மு.க -கடிதம்

அன்பு ஜெயமோகன்,

கருணாநிதி அவர்களைப் பற்றி ஒரு சுயவிளக்கம் கொடுத்தாக வேண்டிய நிலையில் இருந்தாக வேண்டி இருக்கிறது, பாருங்கள். அதைத்தான் கலிகாலக்கொடுமை என்கிறேன். திராவிட அடிப்படைவாதிகளிடம் கூட பேசி மீண்டு விடலாம் போல் இருக்கிறது. ஆனால், வலைதள நவீன இலக்கியப் புலிகளிடம் தப்பவே முடியாது போல.

கருணாநிதி இலக்கியவாதியா, எழுத்தாளரா எனும் உரையாடலுக்குத் தகுதியானவன் இல்லை நான். அதில் கருத்து சொல்லும் அளவுக்குக் கருணாநிதியைக் கவனித்தவனும் இல்லை. அதனால் அச்சர்ச்சையில் மூக்கை நுழைக்காமல் நகர்கிறேன். பலமுறை அவரின் ஆக்கங்கள் எனச் சொல்லப்படுபவனவற்றைப் படிக்க முயன்று தோற்றிருக்கிறேன். தமிழ்ப்பித்து தலைக்கேறிய இருந்த சமயம் அது. கருணாநிதி வேறு தொல்காப்பியப்பூங்காவை எழுதி இருந்தார். ம்ஹூம், அந்நூலுக்குள் நுழைய முயன்றதில் நெற்றி வீங்கியதுதான் மிச்சம்.

காலம் என்று ஒன்று இருக்கிறதே? அது அப்படியே விட்டுவிடுமா. அவரின் ஆக்கங்களில் இருந்து திரட்டி அளிக்கப்பட்ட சிந்தனைத்தொகுப்புகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தே விட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு என நினைக்கிறேன். ஒரு நண்பரிடம் வேடிக்கையாக புறநானூறு, அகநானூறு போல கலைஞர் நானூறு என்றிருந்தால் எப்படி இருக்கும் எனச் சொன்னேன். அந்நண்பர் திராவிட ஆதரவாளராக இல்லாவிட்டாலும், கருணாநிதியைச் சந்திப்பதற்கு விருப்பம் கொண்டவர். அதனால் அதற்கு  இது உதவுமா என்று கேட்டார். உதவக்கூடும் என்றேன். தயவுசெய்து சிந்தனைகளைத் தொகுத்துத்தருமாறு கேட்டுக் கொண்டார்.

நண்பராயிற்றே, மறுக்க முடியவில்லை. துவக்கத்தில் கொஞ்சம் வெறுப்புடன்தான் கருணாநிதி அவர்களின் சிந்தனனகளை வாசிக்கப் புகுந்தேன். போகப்போக, என் செயலில் ஒரு மழலைத்தனம் வந்து உட்கார்ந்து கொண்டது. என்னை அறியாமல் சிலவற்றைத் தேர்ந்தெடுக்கவும் துவங்கி இருந்தேன். ”பதர் நின்று அழிந்தால் பயன் தருமோ வாழ”, “உடல் என்றால் மெய்யல்ல பொய்யே ஆகும்”, ”சொல்லிவிட்டுக் கடிக்காது பாம்பு, வாலை மிதித்தாலே போதும்” என்பன போன்ற வரிகளின் நயமும் பொருளும் அப்போது பிடித்திருந்தது. அதற்காக அவரைச் சிந்தனையாளர் எனப்புகழ்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்.

