப்பற்றிய என் அறிமுகம் சுமுகமானதாக இருக்கவில்லை. நுண்கலைகளில் நான் ரொம்பவும் நுண்மையானவன் — இருப்பதே தெரியாது. சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் தொகுப்பின் [முதல் பதிப்பு, க்ரியா] வடிவமைப்பு பற்றி என் கருத்தை சொன்னேன். ”அட்டையிலே எழுத்துக்களை அச்சடிச்சதில தப்பு வந்திட்டுது சார். லெட்டர்ஸ் கோணலா இருக்கு. பிளேட் சரியா போடல்லை”.
சுந்தர ராமசாமி ஞானிகளுக்கே உரிய புன்னகையுடன் ”அது ஆதிமூலம் போட்டது ”என்றார்.
நான் ”பாவம் அவருக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும், இதைப்பாத்தா” என்றேன்
அந்நூலின் பின்னட்டையில் சுந்தர ராமசாமியின் ஒரு கோட்டுச்சித்திரம் இருந்தது. அது சுந்தர ராமசாமி என்று கண்டுபிடித்ததும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.ஆனால் அதில் அவருக்குக் கண்கள் இல்லை. கண்ணாடிச் சட்டம் மட்டும்தான். ”எதுக்கு சார் இப்படி வரைஞ்சிருக்காங்க?” என்றேன்
”அது ஒரு எஃபக்டை குடுக்குதுல்ல? மாடர்ன் ஆர்ட்னா அதுதான்”
”கைமறதியாய் எங்கே வைத்தேன் என் கண்களை?”ங்கிற கவிதைக்கு வரைஞ்சிருப்பாரோ” என்றேன்.
சுந்தர ராமசாமி கோபம் கொண்டு ‘தெரியாத ஒண்ணை கிண்டலடிக்கிறது முட்டாள்தனம்”என்று சீறிவிட்டு நவீன ஓவியம் என்றால் என்ன என்று எனக்கு எளிய அறிமுகம் ஒன்றை அளித்தார்.
சுந்தர ராமசாமி வழியாக ஆதிமூலத்தைப்பற்றி நிறையவே அறிந்தேன். அவரது கோடுகளில் இருக்கும் நிச்சயமான சுழற்றல்கள், அவர் காட்சிகளைப்பார்க்கும் கோணங்கள், அவருக்கு சிற்றிதழ் சார்ந்த இலக்கியத்துடன் இருந்த நெடுநாள் உறவு…. அப்போது அவர் மீது ஒரு பிரியம் ஏற்பட்டது. மேலும் ஒருவருடம் கழித்து சுந்தர ராமசாமியின் வீட்டில் ஆதிமூலத்தை நேரில் சந்தித்தேன். ”பாக்க சா.கந்தசாமி மாதிரி இருக்கீங்க சார்” என்றேன். ”அப்டி பலபேர் சொல்றதுண்டு. அவர் உங்க தம்பியான்னுகூட கேப்பாங்க…தம்பி மாதிரின்னு சொல்லிருவேன்” என்று மெல்லிய குரலில் சொல்லி புன்னகைசெய்தார். அப்போதும் அவரது ஓவியங்களைப் பற்றிய ஒரு மனப்பதிவு என்னிடம் இருக்கவில்லை.
தற்செயலாக சுந்தரராமசாமியின் தொகுப்பில் இருந்த அவரது காந்தி கோட்டோவியங்களைப் பார்த்தேன். காந்திமீது என் மதிப்பு உருவாகிக் கொண்டிருந்த நேரம். காந்தியைப்பற்றி நானும் சுந்தர ராமசாமியும் ஆழமாக பேசிக் கொண்டிருந்த காலகட்டம். காந்தியின் உடலசைவுகளை அக்கோடுகளில் பார்க்க முடியுமென்ற பிரமை எனக்கு ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அந்தக் கோட்டுச் சித்திரங்களை அடங்காத தாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த புகைப்படமும், எந்த திரைப்படமும் அளிக்காத சித்திரங்கள். காந்தியின் அபாரமான தனிமை. அவர் தன்னுள் ஆழ்ந்து இருக்கும் நிலைகள். இப்போதுகூட என் படிப்பறைச்சுவரில் இரு படங்கள்தான் இருக்கின்றன. அசோகமித்திரனின் படம் ஒன்று, ஆதிமூலம் வரைந்த காந்தியின் கோட்டோவியம் ஒன்று.
