புத்தகக் கண்காட்சியில் அரசியல்

அன்புள்ள ஜெ,

நலம் தானே!நடந்து முடிந்த புத்தக கண்காட்சியை ஒட்டி எழுந்த  கேள்வி

புதியதாக இலக்கியம் படிக்க வரும் கல்லூரி மாணவர்கள்/ இளைஞர்களை புரட்சி போராளிகள்; பெரியாரிஸ்ட்கள்; தலித் போராளிகள் ; என தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் மாமனிதர்கள் ஒரு வகை வாசிப்பு திணிப்பை வலுகட்டாயமாக செய்கிறார்கள்.

முற்போக்கு சார்ந்த புத்தகங்களை மட்டுமே வாசிக்க வேண்டும். இந்த  இந்த புத்தக ஸ்டாலுக்கு மட்டுமே போக வேண்டும். குறிப்பாக கருஞ்சட்டை பதிப்பகம் போன்ற ஸ்டாலுக்கு சென்றே ஆக வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் இருக்கிறேது. எனக்கும் இதே தான் 2018 -ல் நடந்தது.

இப்போதும் 2022 புத்தக காட்சியில் இதே போன்று தெரிந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு நடைபெற்று இருக்கும். புரட்சி வெடிக்க காத்து கொண்டு இருக்கும் தோழர்களும் இதே நிலையில் தான் இருக்கிறார்கள். எல்லோரும் இல்லை குறிப்பாக சில போலி போர்வை ஸ்டுகள் தான் இப்படி செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தீவிர இலக்கிய வாசிப்பை இதனுள் இருக்கும் இளைஞர்கள் எப்போது வாசிப்பார்கள்

இது போன்ற இடர்பாடுகளை களைந்து நல்ல வாசிப்புள்ள சமூகம்  வளர வழிகள் என்ன ஜெ?

ஆர்.நவின் குமார்

அன்புள்ள நவீன்

பொதுவாக அரசியலியக்கங்கள், மத அமைப்புகள் மிகைப்பிரச்சார (Hyper Propaganda) தன்மை கொண்டிருப்பார்கள். முன்பு போரின்போது இது சொல்லப்பட்டது. பிரச்சாரக் களத்திலேயே போர் முதலில் நிகழ்கிறது. அங்கு அடையப்படும் வெற்றியே களவெற்றியாக ஆகிறது. இன்று அது வணிகம், அரசியல் இரண்டிலும் நிகழ்கிறது. நான் உயர்விளம்பரத் துறையினருடன் உரையாடும்போது அவர்கள் strategy, campaign, occupation, sustaining, collateral damage என போருக்குரிய கலைச்சொற்களையே பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டிருக்கிறேன்.

அரசியல் என்பது எப்போதுமே போர்தான். ஜனநாயகக் களத்தில் அதன் ஆயுதம் பிரச்சாரம் .இன்றைய சூழலில் இந்த உச்சகட்டப் பிரச்சாரத்தில் திறன்மிக்க வணிகவிளம்பர அமைப்புகள், நிறுவனங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கான பணம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் எல்லா தளங்களிலும் போர்வியூகங்களை வகுக்கிறார்கள். அவர்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம்.

அரசியல் எல்லா ஊடகங்களையும் தன் அதிகாரவிசைக்காகப் பயன்படுத்திக் கொள்ளும். அதில் சினிமா, டிவி எல்லாமே உண்டு. அச்சு ஊடகமும் அதில் அடங்கும். அரசியலில் உள்ள மிகைப்பிரச்சாரம் நேரடியாக எழுத்து – வாசிப்புக் களத்திலும் நிகழ்கிறது. எல்லா தரப்பும் களத்திலுள்ளன. நாம் நமக்கு ஒவ்வாத பிரச்சாரங்களையே தொந்தரவாக நினைக்கிறோம். நமக்கு கொஞ்சம் உடன்பாடுள்ள பிரச்சாரங்களை நாம் மறைமுகமாக ஏற்கிறோம். அல்லது அது நமக்கு பிரச்சாரமாக தெரிவதில்லை. சிந்திப்பவனுக்கு எல்லா பிரச்சாரமும் ஒன்றுதான்.

