மு.க, தி.மு.க – இ.பா

மு.க -கூச்சல்களுக்கு அப்பால்

க.நா.சுப்ரமணியம்

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் வலைத்தளத்தில் வெளியான “அந்த இருபதாயிரம் நூல்கள்” பதிவு தொடர்பாக மனுஷ்யபுத்திரன் நேற்று எழுதிய முகநூல் குறிப்பைப் படித்தீர்களா?

கட்டுரையில் கலைஞர் பற்றி  நீங்கள் குறிப்பிட்ட (அதுவும் சாதகமாகக் குறிப்பிட்ட) பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, திமுக ஆதரவாளர்கள் இவரைக் கொஞ்சம் ‘கவனிக்க’ வேண்டும் என்ற தொனியில் உசுப்பேற்றி எழுதியிருக்கிறார்:  “கலைஞர் ஒரு எழுத்தாளனே அல்ல என்று சொல்லி ஜெயமோகன் புழுதியைக்கிளப்பிய காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கலைஞர் தன்னை ஒரு எழுத்தாளர் என்று ஜெயமோகனிடம் நிரூபிக்க அவர் சாகவேண்டியிருக்கிறது. உடன் பிறப்புகள் கண்ணில் இந்தப் பாராட்டுரை பட்டுவிடக்கூடாது என மிகவும் கவலையாக உள்ளது. ”

கட்டுரையின் போக்கில் சொன்ன ஒன்றை இப்படி வன்மமாக எழுதுகிறாரே மனுஷ்யபுத்திரன் – இலக்கியம் தொடர்பாக எப்போதும் மாறாத கறாரான பார்வையைக் கொண்டவர்தானா இவர் என்று யோசித்துப் பார்த்தேன்.

‘போலியான குரல் பாவனைகளாலும் நடிப்புத் திறனாலும் பாரதி போல மகாகவியாகி விடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் வைரமுத்து’ என்று ‘எப்போதும் வாழும் கோடை’ நூலில் கடிந்தெழுதிய அதே மனுஷ்யபுத்திரன், பின்னதாக முக நூலில் ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதும் ‘மிஸ் யூ’வை வைரமுத்து பாராட்டினார் என்று புளகித்து ஃபோட்டோ பகிர்ந்ததும் நினைவுக்கு வந்து புன்னகையை வரவழைத்துப் போனது.

அதே கட்டுரையில் ‘கரம், சிரம் புறம் நீட்டாதீர்’ என்று பொதுப்போக்குவரத்து வண்டிகளில் பொறிக்கப்படும் அடுக்குமொழி வசனங்களை – கலைஞர் முதலான திராவிட மரபின் தமிழ் எழுத்தாளர்கள் கொண்டாடிப் பேணிய அடுக்குமொழி நடையைக் – கேலி செய்து எழுதிய அதே மனுஷ்யபுத்திரன் தான் இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளராகியிருக்கிறார்.

இந்தக் கால மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனது பிரச்சனை அதுவல்ல. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துகளை முதல்வர் ஸ்டாலின் கரிசனையோடு கவனிக்கிறார்; ஜனநாயகப் பண்புக்கு முக்கியத்துவம் தருகிறார் என்ற விதமான பிம்பம் ஒருபுறம் கட்டி எழுப்பப்படுகிறது.

மறுபுறம் மனுஷ்யபுத்திரன், கிசுகிசு எழுத்தாளர் யுவகிருஷ்ணா போன்றவர்கள் திமுக அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் சிறியதொரு விமர்சனத்தையும் தாங்க மாட்டாமல், “உடன்பிறப்புகளே, இவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்” என்று வெளிப்படையாகவே ஆதரவாளர்களை முகநூலில் தூண்டி விடுகிறார்கள். தலைமை கண்டும் காணாதது போல் இருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

அன்புடன்

வே.அன்பரசு

இனிய ஜெயம்

சமீபத்தில் மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தமிழக அரசு அறிவித்திருந்த பட்ஜட் வகைமை குறித்து பாராட்டு தெரிவித்திருந்தார். பதிலுக்கு தமிழக முதல்வரும் தன்னுடைய மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வுக்கு வந்த எதிர்வினைகளில் இரண்டு மும்கியமானது. ஒன்று தி மு க. கொ ப . எழுத்தாளர் மனுஷ்யபுத்ரனுடையது. அடுத்து தமிழக பி ஜெ பி கொ ப எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களுடையது.

