மு.க – கடிதங்கள்

மு.க -கூச்சல்களுக்கு அப்பால்
மு.க,தி.மு.க,இ.பா
விமர்சனங்களின் வழி

அன்புள்ள ஜெ,

இன்றைய உங்கள் கட்டுரையில் வந்த அதே விஷயத்தை நான் இன்று ஒரு திமுக நண்பரிடம் சொன்னேன். அவர் ஜெமோ என எங்கே பார்த்தாலும் அங்கே போய் புளிச்சமாவு என எழுதி கெக்கெக்கே என்று சிரிப்பாணியும் போடுவார். உடனே நாற்பதுபேர் வந்து அதை ஆமோதிப்பார்கள். அவர் என்னிடம் கலைஞர் இலக்கியவாதி இல்லை என்று சொல்வது வன்மம் என்றார். சரி, நீங்கள் செய்வது என்ன, ஜனநாயகப்பணியா என்றேன். ஆச்சரியம் என்னவென்றால் உண்மையிலேயே அவர் தாங்கள் செய்வது ஜனநாயக ரீதியான கருத்துப்பணி என்றும், தங்களைப் பற்றிய எல்லா விமர்சனங்களும் வன்மம் என்றும் நம்புகிறார். அதில் நடிப்பே இல்லை. அவருடைய உண்மையான உணர்ச்சி அது. கொஞ்சநேரம் பிரமித்துப் போய்விட்டேன். அவர் பாரதியையே பார்ப்பான் என வசைபாடுவார். ஆனால் அது நியாயமான விமர்சனம் என்று நினைக்கிறார். இது ஒரு வகையான சிந்தனைநோய். வளர்ச்சிகுன்றி நின்றுவிட்டவர்கள். இவர்களிடம் மூச்சை வீணடிக்கக் கூடாது என்று தெரிந்துகொண்டேன். அதன்பின் புன்னகைக்க பழகிக்கொண்டேன்.

இந்த விவாதங்கள் வழியாக நான் அடைந்த லாபம் என்பது இந்தப் புன்னகையை வந்தடைந்ததுதான்

ராஜன் முருகேஷ்

இனிய ஜெயம்

சமீபத்திய பதிவு ஒன்றில் வாழ்நாளெல்லாம் தன்னை எழுத்தாளர் என்று முன்வைத்தவர் திரு.மு.கருணாநிதி என்று துவங்கி நீங்கள் எழுதியவற்றுக்கு,

‘கலைஞர் எழுத்தாளர்தான் என்று ஜெயமோகன் ஒப்புக்கொள்ள, அவர் சாக வேண்டியது இருக்கிறது’

என்று மனுஷ் எழுதி இருந்தார். (வாசிக்கையில் எனக்கு இதயமே உருகி இடது கிட்னியில் படிந்து விட்டது) இந்த வரிகளில் உள்ள மறைமுக விமர்சனம் என்பது எப்போதும் உள்ளதுதான். தீவிர நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் திராவிட எழுத்தாளர்களின் எழுத்துக்களை ஏற்றுக்கொள்வது இல்லை என்பதே அது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர்கள் பெயர் வரிசையில் அராத்து பெயரும் இருக்கும் கலைஞர் பெயரும் இருக்கும். விடுபடல் எவ்வாறு நிகழும்? ஆனால் எது இலக்கியம்? என்ற வினா எழுகையில் (இந்த வினா எழாத உலக சூழல் ஏதும் உண்டா என்ன?) இயல்பாகவே ரசனை மதிப்பீட்டின் அடிப்படையில் அங்கே பிரமிட் ஒன்று உருவாகி விடும். ‘மாம்பழக் கவிராயரை’ எவரும் சதி செய்து இலக்கிய இருட்டடிப்பு செய்து புறக்கணித்து அங்கே கொண்டு அவருக்கு பதிலாக பாரதியை நிறுத்தவில்லை. சூழல் மதிப்பீடுகள் வழியே கலைகள் இயக்கம் கொள்ளும் வகை அது.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் பல அழகியல் ஓடைகளில் திராவிட இலக்கிய ஓடையும் ஒன்று. யதார்த்தவாதம் துவங்கி பின்நவீனம் வரை பல ஓடைகள் இன்னும் ஓடிக்கொண்டிருக்க திராவிட அழகியல் ஓடை ஆவியாகிப்போனது ஏன்?

