ஹிஜாப் -கடிதம்

ஹிஜாபும் கல்வியும்

அன்பு ஆசானுக்கு,

இன்னும் பல்லாண்டுகள் ஆசிரியராக இருந்து என்னை நெறிப்படுத்த  இறைவன் உங்களிற்கு எல்லா நலன்களையும் ஆயுளையும் வழங்க நாளும் பிரார்த்திக்கிறேன்.  வாழ்வில் ஒரு எழுத்தாளருக்கு நான் எழுதும் முதல் கடிதம். அதுவும் தனி மனிதனாக நான் கொண்டுள்ள சிறுமைகளையும், அதனால் எழும் அகங்காரத்தையும் உங்கள் எழுத்தின் மூலம் சுட்டிக்காட்டி என்னை பண்படுத்திய முழுமுதல் ஆசானுக்கு எழுதும் முதல் கடிதம் என்பதால் அதிகமாகவே பதற்றம். சிந்தனை பிழை என்றோ கடிதமொழியில் பிழை என்றோ தோன்றினால் தயவு செய்து மன்னி்க்கவும்.

ஹிஜாப் விவாதத்தில் நீங்கள் சுட்டிக்காட்டிய பல விஷயங்கள் எப்போதும் போல பல புதிய திறப்புகளை அளித்தாலும் ஒரு சிறு நெருடல். எந்நிலையிலும் கல்வி யாருக்கும் மறுக்கபடக்கூடாதது என்றது மிகச்சரியானது என்றாலும், அப்படித்தான் நம் முப்பாட்டிகளும் அவரது முன்னோர்களும் கல்வி கற்றார்கள் என்றாலும் மனதில் தோன்றிய இரு சந்தேகங்கள் கீழே.

  1. ஒரு நூற்றாண்டிற்கு முன்பு கோஷா முறையில் பிறரின் கண்களுக்கு படாமல் கல்வி கற்க துவங்கியதில் இருந்து பல படிகள் முன்னேறி இன்று இருக்கும் இடத்தை பெண்கள் அடைந்திருக்கிறார்கள். அவ்வாறு அடைந்த நிலையில் இருந்து இஸ்லாமிய பெண்களை மீண்டும் ஒரு நூற்றாண்டு பின்னால் இழுத்துச்செல்ல முயற்சிக்கும் ஒரு கருவியை தடை செய்வதிலும்(அது அற்ப அரசியல் லாபத்திற்காக என்றாலும்) கல்விக்காக அதை விட்டு கொடுக்க வேண்டும் என கோருவதிலும் தவறு இல்லை என்று தோன்றுகிறது. (இல்லை இந்த பிஜேபிக்காறர்கள் அப்படி தோணும் படி செய்து விட்டார்களா என்றொரு குரலும் மனதிற்குள் கேட்கிறது)
  2. இதன் தீமையை இஸ்லாமிய பெண்கள் தான் உணரவேண்டும் மற்றும் அதற்கான மாற்று குரல் அவர்களிடையே தான் எழ வேண்டும் எனும்போது,  இஸ்லாமிய பெண்கள் தனிமனித சுதந்திரத்தை காட்டி ஹிஜாபை மறுப்பதனால் ( பெண்களுக்கு தனி மனித சுதந்திரம் என்பதே பலருக்கு ஆபாச வார்த்தையாக இருக்கும்போது)  விளையும் பயன்களை விட கல்வியை இழப்போம் அதனால் ஹிஜாப் வேண்டாம் என்பது உறுதியான எதிர்ப்பாக இருக்காதா, அவ்வாறான ஓரு மாற்றத்திற்கு சிறு அளவிலேனும் இந்த தடை உதவாதா.

இறுதியாக மகாராஷ்டிரத்தில் நான் பணி புரியும் இடத்திலும் மற்ற நண்பர் கூடுகைகளிலும் இஸ்லாமியர்க்கு எதிராக ரகசியமாக கொட்டப்படும் காழ்ப்பிற்க்கு எதிராக என்றும் என் மனதில் எழுந்து வருவது பள்ளியில் எந்த பேதமும் இல்லாமல் பயின்ற என் இஸ்லாமிய நண்பர்களின்( பள்ளி நாட்களில் வெள்ளி கிழமைகளில் என்னோடு தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலிற்க்கு வாரம் தவறாமல் வரும் இஸ்லாமிய நண்பர்கள் உண்டு இன்றும் அந்த நட்பு அப்படியே மாற்றம் இல்லாமல் தான் நீடிக்கிறது) முகங்களே. இந்த நல்லிணக்கம் என் பிள்ளைகள் காலத்திலும் தொடர வேண்டுமென்றால் அவர்கள் இளமை காலத்தில் அதிகம் செலவிடும் பள்ளியும் கல்லூரியும் எந்த மத அடையாளங்களுக்கும் இடம் கொடுக்கப்படாமல  இருக்க வேண்டாமா. வளரிளம் பிராயத்திலேயே இவர் இன்ன மதத்தவர் என எல்லா நேரமும் முகத்தில் அறைந்து சொல்லும் அடையாளங்கள் தடுக்க பட வேண்டும் என ஒரு நடு நிலையாளனாக எண்ணுவது தவறா?

சற்றே குழப்பமாக இருந்ததால் இந்த கடிதம். நேரம் இருந்தால், பதிலளிக்க தகுதியான கேள்வி என்று தோன்றினால் தயவு செய்து பதிலளிக்கவும்.

என்றும் பிரியத்துடன்,

பிரவீன் குமார்

***

அன்புள்ள பிரவீன்குமார்

மேலிடத்தில் இருந்து செலுத்தப்படும் அழுத்தங்கள் வழியாக எந்தச் சீர்திருத்தங்களும் நிலைகொள்வதில்லை. அரசாங்கம் சார்ந்த சீர்திருத்தங்களால் துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் புர்க்கா முறை ஐம்பதாண்டுகளுக்கு முன் ஒழிந்தது. பின்னர் மும்மடங்கு விசையுடன் திரும்ப வந்தது. கல்வி, அதையொட்டிய அகவிடுதலை ஆகியவையே ஒரே வழி

ஜெ

முந்தைய கட்டுரைதிரள்
அடுத்த கட்டுரைகதைக்குரல்கள்- கடிதங்கள்