”எவ்வளவு சனம் பாத்தியளே, இதுக்காலை எப்டி போறது?” என்று நல்லம்மா தன் கணவன் செல்லையாவை பற்றிக்கொள்கிறாள். தன் தோளில் கிடந்த சால்வையை இடுப்பில் சுற்றிக்கொண்டு “பயப்படாமல் என்னோடை வா” என்று செல்லையா அவளை அழைத்துச் செல்கிறான். வல்லிபுர கோயில் கடைசிநாள் திருவிழா. உற்சாகத்தில் ஐந்து வயதுச் சிறுமியைப்போல சேலையை முழங்காலுக்குமேல் மடித்துவிட்டுக்கொண்டு ஒரு கெந்தல் போடவேண்டும் என்று நல்லம்மாவுக்கு தோன்றியது. செல்லையா அவளுடைய உற்சாகத்தை ரசித்தபடி உடன் சென்றுகொண்டிருந்தான்.
இப்படித் தொடங்குகிறது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் இலங்கையர்கோன் 1942ல் எழுதிய சிறுகதையான வெள்ளிப்பாதசரம். ஒரு புதுமணத் தம்பதிகள் திருவிழாவுக்குச் செல்வது என்பது ஒரு முக்கியமான குறியீட்டு நிகழ்வு. அந்த விழா வெளியுலகமேதான். அந்த மானுடக்கொப்பளிப்பில் கரைந்தும், கரையாமல் தங்களுக்குள் ஒதுங்கிக்கொண்டும் அவர்கள் குதூகலிக்கிறார்கள். அவள் அஞ்சுவதுபோல நடித்து அவனை பாதுகாவலனாக்குகிறாள், அங்கு விற்கும் அனைத்தையும் வாங்கும் விழைவு கொள்கிறாள். அவனுடைய பணப்பையோ சிறியது.
பேரம்பேசி முப்பது ரூபாய்க்கு ஒரு வெள்ளிக்கொலுசை வாங்கிவிடுகிறார்கள். அதை அவள் விழாவிலேயே தொலைத்துவிடுகிறாள். அவனுடைய கடைசிப்பைசாவையும் கொடுத்து வாங்கியது. ஒருவாய் தேத்தண்ணி குடிக்க கையில் காசு மிச்சமில்லை. அவன் எரிந்துவிழுகிறான். சட்டென்று சுடுசொல் வந்துவிடுகிறது. “ஊதாரி நாய்” என்கிறான். முதல் வசை, முதல் பிணக்கு.
அவள் சீற்றம் கொண்டு வீடு திரும்புவோம் என்கிறாள். அவர்கள் இறுக்கமாக திரும்பிச் செல்கிறார்கள். அவள் தன் கணவனின் பசியை உணர்ந்து மனம் வருந்தினாலும் பேசாமல் வருகிறாள். வழியில் இருளில் ஒரு கொள்ளிவாய் பிசாசு. அவன் அதைநோக்கி துப்புகிறான். அது அப்பால் ஏரியில் விளக்கு கொளுத்தி மீன்பிடிப்பவர்களின் ஒளி என தெரிகிறது. அவர்கள் மனம் இணைகிறார்கள்.
வெள்ளிப்பாதசரம் தொகுதி 1962ல் இலங்கையர்கோன் மறைந்து ஓராண்டு நிறைவுக்குப்பின் அவர் மனைவி செல்லம்மா முயற்சியால் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகன்னாதன் முன்னுரையுடன் வெளிவந்தது. அதிலுள்ள எல்லா கதைகளுமே நுட்பமானவை, கிட்டத்தட்ட எழுபத்தைந்தாண்டுகளுக்கு பின்னரும் அழகு இழக்காதவை. சொல்லப்போனால் இத்தனை கால இடைவெளிக்குப் பின் தேறும் ஈழச்சிறுகதைகள் மிகமிக அரியவையே. இலங்கையர்கோன் ஈழச்சிறுகதைகளில் ஒரு சாதனையாளர்
இலங்கையர்கோன் என்ற பெயரில் எழுதிய த.சிவஞானசுந்தரம் தன் பதினெட்டாவது வயதிலேயே மொழியாக்கங்கள் செய்யத்தொடங்கினார். முதலில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நவீனச் சிறுகதைகளை மொழியாக்கம் செய்தார். அது சிறுகதை வடிவம் பற்றிய பயிற்சியை அவருக்கு அளித்தது. இலங்கையர்கோன் எழுதிய முதல் கதை மரியா மக்தலேனா 1938 ல் கி.வா.ஜகன்னாதன் ஆசிரியராக இருந்த கலைமகள் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து ஈழகேசரி போன்ற இதழ்களில் எழுதினார்.