வழக்கமான வேலை போக, மீதி நேரங்களில் தொகுத்த சிந்தனைகள் நானூறை நெருங்கியதும் நண்பரை அழைத்துச் சொன்னேன். அவர் இதை யாரிடம் காட்டிக் கருணாநிதி அவர்களுக்குச் சொல்வது என்றார். நான் கல்வி அமைச்சர் அன்பழகன் அவர்களைப் பரிந்துரைத்தேன். புள்ளி வைத்தால் கோடு போட்டு விடுகிற நண்பர். விடுவாரா, கருணாநிதியின் சிந்தனைகளைச் சுமந்துகொண்டு அன்பழகனைச் சந்தித்தார். அவரின் முயற்சியை அன்பழகன் பாராட்டியதோடு, சிந்தனைகளைத் தன்னிடம் தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்டிருக்கிறார். சிந்தனைகளில் எழுத்துப்பிழை, சொற்பிழை போன்றவை இருக்கிறதா என அன்றிரவு முழுவதும் பார்த்திருக்கிறார். தென்பட்ட பிழைகளைத் தன் கைப்பட எழுதி அடுத்த நாளே நண்பரை வரவழைத்துத் தந்திருக்கிறார். கூடவே, “பிழைகளைச் சரி செஞ்சுக்கங்க.. கலைஞர் இதப் பாத்தா சந்தோஷப்படுவார்.. இந்த வாரமே அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யறேன்!” எனச் சொல்லி இருக்கிறார்.

அதன்படியே, நண்பரை அவரே கூட்டிச் சென்று கருணாநிதி அவர்களிடம் அறிமுகப்படுத்தியும் இருக்கிறார். நண்பரைப் பற்றி விசாரித்த அவர், “நீங்க புத்தகமெல்லாம் படிப்பீங்களா?” என்று கேட்டிருக்கிறார். நண்பர் பதறிப்போய் விட்டார். வாசிப்புப்பழக்கம் சுத்தமாய் இல்லாதவர். “இல்லைங்க ஐயா.. இத எங்க நண்பர்கள் தொகுத்திருக்காங்க” என்றிருக்கிறார். “பரவாயில்ல.. இனியாவது நீங்க புத்தகங்கள படிங்க.. உங்களுக்கு எது படிக்கப் பிடிக்குதோ அதுல துவங்குங்க!” என்று சொல்லி இருக்கிறார். மேலும், “நான் படிச்ச புத்தகங்கள்ல இருந்து எனக்குக் கிடைச்ச அறிவுதான் இப்படி சிந்தனைகளா இருக்கு” என்றிருக்கிறார். நண்பர் ஆடிப் போய் விட்டார். என்றாலும், இன்றைக்கு வரை வாசிப்புக்கு இனிமேல்தான் வர வேண்டும் என்றுதான் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருக்கு யார் செய்வினை வைத்து விட்டதாகவே நம்புகிறேன்.

கலைஞர் நானூறு நூலைக் கொண்டு வருவதற்கு பல அரசியல்வாதிகளை நண்பர் சந்தித்தார். அதனால் தங்களுக்கு என்ன அரசியல் லாபம் கிடைக்கும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக இருந்திருக்கிறது. கலைஞரே ஒப்புதல் கொடுத்துட்டார் என்ற பதில்களில் எல்லாம் அவர்களுக்கு நிறைவே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, கருணாநிதி என்பவர் கட்சித்தலைவர்; ஒருபோதும் அவர் எழுத்தாளர் அல்ல. பல அரசியல்வாதிகள் சிந்தனைகளைப் படித்துப்பார்த்து விட்டு கலைஞர் இப்படி எல்லாம் எழுதி இருக்கிறாரா என்று கேட்டிருக்கின்றனர். நண்பருக்கு வேர்த்து வடிந்திருக்கிறது. அச்சமயத்தில் அம்முயற்சி அப்படியே தேங்கிப்போனது. நண்பரும் கைவிட்டு விட்டார். கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு, வேறொருவருக்கு அம்முயற்சி கைமாறியது. ஒன்றும் நடந்தபாடில்லை. வருடங்கள் உருண்டு கொண்டே இருக்கின்றன. இந்த வருடம் எப்படியும் கொண்டு வந்து விடலாம் என அவர் நம்பிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்க, சமீபத்தில் நடந்த கூத்து ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். கலைஞர் நானூறு முயற்சியைக் கேள்விப்பட்ட ஒரு அரசியல்வாதி, “தம்பி, அந்தக் காலமெல்லாம் போயாச்சு.. தளபதி நானூறு இருந்தா கொண்டு வாங்க.. முயற்சி செய்யலாம்!” என்று பழைய நண்பரிடம் சொல்லி இருக்கிறார். அப்பாவி நண்பர், ”நண்பா.. தளபதியின் நானூறு சிந்தனைகளைத் தொகுத்துத் தர முடியுமா?” என என்னிடம் கேட்டார். “இப்ப நேரம் இல்ல நண்பா.!” என்று மட்டும்தான் அவரிடம் சொல்ல முடிந்தது.