இரண்டிலும் உள்ள ஒற்றுமை, தங்களது கட்சிக்காரர்களுக்கு தந்த எச்சரிக்கையான இ.பா வை நம்பாதீர்கள் என்பது. மனுஷ் கவிஞர் இல்லையா அதனால் அப்பதிவு குருதியும் தண்ணீரும் வேறு வேறு எனும் பன்ச் குத்துடன் முடிகிறது.  மனுஷ் தரப்பை எடுத்துக்கொண்டால், அவரால் வாழ்வில் என்றுமே புரிந்துக்கொள்ள முடியாத ஒன்று இது. இ.பா அரசைப் பாராட்டவில்லை. அவர் வழங்கியது ஒரு ஆசி. சரஸ்வதியின் பார்வை தமிழக முதல்வர் மேல் விழுந்திருக்கிறது. அதை தமிழக முதல்வரும் அவ்வாறே உணர்திருக்கிறார். அவரது நன்றி நவிலல் அந்த மாண்புக்கு சான்று. இத்தகு விஷயங்கள் புரியாவிட்டால் மனுஷ் அமைதியாக இருந்து விடுவதே சிறப்பு. எதற்காக பதற்றம்? நிச்சயம் தமிழக முதல்வர் இதன் பொருட்டெல்லாம் மனுஷ்க்கு தர முடிவு செய்திருக்கும் பதவியை இ.பா வுக்கு தந்து விடப் போவதில்லை. இவை போக குருதியில் உள்ள தண்ணீரை பிரித்து இரண்டையும் வேறு வேறு என்றாக்கிவிட்டால் மனிதனால் உயிர் வாழ முடியாது என்பது மற்றொரு யதார்த்தம்.

அநீ தரப்பை எடுத்துக்கொண்டால் இந்தப் பின்புலத்தில் கடவுள் இறந்துவிட்டார் என்று நீட்ஷே பிரகடனம் செய்தது போல, வெ சா வுக்குப் பிறகு நேர்மை செத்துவிட்டது என்று பிரகடனம் செய்திருக்கிறார். ஒரு ரசிகன் கலையிலக்கிய விமர்சகராக எவரையும் ஏற்றுக் கொள்ள அவருடைய தனிப்பட்ட நேர்மை ஒரு அளவுகோல் எல்லாம் இல்லை. கலையிலக்கியம் குறித்த அவரது கூர் நோக்கு மட்டுமே அங்கே செல்லுபடி ஆகும். அந்த வகையில் வெ சா வுக்கு கலை இலக்கியத்தில் உள்ள இடம் ஐயத்துக்கு உரியது. காலமெல்லாம் அசோகமித்திரன் படைப்புகளை விமர்சித்துக்கொண்டே இருந்தார். ஏன் என்று யாருக்கும் தெரியாது. அவரது இறுதிக் காலத்தில் இலக்கியத்துக்கு தொடர்பே இல்லாத கமலதேவியோ யாரோ அவர்களை எல்லாம் மிகையாகப் பாராட்டிக் கொண்டிருந்தார்.அதுவும் ஏன் என்று யாருக்கும் தெரியாது.

விமர்சனக் கலையில் க நா சு உருவாக்கிய தாக்கம் இன்றும் தொடர்வது. அவர் பேசிப் பேசி முன்னெடுத்த பரிந்துரைத்த இந்திய- உலக படைப்புகள்தான் இன்றும் இலக்கியத்தில் நிலை ஆற்றல். ராஜ மார்த்தாண்டன் அவர்களை எடுத்துக்கொண்டால் அவர் தொகுத்த கொங்கு தேர் வாழ்க்கை தொகையை சொல்லலாம். இப்படி பலர் உருவாக்கிய பாதையில் வெ.சா அப்படி என்ன செய்து விட்டார்? அவரது ‘வாழ்நாள்’ பணி கலை இலக்கியத்தில் நிகழ்த்திய தாக்கம் என்ன?