பல காரணங்களில் முதலாவது அந்த ஓடையில் தமிழின் பிற அழகியல் ஒடைகளுடன் உரையாடி தன்னை செழுமை செய்து கொள்ளும் வகையில் வலிமையான விமர்சன மரபு எதுவும் உருவாகி வரவில்லை. அதன் காரணமாக அதற்குள் எந்த வண்ண பேதமும் இல்லாமல் போனது. உதாரணத்துக்கு பின்நவீன ஓடை என்று எடுத்துக்கொண்டால் சாரு ஒரு வகைமை, எம்ஜி சுரேஷ் ஒரு வகைமை, கோணங்கி ஒரு வகைமை, பா வெங்கடேசன் ஒரு வகைமை. இப்படி ஒவ்வொரு அழக்கியலிலும் நிகழ்ந்த ஒன்று திராவிட இலக்கியத்தில் நிகழ வில்லை. இவை போக இலக்கியக் கலை சென்று தொடும் மானுட ஆழுள்ளம் சார்ந்த வீச்சோ, சமூக இயக்க முறைமை சார்ந்த விரிவோ, எளிய அடிப்படை நுட்பங்களோ கூட இல்லாதவை திராவிட இலக்கிய எழுத்துக்கள்.

இதில் நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் செய்யும் இருட்டடிப்பு சதி வேலைகள் எங்கிருந்து வந்து?

இவை போக கடந்த 25 வருடத்தில் திராவிட இலக்கியத்தை கூட வேண்டாம் குறைந்தபட்சம் மு கருணாநிதி அவர்களின் இலக்கிய இடத்தை உறுதி செய்யும் வேலைகள் ஏதும் இவர்கள் முன்னெடுத்திருக்கிறார்களா என்று பார்த்தால், பதில் மௌனம். திராவிட அழகியல் ஓடையின் புனைவுகளில் ஒரு இலக்கிய வாசகன் தவற விடாமல் வாசிக்க வேண்டியது எனும் பரிந்துரையுடன் ஒரே ஒரு தொகுப்பாவது எங்கேனும் வெளியாகி இருக்கிறதா? குறைந்த பட்சம் மு க அவர்களின் பிறந்த நாள் நினைவு நாள் என எத்தனையோ தினங்கள் வருகிறதே எங்கேனும் அவரது இலக்கிய புனைவுகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு ஏதேனும் நடந்தது உண்டா?

மாறாக மிக சமீபத்தில் பழைய புத்தக கடை ஒன்றில், ஒரு வார இதழில் திராவிட இலக்கியம் பெண் எனும் அம்சத்தில் எந்த கோணத்தை மீண்டும் மீண்டும் எழுதி காட்டுகிறது, பெண்ணின் இந்த பரிமாணத்தில் திராவிட இலக்கியம் ஈடுபாடு கொள்வதன் பின்புலம் என்ன என்றொரு நல்ல கட்டுரை ஒன்று கண்டேன். தொடரின் பெயர் பெண். எழுதியவர் பெயர் ஜெயமோகன். ஆக திராவிட அழகியல் ஓடையின் ஆக்கபூர்வமான விஷயங்களை பேசக்கூட அந்த தரப்பில் எவரும் இன்றி, தீவிர தமிழ் எழுத்தாளன்தான் வரவேண்டி இருக்கிறது. இதுதான் நிலை. இதில் நவீன எழுத்தாளர்கள் திராவிட இலக்கியத்தை இருட்டடிப்பு செய்கிறார்கள் எனும் குமுறல் வேறு.

இவை போக இந்த விஷயத்தில் நகைச்சுவையானது எது என்றால் ” உடன் பிறப்புகளே ஜெயமோகனை நம்பாதீர்கள்” என்று முழங்குவதன் வழியே தான் ஏதோ திராவிட இலக்கியத்தில் உண்டு உறங்கி உயிர்திருப்பவர் போல உடன்பிறப்புகள் முன் மனுஷ் ஸீன் போடுகிறார் என்பதே. அவரை மனுஷ்ய புத்திரன் என்று ஆக்கியது நவீன இலக்கியத்தின் சுந்தர ராமசாமி முதல், வெகுமக்கள் எழுத்தாளரான சுஜாதா வரை தானே அன்றி, கலைஞரே வைரமுத்துவோ அல்ல.

இவ்வளவு ஏன்’மக்களை’ விழிப்புணரவு கொள்ளவைக்கும் சமூக அரசியல் கட்டுரை ஒன்றை,எல்லோரும் நிம்மதியாக இருக்கும் காலம் ஒன்று வரும் என்ற சுந்தர ராமசாமியின் சொற்றொடரை கொண்டே முடிக்க முடியுமே அன்றி, ” பகுத்தறிவு எனும் வெள்ளி முளைத்து, சாதி மதப் பித்து எனும் சனி தொலைந்தால்தான், சமத்துவம் என்னும் ஞாயிரு பிறக்கும்” என்ற மு க அவர்களின் சொற்றொடரை கொண்டு முடிக்க முடியாது என்பதை மனுஷ்ய புத்திரன் நன்கு அறிவார்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைவிமர்சனங்களின் வழி
அடுத்த கட்டுரைநம் இனவெறி -கடிதம்