இலக்கியவாசகன் என்பவன் யார்? தன்னிடம் ஒன்று ஆவேசமாக வலியுறுத்தப்படுமென்றால் அதன்மேல் எதிர்ப்பு கொள்பவன். எதையும் தன் நேரடி அனுபவம், தன் நுண்ணுணர்வை கொண்டு பரிசீலிப்பவன், எங்கும் தன்னையே அளவுகோலாக முன்வைப்பவன். அவன் இந்தப் மிகைப்பிரச்சாரங்களை கடந்து வருவான்.

அப்படி வரமுடியாதவர்கள் அந்த அலைகளில் அடித்துச்செல்லப்படுவார்கள். அவர்களில் அப்பாவிகள் என்போர் வேறு எவரோ சிலர் அதிகாரம் அடைய தங்கள் வாழ்க்கையை இழப்பார்கள். யதார்த்தவாதிகள் என்போர் நுட்பமாக ஒரு இரட்டைவேடத்தைப் போட்டுக்கொள்வார்கள். அந்த அரசியலை ஓர் அடையாளமாக வெளியே பேசுவார்கள். தொழில், குடும்பம் எல்லாவற்றையும் வேறுபக்கம் வசதிப்படி அமைத்துக்கொள்வார்கள். தனிவாழ்வில் சாதி, மதம் என எது வெல்லுமோ, எது தேவையோ அவற்றையெல்லாம் செய்வார்கள்.

யதார்த்தவாதிகளே நம்மிடையே மிகப்பெரும்பான்மை. அவர்களுக்கு எந்த கொள்கைப்பிடிப்பும் இல்லை. எந்த நிலைபாடும் உண்மையில் இல்லை. அவர்களின் கொள்கையும் நிலைபாடுமெல்லாம் வெறும் பாவனை. டீக்கடையிலும் முகநூலிலும் திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம், இந்துத்துவ இயக்கம் என்றெல்லாம் அடையாளம் காட்டி ஒரு வட்டம் சேர்த்துக்கொள்வார்கள். ஓய்வு பெற்றபின் அந்த மூர்க்கம் மிகுதியாகும். அதில் மறைந்திருக்கும் சாதிவெறி வலுவடையும். வயதுபோன காலத்தில் ராப்பகலாக முகநூலில் கிடந்து உழல்வார்கள்.

தமிழ்ச்சூழலில் பொதுஅதிகாரத்தில் இருக்கும் கருத்தியல்கள் திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம் சார்ந்தவை. ஆகவே அவை அதிகமாக கண்ணுக்குப் படுகின்றன. அதேயளவுக்கு இல்லையென்றாலும் மதம்சார்ந்த அரசியலை முன்வைக்கும் தரப்புகளும் புத்தகக் கண்காட்சியில் உள்ளன. உண்மையில் மதவாத அரசியல் புத்தகக் கண்காட்சியை இன்று தங்கள் களமாகக் கொள்ளவில்லை. அவர்கள் நாடெங்கும் கோயில்விழாக்களையே கையிலெடுக்கிறார்கள். புத்தகக் கண்காட்சிக்கும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து நிறைவார்கள். மறுபக்கம்  இடதுசாரிகளும் திராவிட இயக்கமும் திருவிழாக்களில் களமிறங்க நினைக்கிறார்கள். போர் அங்கே நிகழவிருக்கிறது

இலக்கியவாசகனின் நுண்ணுணர்வையே நம்பவேண்டியிருக்கிறது. அவனால் கடந்து வரமுடியும். ஒருவகையில் பார்த்தால் இது ஒரு வடிகட்டிப் படலம். கடந்து வருபவனே இலக்கியவாசகன். மற்றவர்கள் வராமலிருப்பதே நல்லது

ஜெ

முந்தைய கட்டுரைஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி…
அடுத்த கட்டுரைகோவை கொடீஷியா புத்தகக் கண்காட்சி விருதுகள் அறிவிப்பு