இலங்கையர்கோன் கு.ப. ராஜகோபாலன் எழுத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவரைப்போலவே ஆண்பெண் உறவின் நுட்பங்களை எழுதியவர். உரையாடல்கள் வழியாக கதைகளை கொண்டுசெல்லும் பாணி கொண்டவர். கதைகள் உள்ளடங்கிய அமைதி கொண்டவை.
தமிழகத்தில் வ.ராமசாமி ஐயங்கார், க.நா.சுப்ரமணியம் போன்ற விமர்சகர்கள் அவரை ஓர் அரிய படைப்பாளியாக எண்ணினர். மணிக்கொடி, சூறாவளி, சரஸ்வதி,சக்தி போன்ற இலக்கிய இதழ்கள் அவர் கதைகளை வெளியிட்டன. ஆனால் தமிழகத்தில் தீவிர நவீன இலக்கியம் வாசிக்கப்பட்ட சிறுசூழலிலேயே அவர் கவனிக்கப்பட்டார். இலங்கைச்சூழலில் அவரை பெரும்பாலும் எவரும் கவனித்து முதன்மைப்படுத்தவில்லை.
ஆகவே ஒரு கட்டத்தில் இலங்கையர்கோன் நாடகங்கள் எழுதுவதில் ஈடுபட்டார். அவர் எழுதிய பச்சோந்தி, லண்டன் கந்தையா முதலிய நாடகங்கள் மேடையேறி வரவேற்பு பெற்றன. ஆனால் அவை அவருடைய கதைகள் போல இலக்கியத்தரம் கொண்டவையாக இருக்கவில்லை. தன் நாற்பத்தாறாம் வயதில் 1961ல் மறைந்தார்.
இலங்கையின் முன்னோடி எழுத்தாளர்கள் என பலர் இருந்தாலும் இன்று அவர்கள் அன்றிருந்த ஒரு சூழலை, எழுத்துவடிவை காட்டுபவர்கள் என்ற அளவிலேயே முக்கியமானவர்கள். அவர்களின் ஆக்கங்கள் ஆய்படுபொருட்கள் மட்டுமே. மாறாக உயர்ந்த காஞ்சிப்பட்டு போல நுட்பமும் அழகும் மங்காமலிருக்கும் கதைகள் இலங்கையர்கோன் எழுதியவை. ஏனென்றால் முழுக்கமுழுக்க நுண்மையான அகஉணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்துபவை, கவித்துவத்தை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டவை.
அவருடைய மிக இளம் வயதில் எழுதப்பட்ட கதையான வெள்ளிப்பாதசரம் ஓர் உதாரணம். அந்த கொள்ளிவாய் பிசாசு என்ன என்பதை வாசகரிகளின் கற்பனைக்கே விட்டு எழுதப்பட்டுள்ளது. உள்ளத்தில் தோன்றி பேருருவாக எழுந்து உதறப்பட்டதும் சட்டென்று அவிந்தணையும் அந்த அனல் போன்ற ஒரு படிமம் உலக அளவில் அன்று எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளிலேயே மிக அரிதானது.
ஈழத்து இலக்கியச் சூழல் மிக விரைவிலேயே அங்கிருந்த அரசியல்சிக்கல்கள், சமூகச்சிக்கல்களால் ஆட்கொள்ளப்பட்டது. நேரடியாக அரசியல்-சமூகக் கருத்துக்களை பேசும் படைப்புகள் வாசகர்களால் கவனிக்கப்பட்டன, விமர்சகர்களால் போற்றப்பட்டன. நேரடியான கருத்துரைப்பு என்னும் இயல்பிலிருந்து ஈழத்து இலக்கிய போக்கு விலக இயலாமலேயே ஆகிவிட்டமையால் இலங்கையர்கோன் பின்னாளிலும்கூட கவனிக்கப்படவோ பின்பற்றப்படவோ இல்லை. இலங்கையர்கோன் நிறைய எழுதி, அவை ஈழத்துச் சூழலில் வாசக ஏற்பும் விமர்சனக் கவனமும் பெற்றிருந்தால் தமிழகத்தில் மணிக்கொடி இதழ் உருவாக்கிய சிறுகதை மறுமலர்ச்சி இலங்கைச்சூழலிலும் நிகழ்ந்திருக்கும்
இணையநூலகம் வெள்ளிப்பாதசரம்