அறிவியலுக்கு ஒரு தளம்

லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம்

2021ல் அரிஸோனா பல்கலைக்கழகத்தின்  இணைய தளத்தில் உலக மொழிகளில் அறிவியல் தகவல்களை மொழியாக்கம் செய்து வலையேற்றும் பணியில் தமிழ் மொழியாக்கத்தில் நானும் இணைந்தேன். அவர்களிடம் தமிழ் எழுத்துரு இல்லாததால் ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரையை நான் தமிழில் மொழிமாற்றி அனுப்பியதை சரிபார்க்க பலமாதங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் அவர்கள் இணையதளத்தில் தமிழில் கட்டுரைகள் வருவது இதுவே முதல்முறை. மாணவர்களுக்காக சிறு சிறு கட்டுரைகளை பொருத்தமான படங்களுடன்  ஒரு கதையைபோல அளிப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. அறிவியலை இப்படி கதைபோல சொல்லுகையில் மாணவர்களுக்கு அதை புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

இன்று எனது இரண்டாவது கட்டுரையும் வெளியானது.  ’’ஒளியை உண்ணுதல்’’ என்னும் தலைப்பில் ஒளிச்சேர்க்கை குறித்தும் இன்று மகரந்தங்கள் குறித்தும் 2 கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. தமிழில் அறிவியல் கட்டுரைகளை கொண்டு வரவேண்டும் என்பதற்காக என்னால் ஆன முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறேன். தொடர்ந்து அவர்களுடன் இணைந்து பணியாற்றவிருக்கிறேன். இந்த இணையதளத்தில் கட்டுரைகள் வெளியாகி இருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது. உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலும் பெருமகிழ்ச்சி.

அன்புடன்

லோகமாதேவி

தமக்கான உணவை தாமே தயாரிக்கும் தாவரங்கள்

நுண் தடயங்கள் சொல்லும் கதைகள்

அன்புள்ள லோகமாதேவி,

அந்த தளமே அற்புதமாக உள்ளது. உங்கள் கட்டுரைகளும் நேர்த்தியான மொழியில் செறிவாக அமைந்துள்ளன. அறிவியலையோ தொழில்நுட்பத்தையோ எழுதவோ பேசவோ மொழி இன்றியமையாதது. அதற்கு மொழிக்கல்வி போதாது, இலக்கியக் கல்வி தேவை. இதை இங்குள்ள கல்வியாளர்களால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் அழகிய கட்டுரைகளை வாசிக்கையில் உடனே நம்மூர் பேராசிரியர்கள் படையெடுத்து சகிக்கமுடியாத உரைநடையால் நிரப்பி வைத்துவிடுவார்களே என்னும் திகிலும் உருவாகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஅருண்மொழி நூல் விமர்சன அரங்கு
அடுத்த கட்டுரைராஜஸ்தானின் புதைநகர்கள்- கடிதம்