அநீக்கு புரிந்த ஓட்டைக் காலணா காழ்ப்பரசியலின்படி இப்போது தி மு க வை பாராட்டி விட்டதால் இ பா நேர்மையற்றவர். நாளை பிஜேபியை இ பா பாராட்ட நேர்ந்தால் அப்போது அவர் அநீகு பச்சோந்தி, சந்தர்ப்பவாதியாகி இருப்பார்.

இரண்டு தரப்பாருமே அறிந்து கொள்ளாத உண்மை ஒன்று உண்டு. கட்சிக்குள் இருப்பவர் எழுத்தாளரே என்றாலும் முதலில் அவர் கட்சிக்காரர் மட்டுமே. அவரது குரலின் எல்லை மிக மிக குறுகியது. கட்சிக்கும் உள்ளும் புறமும் தாண்டி சமூக ஆழுள்ளம் தொட்டு அதிகார பீடம் வரை கருத்தியல் தாக்கம் செலுத்தும் திராணி ‘அராஜக’ எழுத்தாளர்களுக்கு மட்டுமே உண்டு. அவர்களுடையது மட்டுமே ‘வெல்லும் சொல்’. இது நேற்றல்ல இன்றல்ல நாளையல்ல, ‘என்றும்’ இது இவ்வாறே இருக்கும்.

கடலூர் சீனு

இளவேனில்

அன்புள்ள அன்பரசு, சீனு,

இன்று விசித்திரமான ஒரு சூழல் அமைந்துள்ளது. சமூகவலைத் தளங்களில் சுழன்றவர்கள் சிலர் அரசின் பகுதிகளாக உள்ளனர். சமூகவலைத்தளங்களில் சத்தம் போட்டே சிலர் அறிஞர்கள் என்றாகி அதிகாரத்தை நெருங்கியும் விட்டனர். ஆகவே அத்தனை சமூகவலையர்களுக்கும் நப்பாசைகள் பெருகிவிட்டன. எங்கோ எவரோ தங்களைக் கவனிக்கிறார்கள், ஏதோ பெரும்பரிசு எக்கணமும் தங்களை தேடிவரப்போகிறது என்னும் மீளாப் பதற்றத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார்கள். அது வரும் வழியில் நின்றுவிடுமா, வேறுபக்கம் திரும்பிவிடுமா என தூக்கமிழக்கிறார்கள். உண்மையில் ஏதாவது இவர்களுக்கு கிடைக்காமலும் இருக்காது. ஏனென்றால் நானறிந்தவரை இந்த அரசு ஆதரவாளர் அத்தனை பேருக்கும் ஏதாவது கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் வேடிக்கைகள் பல. சென்ற சில ஆண்டுகளில் சமூகவலைத்தளத்தில் திமுகவுக்கு ஆதரவாக ஒரு சில கட்டுரைகள் எழுதிய ஒரு சாதாரணமான எழுத்தாளர் திமுக அரசு அவருக்கு மிக முக்கியமான பதவி ஒன்றை அளிக்கக் காத்திருப்பதாகச் சொன்னதை என் நண்பர் சொன்னார். என்னிடம் ஓர் இளம் எழுத்தாளர் அப்படிச் சொன்னார். ‘நல்வாழ்த்துக்கள்’ என்று சொன்னேன், வேறென்ன சொல்ல? இந்த மிகையெதிர்பார்ப்புகளை திமுக என்றல்ல, எந்த அரசும் நிறைவேற்ற முடியாது.

இந்திரா பார்த்தசாரதியின் பாராட்டு பற்றிச் சொன்னீர்கள். இரண்டுவகையினர் இன்று திமுகவை பாராட்டுகிறார்கள். முதல் வகையினருக்கு மனுஷ்யபுத்திரன் உதாரணம்,

மனுஷ்யபுத்திரனின் உருவாக்கத்தில், புகழில் திராவிட இயக்கத்துக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. அவர் சுஜாதாவால் கண்டெடுக்கப்பட்டவர், சுந்தர ராமசாமியால் உருவாக்கப்பட்டவர். சுஜாதாவின் உதவியால் ஊடகவியலாளர் ஆனவர். திராவிட இயக்கம் முன்வைத்த அழகியலை, அரசியலை விமர்சனம் செய்து கவனம் பெற்றவர். திராவிட இயக்கத்திற்கு நேர் எதிரான அழகியலுடன் எழுதி கவிஞர் என அடையாளம் அடைந்தவர். இவ்வண்ணம் சேகரித்த ஒரு தகுதியை உரிய விலைகூவி திமுகவுக்கு விற்பவர்.

