அம்பை- கடிதங்கள்

ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சில தினங்களுக்கு முன் நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தேன், என் நண்பனின் சகோதரி நல்ல இலக்கிய வாசகி, நாங்கள் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும்போது புத்தகங்களைப் பற்றி உரையாடினோம். அப்பொழுதுதான் என் வெண்முரசு பற்றியும் வெண்முரசின் கதைமாந்தர்களின் விவரிப்பை பற்றியும் சொன்னேன்.

அம்பை கதாபாத்திரத்தை பாரதத்தில் மிகவும் விரும்புவதாக என்னிடம் சொன்னார்கள் நான் முதற்கனலின் சிறு பகுதியான எரிமலர் புத்தகத்தை வாசிக்க பரிந்துரைத்தேன்.  சில தினங்களுக்கு பிறகு அவர் என்னை தொலைபேசியில் அழைத்து அம்பையின் விவரிப்புகள் பற்றி கதாபாத்திரத்தின் அழகியலை, வலிமையை அவள் மீதான நியாயங்களை , தான் ரசித்தவற்றை பகிர்ந்துகொண்டார்

உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு அம்பை பிடித்தவளாய் இருக்கிறார்.  வெண்முரசின் என்பது நமது வாழ்வின் வெளிப்பாடு, அங்கு நாம் பார்க்கும் கதாபாத்திரங்கள் தன் சுயதரிசனம். பெண்மையின் மனவலிமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் தான் அம்பை பாரதத்தின் தொடக்கம் அவளின் மனதில் இருந்தே தொடங்குகிறது எந்த நிலையிலும் அவள் தன்னை தாழ்த்திக் கொள்ளவே இல்லை,

சால்வனிடம் “நான் தொண்டு மகள் அல்ல”… இளவரசி…….. என்ற வார்த்தைகள் அவள் மீது அவள் கொண்ட உயர் எண்ணத்தை வெளிக்காட்டுகிறது.  “ஒரு தெய்வம் இறங்கிச் சென்று பெரியதொரு தெய்வம் வந்து படகில் ஏறியது போல நிருதன் உணர்ந்தான்” என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை அம்பை கதாபாத்திரத்தின் ஆழத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

அவள் சால்வன் இடமும் பீஷ்மரிடமும் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடவில்லை என்ற அம்சமே அவளின் சிறப்பை காட்டுகிறது. “நீ விரும்பினால் என் அந்தப்புரத்தில் வாழ முடியும். உனக்கு மணிமுடியும் செங்கோலும் மட்டும் இருக்காது.” என்று சால்வன் கூறும்போது அம்பையின் “சீ கீழ்மகனே” என்ற கோபாவேச பதிலுரை அவளின் மேன்மையை நமக்கு பறைசாற்றுகிறது.

வெண்முரசில் அம்பையின் வலிமையும், தன்னைத் கீழ்மை படுத்திக் கொள்ளாத நோக்கும்,   பெண்களுக்கு அவளை பரிச்சயமானவளாகவும், நெருக்கமானவர்களாகவும், மாற்றுகிறது என்று நினைக்கிறேன். பெண்களில் பெரும்பாலோனோர் அம்பையை போல மன வலிவு கொள்ள விரும்புகிறா்கள், அதனாலேதான் எல்லா காலகட்டத்திலும் எல்லாத் தரப்பிலும் அம்பை விரும்பப்பட்டு கொண்டே இருக்கிறாள்.

தமிழ்க்குமரன் துரை

*

அன்புள்ள ஜெ

எழுபத்தாறு வயதான என் அம்மா வெண்முரசு வெய்யோன் வரை வாசித்துவிட்டார்கள். நாள்தோறும் காலையில் எழுந்து மதியம் வரை பொறுமையாக வாசிக்கிறார்கள். ஒரு தாளில் கதாபாத்திரங்களை குறிப்பு எடுத்துக்கொண்டு வாசிக்கிறார்கள். வாசிப்பு அவர்களிடமிருந்த சோர்வு, நோய் பற்றிய பயம் எல்லாவற்றையும் இல்லாமலாக்கிவிட்டது. அவர்கள் வாழ்க்கையை நிறைவானதாக ஆக்கிவிட்டது.

அம்மா வாசிக்க ஆரம்பிக்கக் காரணம் அம்பைதான். அம்பை மட்டுமே வரும் எரிமலர்தான் வாசித்தார்கள். அப்படியே முதற்கனலில் இருந்து தொடங்கிவிட்டார்கள்.

எம்.சாந்தி

முந்தைய கட்டுரைகாஞ்சிப்பட்டின் ஒளி
அடுத்த கட்டுரைபெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