இலங்கையும் பின்தொடரும் நிழலின் குரலும்

பின்தொடரும் நிழலின்குரல் பற்றி சிறில் அலெக்ஸ் ஒரு சிறு புகைப்படத்துண்டு அனுப்பியிருந்தார். அதைப்பற்றிய சிறு வியப்பையும் தெரிவித்திருந்தார்.

அந்நாவல் எழுதப்பட்ட 1997ல் அந்த வார்த்தைகள் மிகமிக தொலைவாக ஒலிப்பவை. அன்று இங்கே இனத்தேசியவெறியும் போர்வெறியும் கொப்பளித்துக் கொண்டிருந்தன. நாவலில் அவ்வரியைச் சொல்பவர்கள் இருவரும் நவீன இடதுசாரிகள். கதிர் புதிய மார்க்ஸியத்தின் பிரதிநிதியாக வருபவன். இனிமேல் மார்க்ஸியம் என்பது வன்முறைப்புரட்சி மூலம் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி பொருளியலின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றி உருவாக்குவதாக இருக்கவேண்டியதில்லை என்றும், உலகைக் கட்டமைக்கும் சிந்தனைகளில் ஊடுருவி அவற்றை மாற்றியமைப்பதன் வழியாகவே அது தன் பங்களிப்பை ஆற்றமுடியும் என்றும் வாதிடுபவன்.முழுக்கமுழுக்க தர்க்கபூர்வமானவன். உணர்வெழுச்சிகளுக்கு அப்பாற்பட்டவன். அவனை ஆதரிப்பவனாகிய சண்முகம் அவ்வரியைச் சொல்கிறான்.

அன்று அது ஒரு தொலைதூர ஊகம், ஆனால் வரலாற்றை அறிந்த எவருக்கும் அது எளிய ஊகம். உள்நாட்டுப்போர்களை விரைவில் முடிக்கமுடியாது. அதில் எவரும் வெல்வதில்லை. அவற்றில் வேறுநாடுகள் தலையிடுமென்றால் அவற்றை முடிக்க போரிடும் தரப்புகள் நினைத்தாலும் முடியாது. அப்போர் அறுதியாக பஞ்சத்தையும் பேரழிவையுமே உருவாக்கும். மிகச்சிறிய பொருளியல் காரணத்துக்காக உள்நாட்டுப்போரைத் தொடங்கிய நாடுகள் ஒட்டுமொத்தப் பொருளியலழிவுக்குச் செல்வதையே உலகவரலாறு காட்டுகிறது.

போர் நின்றால்கூட பஞ்சமும் பொருளியலழிவும் வரக்கூடும். பல காரணங்களில் முக்கியமானது போரின்போது உருவாக்கிய ராணுவத்தை எளிதில் கலைக்கமுடியாதென்பதும், அந்தச் செலவை அன்றாடப் பொருளியல் தாங்காது என்பதும்தான். போர்க்காலத்தில் ஆயுதங்கள் வாங்கச் செலவிட்ட பணத்தின் வட்டி ஏறி பெரும் கடன்சுமை பொருளியல்மேல் ஏறி அமர்ந்திருக்கும் என்பது அடுத்த காரணம்,

இலங்கை 2009ல் போருக்குப்பின் மேலெழும் அறிகுறிகளைக் காட்டியது. காரணம் அதற்கு வந்த நிதியுதவிகள். சீனாவின் நிதி இலங்கையை கடன்சுமையில் சிக்கவைத்து கைப்பற்றும் நோக்கம் கொண்டது. இந்தியாவிற்கு எதிரான சீனநடவடிக்கையின் ஒரு பகுதி அது. ஆனால் அது பத்தாண்டுகளுக்கும் மேல் இலங்கைப் பொருளியலைச் சுழலச் செய்தது.

இலங்கையின் இதழியல் நண்பர் ஒருவர், அங்குள்ள பொருளியலை தொடர்ந்து ஆராய்பவர் சொன்னவை இக்கருத்துக்கள். சீன நிதியை தன்னிச்சையாகச் செலவிட இலங்கைக்கு உரிமை இல்லைதான். ஆனால் அதைக்கொண்டு சமாளித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் சிலவற்றைச் செய்திருக்கலாம். ராணுவத்தை கொஞ்சம் கொஞ்சமாக கலைத்து அச்செலவுகளைக் குறைத்திருக்கலாம். அந்நிதியின் ஒரு பகுதியை உள்நாட்டுச் சிறுதொழிலுற்பத்திக்கு கொண்டுசென்றிருக்கலாம். குறிப்பாக ஆடைத்தொழிலில் வங்கதேசம் அளித்த சலுகைகளை தானும் அளித்திருந்தால் கணிசமான அளவு தொழில்களை உள்ளே இழுத்திருக்கலாம். அத்தொழில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடியது. வங்கதேசத்தை அது மீட்டது.

ஆனால் அதை எதையும் செய்யவில்லை. மாறாக உள்கட்டுமானப் பணிகளுக்கு அந்நிதி முழுமையாகச் செலவிடப்பட்டது. ஏனென்றால் அதில்தான் குத்தகை, மறுகுத்தகை என ‘மார்ஜின்’ அதிகம். கைவைத்தவர்கள் எல்லாம் அள்ள நிதி அப்படியே காணாமலாயிற்று. உள்கட்டுமானம் மேம்பட்டால் சுற்றுலா ஓங்கி அன்னியச்செலவாணி வந்து பொருளியல் மேம்படும் என சொல்லப்பட்டது. கொரோனா வந்து சுற்றுலாத்தொழில் வீழ்ச்சி அடைந்ததும் பொருளியல் வீழ்ச்சி அடைந்தது. அன்னியச்செலவாணி இல்லாமலானதும் எரிபொருள் இல்லாமலாகியது. எரிபொருள் இல்லாமலாக போக்குவரத்து, சிறுதொழில்கள் போன்ற பரவலான வேலைவாய்ப்புகள் அழிந்தன. இதுதான் நெருக்கடி.

அது உண்மை என்றே தோன்றுகிறது. சுற்றுலா மீண்டும் மேம்பட்டால் இலங்கை மேலெழக்கூடும். மற்றநாடுகள், குறிப்பாக இந்தியா, இலங்கையை திவாலாக விட்டுவிடாது. இந்திய முதலீடுகள் அங்கே மிக அதிகம். திவாலான நாடு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். ஆகவே இந்தியா இலங்கைக்கு தாங்காக இருக்கும் என்று நினைக்கிறேன்

ஜெ

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

நெல்லை புத்தகக் கண்காட்சியில் வாங்க

ரிதம் புக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் Rhytham Book Distributors

முந்தைய கட்டுரைமு.க, தி.மு.க – இ.பா
அடுத்த கட்டுரைமு.க -கடிதம்