அப்படி விற்றவர்கள் பலர் முன்பும் உண்டு. அவர்கள் அன்றெல்லாம் இடதுசாரிக் கட்சிகளில் இருந்து திமுகவுக்குச் செல்வார்கள். இளவேனில், க.சுப்பு போல பல உதாரணங்கள். இடதுசாரிக்கட்சிகளில் அவர்களுக்கு ஓர் அடிப்படை சித்தாந்தப் பயிற்சி, தர்க்கப்பயிற்சி, எழுத்தாளர் கவிஞர் என்றெல்லாம் பரவலான அடையாளம் ஆகியவை கிடைக்கும். அதை திரட்டிக்கொண்டு திமுகவுக்குச் சென்றால் திமுகவில் நேரடியாகவே மேலே சென்று அமரமுடியும்.

உண்மையில் அது மு.கருணாநிதி அவர்களுக்கு எழுத்தாளர்கள் மேல் இருந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொள்வதுதான். இவர்கள் ஒரே ஆண்டில் முகவின் அருகே சென்று அமர்வார்கள். திமுகவில் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் படிப்படியாக அந்த இடத்துக்கு வருவது மிகமிகக் கடினம். வட்டச்செயலாளரின் அடிப்பொடியாக இருந்து பம்மிப்பம்மி மேலெழவேண்டும். அதற்கு பற்பல ஆண்டுகளாகும். பல தடைகள் உண்டு.இந்தக்குறுக்குவழி ஏணி மிக உதவிகரமானது. அறிவுஜீவி பிம்பம் இருப்பதால் பொறாமையும் பொதுவாக உருவாகாது.இவர்கள் தனித்தகுதி கொண்டவர்கள், பெரியவரின் நேரடிப்பழக்கம் கொண்டவர்கள் என்று மற்றவர்கள் எண்ணுவார்கள். இது ஒரு ஹெலிகாப்டர் மலையேற்றம்.

ஆனால் ஓர் இடர் உண்டு. இவர்கள் முன்பு இருந்த இடம் மேலிடத்துக்கு நன்றாகவே தெரியும். இடதுசாரிக் களமோ, நவீன இலக்கியக் களமோ கூரிய விமர்சனம் கொண்டது. இவர்கள் அந்த விமர்சனத்தை உள்ளூர மறைத்துவிட்டு சுயநலத்துக்காக நடிக்கிறார்கள் என்றும் தெரியும். அத்தனை ஆண்டுகள் சொல்லிவந்ததை, அத்தனை ஆழமாக வேரூன்றி வளர்ந்த களத்தை அரைக்கணத்தில் தூக்கிவிசிவிட முடியாதென்றும் தெரியும். ஆகவே இவர்கள் மேல் மேலிடத்துக்கு ஐயம் இருந்துகொண்டே இருக்கும். ஆகவே இவர்கள் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும். கேள்விக்கு அப்பாற்பட்ட விசுவாசத்தை நிரூபிக்கவேண்டும். துரைமுருகனுக்கு இருக்கும் விமர்சன உரிமை க.சுப்புவுக்கு அளிக்க்கப்படாது.

இடதுதரப்பு அல்லது நவீன இலக்கியத்தரப்பில் தேற்றிய அடையாளத்தை கொண்டு வந்து திமுகவில் விற்பவர் மேலிடத்தின் முன் தன் நெஞ்சை திறந்து வைத்து அக்கால சினிமாவின் பத்தினிக் கதாபாத்திரங்கள் போல ’’என்னை நம்புங்கள் அத்தான் நம்புங்கள்!” என கதறிக்கொண்டே இருக்கவேண்டும். தன் முந்தைய களத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும். அங்கிருந்தபோது சொன்ன ஒவ்வொரு சொல்லையும் திரும்ப அள்ளி விழுங்கவேண்டும். கற்பித்த ஆசிரியர்களை, ஏற்றிவிட்டவர்களை நெஞ்சிலேயே எட்டி உதைக்கவேண்டும். அணுக்கமாக இருந்த நண்பர்களை வசைபாடவேண்டும். ஒரு துளி மிச்சம்வைக்கக்கூடாது. அதை திரும்பத் திரும்பச் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