நவீன ஒவிய உலகில் எனது அறிமுகமே ஆதிமூலம் வழியாகத்தான் என்று சொல்லலாம். அதிகதூரம் நான் செல்லவில்லை. எண்பதுகளில் ஏராளமான ரூபாய்க்கு ஓவிய நூல்களை வாங்கி சேர்த்தேன். ஓவியம் குறித்து படித்தேன். ஓவிய அரங்குகளுக்குச் சென்று வந்தேன். பின்னர் அந்த வேகம் அடங்கியது. ஓவியநூல்களை அன்று நாடோடிபோல வாழ்ந்த என்னால் பாதுகாக்க இயலவில்லை. சுந்தர ராமசாமிக்கு கொடுத்து பணம் வாங்கிக் கொண்டேன். இன்றும் தொடரும் ஓவிய ரசனையை இசை ரசனையைப்போல என் அந்தரங்க களிப்பாக மட்டுமே வைத்திருக்கிறேன். கருத்துக்கள் சொல்வதில்லை.
ஆதிமூலத்தை அதன்பின் இருமுறை பார்த்தேன். ஒருமுறை சேலத்தில் தமிழ்சங்க கூட்டம் ஒன்றில். அவரிடம் பொதுவாகப்பேசிக் கொண்டிருந்தேன். அன்று அவர் அரூப ஓவியங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார், எனக்கு அவை பெரிய ஈர்ப்பை உருவாக்கவில்லை. நான் அன்றுமின்றும் கோட்டோவியங்கள் மற்றும் பதிவிய [இம்பிரஷனிஸ்ட்] ஓவியங்களின் ரசிகன். ஆதிமூலம் அன்று என்னுடைய நல்ல வாசகராக தன்னைச் சொன்னார். என் கதைகளை மிக நுட்பமாகப் படித்திருந்தார்.
பேசும்போது ஆதிமூலம் பூனைகளைப்பற்றி நிறையச் சொன்னார். ”உங்களுக்கு பூனைகளை பிடிக்காதா, உங்கள் படைப்புகளில் பூனைகளின் சித்திரமே இல்லையே?”
நான் ”எனக்கு பன்றிக்குட்டிகளை ரொம்ப பிடிக்கும். அவற்றின் சுறுசுறுப்பும் துடிப்பும் அபூர்வமான அழகுகள். என் பிள்ளைகளைக்கூட பண்ணிக்குட்டி என்றுதான் கொஞ்சுவேன்” என்றேன் ”ஏன் ஓவியர்கள் பன்றிகளை வரைவதில்லை?”
”நான் காகங்களை விரும்பி வரைந்திருக்கிறேன்”என்றார் ஆதிமூலம். ”…பூனைகள் காகங்கள் எல்லாம் நெளிவுகள் உள்ள உடலசைவு கொண்டவை. அவற்றின் மனநிலைகள் உடல் நெளிவுகளில் வெளிப்படுகின்றன. பன்றி அப்படி அல்ல. மொத்தையான ஒரு வடிவம். அதில் வெளிபப்டும் உணர்வை நீங்கள் மனதால் உணர்ந்து மொழியாகச் சொல்லலாம். கண்ணால் பார்த்து ஓவியமாக்க முடியாது. ஓவியத்தின் எல்லை அங்கேதான்…”என்றார்.
வெட்கத்துடனும் சிந்தனையுடனும் பேசுவார் ஆதிமூலம். மென்மையாக சிரிக்கும்போது நமக்கு எப்படியோ எஸ்.வி.ரங்கராவ் நினைவுக்கு வருவார். சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் இருவர் மேலும் ஆழமான பிரியம் கொண்டவர். கடைசியாக நான் அவரை சென்னையில் ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது சொல் புதிது அட்டையில் ஜெயகாந்தன் படம் போட்டதைப்பற்றி சில சொற்கள் பேசினோம். சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் உறவு பற்றி பேச்சு வந்தது. ”அவங்களுக்கு அவங்க ரெண்டுபேரு. நமக்கு அவங்க ரெண்டுபேரும் ஒரே ஆளுதான்..”என்றார். என்ன சொன்னார் என்று சரியாகப் புரியவில்லை. ஆதிமூலம் தெளிவாகப் பேசக்கூடியவரல்ல
அவர்கள் இருவரையும் ஒரே ஆளுமையாக உள்வாங்கும் ஒரு தளம் அவரது அகத்தில் எங்கோ இருந்திருக்கிறது