யாரையும் இழிவுபடுத்தவோ உயர்வுபடுத்தவோ நான் இவ்வனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. சந்திக்கிற புதிய இளைஞர்களிடம் நூல்வாசிப்பு பற்றி இயன்ற அளவு கருணாநிதி பகிர்ந்து கொண்டிருக்கிறார். நம் சிந்தனைகளைப் பக்குவப்படுத்துவதற்கு வாசிப்பே உதவும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருந்திருக்கிறார். ஆனால், அவரைச் சுற்றி இருப்பவர்களோ தொண்டர்களோ அதைப் பெரும்பாலும் புரிந்து கொள்ளவே இல்லை.

இறுதிக்காலத்தில் இராமனுஜம் தொலைக்காட்சித் தொடருக்கு வேலை பார்த்தபோது ஒளிபரப்பான அவரின் நேர்காணல் ஒன்றைக் கண்டேன். அவர் முகத்தில் அவ்வளவு கொண்டாட்டம். என் வகையில், வாசிப்பும் தொடர் செயல்பாடுகளுமே அவரை உற்சாகமாய் வைத்திருந்ததாகக் கருதுகிறேன். இன்றைக்குப் பொறுப்பேற்றிருக்கும் மு..ஸ்டாலின் கூட தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் புத்தகங்கள் வாங்கிவரச் சொல்கிறார். சால்வைகளுக்கும் பரிசுப்பொருட்களுக்கும் பதில் நூல்களை வழங்கச் சொல்கிறார். இருவரும் திராவிட பாரம்பரியத்தில் வந்ததனால் எந்நூல்களை வாசிப்பது எனப்பரிந்துரைப்பதில் இலக்கிய அக்கறை இல்லாதவர்களாகத் தெரியலாம். ஆனால், இருவரும் வாசிப்பு அக்கறை உள்ளவர்கள் அல்லது அப்படி நான் உறுதியாக நம்புகிறேன். அவர்களின் அரசியலில் நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், இப்பண்பைப் போற்றியாக வேண்டும்.

இறுதியாகச் சொல்கிறேன். கருணாநிதி எழுத்தாளரா, இலக்கியவாதியா என்பதில் கருத்துமுரண்கள் இருக்கலாம். ஆனால், அவர் வாசிப்பை அதிகம் விரும்பியவர். அதில் சந்தேகமே வேண்டாம். அரசியல் களத்தில் செயல்பட்டதனால், அவரால் இலக்கியப்போக்குகளை உள்வாங்க இயலாமல் போயிருக்கும் என நினைக்கிறேன். இப்படிச் சொல்லலாம். கனிமொழி மனுஷ்யபுத்திரன் போன்றோர் இலக்கியக்களத்தில் இருந்து அரசியல்தளத்துக்கு நகர்ந்து இப்போதுஅரசியல்வாதிகளாகவேஆகிவிட்டனர். ஒருவேளை, கருணாநிதி அவர்களுக்கு நவீன இலக்கியம் குறித்த முறையான அறிமுகம் அவருக்குக் கிடைத்திருந்தால் ஒருவேளை அரசியல்தளத்தில் இருந்து நகர்ந்துநவீன இலக்கியக்களத்துக்குவந்திருக்கவும் கூடும்.

முருகவேலன்

கோபிசெட்டிபாளையம்.

முருகவேலன்

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைஇலங்கையும் பின்தொடரும் நிழலின் குரலும்
அடுத்த கட்டுரைபனிமனிதனும் குழந்தைகளும்