மு.கவிடம் இருந்த சிக்கல் என்னவென்றால் அவர் இரண்டு மனிதர். அரசியல் ரீதியாக இவர்களை அவர் பயன்படுத்திக் கொள்வார் , அவருக்குள் இருக்கும் எழுத்தாளர் இவர்களை அருவருப்பார். அதிகாரத்தின் துளிக்காக தன்னிடம் வந்து தன் கடந்தகாலத்தை, தன் ஆசிரியர்களை நிந்திப்பவனின் தரம் என்ன என அவர் உணர்ந்தே இருப்பார். ஆகவே அவர்களை அவர் முழுக்க ஏற்பதே இல்லை. ஐயத்துடன் இருப்பார், அளவோடு வைத்திருப்பார். இளவேனில், க.சுப்பு என அங்கே சென்ற அத்தனைபேரின் பட்டியலையும் பாருங்கள். அவர்கள் என்ன ஆனார்கள்? (இன்றைய கட்சியில் மு.க.இல்லை என்பது இவர்களுக்குச் சாதகமான விஷயம்)

ஒரு நிகழ்வு. இளவேனில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்து திமுகவுக்குச் சென்றபின் முற்போக்கு எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக மிகமிகக் கீழ்மைப்படுத்தி பேசினார். முக இருந்த ஒரு மேடையில் அவ்வாறு பேசியபோது மு.க. கசப்பான சிரிப்புடன் சு.சமுத்திரத்திடம்  ‘நல்லா பேசுறார்’ என்றார். சு.சமுத்திரம் ‘இப்டி பேசக்கூடாது, நான் இதுக்குப் பதில் சொல்லப்போறேன்’ என்றார். ’சொல்லு, நான் பேசினாலே நீ பதில் சொல்லுவே. உனக்கு எந்த லாபக்கணக்கும் இல்லை’ என்றாராம்.இதை என்னிடம் சொன்ன சு.சமுத்திரம் ‘அவருக்கு எல்லாம் தெரியும். அதனாலே நான் ஒண்ணுமே கேட்டதில்லை. ஒண்ணுமே ஏற்றுக்கிட்டதில்லை’ என்றார்.

சு.சமுத்திரம்

மத்திய செய்தி ஒலிபரப்புத்துறையில் பணியாற்றிய சமுத்திரம் ஒரு குளறுபடியால் தூக்கியடிக்கப்பட்டார். வேலைமாறுதல் நடந்து எட்டு மாதம் கழித்து மு.க வை சு.சமுத்திரம் சந்தித்தார்.மாறுதலை அப்போதுதான் மு.க அறிந்தார். அதுவும் அவரே ’என்ன இப்பல்லாம் டிவியிலே பேர காணும்?’ என கேட்டபின் இவர் சொன்னபோது. ‘என்னய்யா சொல்ல மாட்டியா?” என்று மு.க சீறியபோது ‘சொல்லமாட்டேன் தலைவரே.எங்கபோனாலும் சம்பளம் குறையாதுல்ல, அப்றமென்ன?’ என்றார் சு.சமுத்திரம்.

சமுத்திரத்திற்கு மு.கவின் உள்ளத்தில் இருந்த இடம் குறையவே இல்லை. அத்தனை நெருக்கமாக இருந்தும் அவர் மு.கவுக்கு போற்றிப் பாட்டு பாடவில்லை. தொழுதுண்டு பின் செல்லவுமில்லை. ஆகவே அவர் எழுத்தாளனின் கம்பீரத்துடன் இருந்தார். மாறாக, தன் எதிர்பார்ப்புகள் பொய்த்தபோது இளவேனில் அதே வாயால் மு.க வை பின்னர் வசைபாடினார். ‘என்னை நன்றாய் கலைஞர் படைத்தார், தன்னை நன்றாய் தமிழ்செய்யுமாறே’ என மேஜைமேல் எழுதி வைத்திருந்த தமிழ்க்குடிமகன் சிறு ஏமாற்றம் வந்தபோது கட்சிமாறி மு.க வை வசைபாடினார். அரசியலதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதெல்லாமே தெரியும்.

