பாலாவின் புதிய படம் குமரியில்

பாலா இயக்கி சூரியா நடிக்கும் படம் (பெயரிடப்படவில்லை) படப்பிடிப்பு கன்யாகுமரியில் நடைபெறுகிறது. நேற்று (28-3-2022) முதல் நாள் படப்பிடிப்பு, வருகிறீர்களா என்று அழைத்திருந்தார். பாலாவைப் பார்த்தும் கொஞ்சநாள் ஆகிறதென்பதனால் கிளம்பிச் சென்றிருந்தேன்.

கன்யாகுமரியில் உண்மையிலேயே மண்டைவெடிக்கும் வெயில். ஆனால் செட் போடப்பட்டிருந்த இடம் மரங்களுடன் நிழலாக இருந்தது பிதாமகன் பாலு ஒளிப்பதிவாளர்.

காரவானுக்குள் சென்று பாலாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். சினிமாவில் நான் எப்போதுமே உரையாட ஆசைப்படும் மனிதர்களில் ஒருவர். சிரித்து கொப்பளிக்காமல் ஓர் உரையாடல் எங்களுக்குள் நிகழ்ந்ததே இல்லை. நான் பாலாவுடன் எப்போதுமே சினிமா பற்றிப் பேசுவதில்லை. அவர் எடுக்கவிருக்கும் சினிமா பற்றிய தொழில்முறை பேச்சு தவிர. இலக்கியப்பிரச்சினைகள், இலக்கிய வேடிக்கைகள்.

பாலா நன்றாக தெளிந்து உற்சாகமாக இருந்தார். உணவு, தூக்கம் எல்லாவற்றையும் முறைப்படுத்தியிருப்பது தெரிந்தது. எங்கள் இருவருக்கும் பொதுவான நல்ல நண்பர் ஆச்சாரியா ரவி. அவர் பாலாவுக்கு வலது கைபோல. பாலா நினைப்பதை செயலாக்க அவரால் முடியும். அவருடைய மறைவு பாலாவை கொஞ்சம் சோர்வடையச் செய்திருந்தது. படம் தொடங்கியமையால் மீண்டுவிட்டிருந்தார்.

சூரியாவை பார்த்தேன். நான் அவரை இப்போதுதான் சந்திக்கிறேன். ஒல்லியாக, இளமையாகச் சின்னப்பையன் போல் இருந்தார். என் மகன் அஜிதனுக்கும் இளையவர் போல. நடிகர்களுடன் பழகுவதில் இது ஒரு சிக்கல். அவர்கள் கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் பயிற்சிகள் வழியாகவும், அவர்களுக்கே உரிய இயல்பான நிறம் மற்றும் தோற்றப்பொலிவு வழியாகவும் பத்துப்பதினைந்து ஆண்டுகள் வயது குறைவாக தெரிவார்கள். நம்மையறியாமலேயே நாம் பையன்களிடம் பேசும் மொழியை கைக்கொண்டு விடுவோம். அவ்வப்போது நமக்கே நாம் நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்.

சூரியாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு என் இலக்கிய பின்புலம் தெரியாது. அதை நான் சொல்லிக்கொள்வதில்லை. சினிமா எழுத்தாளர், பாலாவின் நண்பர் என தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு புதிய படத்திற்குள் நுழைவதென்பது நடிகர்களுக்குக் கொஞ்சம் தத்தளிப்பானது. கதையாக அவர்களுக்குள் அந்த வாழ்க்கையும் கதைச்சூழலும் உள்ளே செல்லாது. நடிக்க நடிக்க அதற்குள் செல்வார்கள். சூரியா கொஞ்சம் பதற்றமாக இருந்தார். மேக்கப் செய்யவேண்டியிருந்தது.

இந்தக்கதை பற்றி பாலா என்னிடம் சொல்லியிருந்தார். கன்யாகுமரியை பின்புலமாகக் கொண்டது. சூரியா கடலோரத்தில் வாழும் கொஞ்சம் அப்பாவித்தனம் கொஞ்சம் மூர்க்கம் கொண்ட கதாபாத்திரம். சூரியா இதுவரை செய்யாத ஒரு சிறப்பம்சம் கொண்டது.

வெயில் தாளமுடியவில்லை. மதியம் பாலாவிடம் விடைபெற்றுக்கொண்டேன். இந்தப் பட லொக்கேஷன் பார்ப்பதற்காக பாலா பலமுறை கன்யாகுமரி வந்திருக்கிறார். இங்கு வந்து என்னை ஃபோனில் அழைத்தால் நான் சென்னையில் இருப்பேன். சென்னையில் இருந்தால் நான் நாகர்கோயிலில். நாகர்கோயில் ரயில்நிலையத்தில் நின்று தலைக்குமேல் கும்பிடு போட்டு ஒரு படம் எடுத்து அனுப்பியிருந்தார் ஒருமுறை.

படம் தொடங்கிவிட்டது. பாலாவின் இயல்பு எடுக்க எடுக்க படம் பற்றிய தெளிவை தானும் அடைவது. கதை வழியாக அல்ல, காட்சியமைப்புகள் வழியாக சிந்திப்பவர் அவர். இந்தப்படம் மீது பெரும் நம்பிக்கை எழுந்தது. நான் கடவுள் எடுக்கப்பட்டபோதிருந்த அந்த பரபரப்பான, அதேசமயம் நையாண்டிநிறைந்த, மாறாத உற்சாகம் கொண்ட பாலாவை பார்க்க முடிந்தது. திரும்பி வரும்போது பேசிக்கொண்டவற்றை எண்ணி சிரித்துக்கொண்டே இருந்தேன்.

முந்தைய கட்டுரைஎஸ்.ஜே.சிவசங்கர் மருத்துவ நிலை
அடுத்த கட்டுரைஇனி வரும் முகங்கள்…