சு.சமுத்திரம் கட்சிக்காரர் அல்ல, எழுத்தாளர். அப்படியே நிலைகொண்டமையால்தான் மு.க அவரை மதித்தார். அதுதான் நான் சொல்லவரும் அடுத்தநிலை. சு.சமுத்திரத்தை மனுஷ்யபுத்திரன் போன்றவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. எழுத்தாளர்கள் சொல்லும் எல்லா கருத்தும் தான் சொல்வதுபோல வணிகக்கணக்கு கொண்டது என்றும், தான் முண்டியடிப்பவற்றுக்காக தன்னுடன் போட்டிக்கு வருவது என்றும்தான் அவருக்கு தோன்றும்.

இந்திரா பார்த்தசாரதி எழுத்தாளர் என்னும் நிலையில் தன் கருத்தைச் சொல்கிறார். இன்று அவர் மிகமிக முதியவர், நூறாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார். உடல்நிலையும் மோசமாக இருக்கிறது. எவரிடமும் எதையும் எதிர்பார்க்கும் நிலையில் அவர் இல்லை. சொல்லப்போனால் எல்லாமே அவருக்கு அர்த்தமற்ற வேடிக்கையாகத் தோன்றுகிறது என்பதை அவருடன் பேசும்போதெல்லாம் உணர்கிறேன். கடந்த காலங்களில் அவருடைய எழுத்துக்களை கவனித்தவர்கள் அவர் எப்போதும் சுதந்திரமாக கருத்து சொல்பவராகவே இருந்தார் என்பதைக் காணலாம். அவர் எதற்கும் விசுவாசி அல்ல. தன்னிச்சையாக தனக்குத் தோன்றுவதைச் சொல்பவர்.

இந்திரா பார்த்தசாரதி இன்றைய இந்தியாவில் உருவெடுக்கும் இந்துத்துவ மதவெறி பற்றிய மெய்யான பதற்றம் கொண்டிருக்கிறார். ஓர் பேரழிவு நோக்கிச் செல்கிறோமா என அஞ்சுகிறார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் மாணவராக கலந்துகொண்டவர். ஆகஸ்ட் 15ல் தேசியக்கொடி ஏறுவதை பெரும்பரவசத்துடன் கண்டவர். அவருடைய அந்தப்பதற்றத்தை எந்த நுண்ணுணர்வாளனும் புரிந்துகொள்ள முடியும்.

எந்த அரசுக்கும், எந்த அரசியல்வாதிக்கும் இந்திரா பார்த்தசாரதியின் கருத்தே முக்கியமானது. ஏனென்றால் அவருக்கு எந்த நோக்கமும் இல்லை, எந்தக் கணக்கும் இல்லை. அவரைப்போன்றவர்கள் வழியாகவே மெய்யான சமூக எதிர்வினை என்ன என்று அரசு அறிந்துகொள்ள முடியும்.

உதாரணமாக கட்சி ஆதரவாளர் அல்லாத ஒருவர், எதிர்மனநிலை கொண்ட ஒருவர், நேர்மையாக ஒரு திட்டத்தை பாராட்டுகிறார் எனில் என்ன பொருள்? அத்திட்டம் மறுக்கமுடியாதபடி முக்கியமானது, ஏற்புக்குரியது என்றுதான். ஓர் அமைப்புசார்ந்த மனிதரின் எண்ணத்தை விட தனிமனிதனின் எதிர்வினையே முக்கியமானது. எந்த அரசும் அந்த எதிர்வினையையே முதன்மையானதாக கருதும். எந்த கட்சிக்கும் அக்கட்சியின் மேடைப்பேச்சாளர்கள் மேடையில் பேசும் பேச்சுக்கள் முக்கியமல்ல. எந்த வணிகனும் தன் விளம்பரத்தை தானே நம்ப மாட்டான்.

இன்று பட்ஜெட்டை பாராட்டும் இந்திரா பார்த்தசாரதி நாளை அவருக்கு ஏற்பில்லாத ஒன்றை இந்த அரசு செய்தால் கண்டிப்பார். இன்று அவர் ஏதோ லாபம் கருதி வருவதாக நினைக்கும் கும்பல் உடனே அவரை துரோகி என வசைபாடும். அதற்கு மறுநாள் அவர் மீண்டும் வேறொன்றை பாராட்டும்போது பல்டியடிக்கிறார் என்று அவமதிக்கும். எழுத்தாளன் சாமானியனின், பொதுமக்களின் குரல். அவன் கட்சிக்காரன் அல்ல. அவனுக்கு மாறாத தரப்பு ஏதுமில்லை. எதையும் சுமக்கவேண்டிய பொறுப்பு இல்லை. தான் எண்ணுவதை அவன் சொல்கிறான். அந்தச் சொற்களே முக்கியமானவை.

வெள்ளநிவாரணப் பணிகள், அதற்குப் பிந்தைய பொருளியல் மீட்புப்பணிகளுக்காக நான் பிணராயி விஜயனை பாராட்டினேன். இன்றும் இந்திய அரசில் ஒரு சாதனைதான் அது. ஐயமிருப்பவர் பெருவெள்ளங்களில் கேரளம் எப்படி இருந்தது என்னும் படங்களைப் பாருங்கள், இன்று ஒரு சுற்று கேரளத்தில் பயணம் செய்து பாருங்கள். என் கருத்து நாளிதழ்களின் முதல்பக்கத்தில் வந்தது. என் பாராட்டின் பொருள் நான் இடதுசாரி என்பதல்ல. உடனே அவரைச் சென்று பார்த்து எதையும் கோரப்போவதுமில்லை. நாளை இன்னொரு விஷயத்துக்காக அதே பிணராயி விஜயன் அரசை கண்டிக்கவேண்டும் என்றால் எனக்கு அதற்கான சுதந்திரம் வேண்டும். நான் அதையே கருத்தில் கொள்வேன்.

அக்கருத்தை நான் சொன்னதனால் நான் இடதுசாரி அரசின் அடிப்பொடி என அங்கே எவரும் சொல்லவில்லை. காங்கிரஸ் நண்பர்களும் சொல்லவில்லை, இடதுசாரிகளும் கடிக்க வரவில்லை. அது ஓர் எழுத்தாளனின் ஒரு கருத்து, அதற்கு ஒரு பிரதிநிதித்துவ முக்கியத்துவம் உண்டு, அவ்வளவுதான். அங்கே எழுத்தாளனின் கருத்து எப்போதுமே முதன்மையானது.

திமுக அரசுக்கு அல்லது திமுக கட்சிக்கு எந்தவகையிலும் நான் ‘ஆதரவாளன்’ அல்ல. ஒருநாளும் அவர்களின் ஒரு மேடையிலும் தோன்றப் போவதுமில்லை. ஒருநாளும் அவர்களின் அரசிடமிருந்து ஒன்றையும் பெற்றுக் கொள்ளப் போவதுமில்லை. ஆனால் சென்ற  ஓராண்டில் சாத்தியமான சிறந்த ஆட்சியே நிகழ்கிறது என்றே கருதுகிறேன். இதைச்சொல்ல எனக்கு எந்தச் சார்பும் தடையாக இருக்கலாகாது என்பதே என் எண்ணம், அதுவே எழுத்தாளனின் சுதந்திரம்.

இதை நான் சொன்னதும் உடனே இங்குள்ள மாற்றுக்கட்சி கும்பல் விலைபோய்விட்டார் என்று என்னை இழிவு செய்யும். திமுக கும்பல் அவர்களிடம் கையேந்த வருகிறான் என்று கூவும். ஆனால் இதைச் சொல்வதென்பது தேவையானபோது விமர்சனங்களைச் சொல்வதற்கான உரிமையை ஈட்டிக்கொள்வதுதான்.

திமுக மேல் வரும் ஒவ்வொரு நல்ல கருத்துக்கும் பாய்ந்து கடித்து குதறவரும் இந்த சில்லறைக் கும்பலை திமுக தலைமை கவனிக்கிறதா? முதல்வரே நன்றி சொன்ன ஒரு மூத்த படைப்பாளியை இழிவு செய்யும் இவர்களை முதல்வர் கவனம் வரை எவரேனும் கொண்டுசெல்கிறார்களா?

முந்தைய கட்டுரைஒரு கூரிய வாள்-கடிதம்
அடுத்த கட்டுரைஇலங்கையும் பின்தொடரும் நிழலின் குரலும்